Published : 12 Mar 2017 11:40 AM
Last Updated : 12 Mar 2017 11:40 AM

எள்ளுப் பூக்களின் மேலே ஆலா பறவைகள் பறக்கின்றன

எனக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். என் மாமனும் பால்ய நண்பனுமான முத்தண்ணன்தான் புல்லாங்குழல் வாசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தார். மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள் பக்கத்திலிருக்கும் வெள்ளாமை நிலத்தை நோக்கி நகரும்போது, குழல் வாசித்தே அவற்றை மேய்ச்சல் நிலத்தை நோக்கி திசைதிருப்பிவிடும் மகத்தான இசைஞன் அவர்! இந்த அற்புதத்தில் லயித்துப்போய் புல்லாங்குழல் மீதான பிரியம் என் பிஞ்சுப் பருவத்தை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. அவரோடு சேர்ந்து மேய்ச்சல் நிலங்களில், காடுகரைகளில் குழலோடு அலைந்திருக்கிறேன். ஆனால், இசை பற்றி எதுவும் தெரியாது. குழலின் துளைகளின் வழி பரவும் காற்று, என் உடலைத் துளைக்கும் ஆனந்த நிலையே என் இசை ரசனை. நானும், என் புல்லாங்குழலும், மேய்ச்சல் நிலங்களுமாக இருந்த என்னை இசையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் இலக்கிய ஆர்வலரான கோபிசெட்டிபாளையம் ஸ்ரீராம். என் இசை ஆர்வத்தை உணர்ந்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு இசை ஒலிநாடாவைத் தந்தார். ஒலிநாடாக்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. அந்தக் கால கட்டத்தில், ‘இந்தியா டுடே’இதழ் இசைத் தொகுப்புகளில் கவனம் செலுத்தி, பல இசை ஒலிநாடாக்களை வெளியிட்டுவந்தது. அதில் ஒன்றான ‘ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் புல்லாங்குழல்’ இசை ஆல்பத்தை அவர் எனக்குத் தந்தார்.

அதைக் கேட்டுப் பித்துப் பிடித்தவன் போலானேன். ஒரு குழலிசை இப்படி யெல்லாம் நம் உயிரை வருடிவிடுமா? அவர் வீட்டுக்கு மீண்டும் ஓடினேன். மேலும் சில ஒலிநாடாக்களைப் பெற்று வந்தேன். முழுமையாக இசையில் மூழ்கினேன்.

அதிகரித்த இசையார்வம்

இந்தியா டுடே வெளியிட்ட நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் நிலை கொண்ட எல்லா இசைத் தொகுப்புகளையும் வாங்கி னேன். அடுத்து வெளியிட்ட, கடல், மலை, ஆறு, பாலை, பள்ளத்தாக்கு என்ற இயற்கை நிலை கொண்ட தொகுப்புகள் என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்கினேன். மலைகள் தொகுப்பில் ஒலிக்கும் ஷிவ் குமார் சர்மாவின் ‘சந்தூர்’என்னை எல்லையற்ற வசீகரத்துடன் விழுங்கியது. இந்தக் கட்டத்தில் என் இசை பற்றிய ஆர்வத்தை மேலும் மேலும் நகர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர்கள் அருள் சின்னப் பனும் ஆறுமுகமும்.

மார்கழி மாத இசைப் பருவத்தில் ஈரோடு பள்ளிப்பாளையம் ஆண்டாள் திருப்பாவை குழுவினரால் நடத்தப்படும் இசைவிழாவுக்கு அழைத்துப் போவார் அருள். அந்தத் திறந்த கர்னாடக இசை வெளி, எனக்குச் சிறகைத் தந்தது.

இசை பற்றிய எனது பார்வைக்கு எதிராகப் பேசி விவாதித்துக்கொண்டே யிருப்பார் அருள். “அவர்கள் நுழைவு வாயில்கள்தான். நீ முழுமையடைய வேண்டுமெனில் இன்னும் சில படிகள் தாண்ட வேண்டும்” என்பார். அருளின் பேச்சே ஜென் கவிதை போலிருக்கும். மாலி, ரமணி, எல்.சுப்ரமணியம், ரவிசங்கர், பீம்சேன் ஜோஷி, பிஸ்மில்லா கான், உஸ்தாத் அம்ஜத் அலிகான், மகாராஜபுரம் சந்தானம், கங்குபாய் ஹங்கள் என்று ஒவ்வொரு முறையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருப்பார் ஆறுமுகம். எனக்கு வாய்ப்பாட்டை விடவும் வாத்திய இசையே பிடித்தமானது. அந்த இசை வாசிப்பின் அலாதியான தருணங்களை ஷேக் சின்னமௌலானாவின் தனியான நாகஸ்வரமும் ஜெய்சங்கரின் நாகஸ்வரத் தோடு இழையும் வலையப்பட்டியின் தவிலும் தீர்மானிக்கும்.

மதுரை சேதுராமன் - பொன்னுச்சாமி சகோதரர்களின் நாகஸ்வரத்தில், ஹரித் வாரமங்களம் பழனிவேலும், திருவாழப் புத்தூர் கலியமூர்த்தியும் தவுல்களில் இழையும்போது ஏற்படுகிற அலாதியான தருணங்களைச் சொற்களில் தருவது கடினம்.

வீட்டுப் பணிகளில் இசை

எங்கள் ராஜ்கண்ணக்கா உரல் இடிக்கும் வேலையே அற்புதமான இசையாக மலரும். கம்புப் பணியாரம் செய்வதற்காகக் கம்பு மாவு இடிக்கும் போது ஒரே சீரான லயத்தில் உலக்கை உரலில் இறங்கும். தனி ஆவர்த்தனமும் செய்வார். கூடவே இன்னொருவரை இணைத்துக்கொள்வார். இந்த இணையரை ‘எசக்கை’என்பார்கள். இவருக்கு ‘எசக்கை’யாக நல்லம்மக்கா சேர்ந்துகொண்டால், சங்கீத விழாதான். உரலில் இருவரும் மாற்றி மாற்றி உலக்கையைப் போடும் அழகில் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து உச்ச ஸ்தாயிக்கு நகரும்போது கம்பு மாவு பிரிபிரியாக உதிர்ந்திருக்கும். கம்பு மாவுக்குத் தனி ஆவர்த்தனம், எள்ளு மாவுக்குத் தனி ஆவர்த்தனம் என்று ஒவ்வொரு தானியங்களுக்கும் தாளகதியை நிர்ணயித்து வைத்திருப்பார் ராஜ்கண்ணக்கா.

செம்பையாவின் பறை ஜதியும், பிஸ்மில்லா கானின் ஷெனாயும், ரங்கசாமியின் உறுமி வரிச்சலும், ஜாகிர் உசேனின் மத்தளமும், ராஜ்க ண்ணக்காவின் உரல் இடிப்பும் என் உடலெங்கும் கலந்து குருதி ஓட்டத்தில் இணையும்போது பைத்தியம் பிடிக்காமல் நான் தப்பித்துக்கொள்ளவோ அதன் உணர்வோட்டம் காரணமாகவோ புத்தகங்களை நோக்கி ஓடுவேன். ஆனால், அங்கும் ஒரு இசைத் துணுக்கு என்னை வரவேற்கும். ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளை’ வாசித்துக்கொண்டிருந்தபோது, அதில் குறிப்பிடப்பட்ட ஒரு இசைத் துணுக்கைத் தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்தேன். அந்தத் தேடலால் எனக்கு கவ்வாலி போன்ற சூஃபி இசையை அறிமுகமானது; அறிமுகப்படுத்தினார் பெரியவர் பஷீர் பாய். அதன் தொடர்ச்சியில் கவிஞர் பிரமிள் சூஃபி இசையில் நெகிழும் கவித்துவத்தை ஆழப்படுத்தினார்.

எங்கள் தோட்டத்தில் அந்த வருடம் எள்ளு விதைத்திருந்தோம். நீர் பாய்ச்சுவதற்காகக் காலையில் தோட் டத்துக்கு வந்து கிணற்று பம்புசெட் மோட்டாரை இயக்கி, மடையை மாற்றிவிட்டு, மா மரத்து நிழலில் படுத்துவிடுவேன். ஈரம் பாவிய புற்கள் சில்லென்று உடலெங்கும் உறைய என் டேப் ரெக்கார்டரில் இசை சுழன்றுகொண்டேயிருக்கும். கிணற்று நீர் பொங்கிப் பிரவாகமெடுத்து எள்ளுக்காட்டையே பெரும் நதியாகச் சுழட்டியிருக்கும்.

சாப்பாடு கொண்டு வந்திருந்த அம்மா கூப்பாடு போடும்போது, ஆலா பறவைகளின் படபடவென்ற றெக்கை யடிப்புகள் உடலெங்கும் நீரைத் தூவி எழுப்பின. அம்மா கோபத்துடன் கத்தினாள். “வெள்ளாமையவே கெடுத் திட்டயேடா...”

எள்ளு சாகுபடியைப் பொறுத்தவரை பயிர்களுக்கு நிறைய நீர் பாய்ச்சக் கூடாது. அந்தப் பயிர்களுக்கான பதனத்துடன் சரியான விகிதத்தில்தான் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் அதிகமாகிவிட்டால், பயிர்களுக்குக் கொழுப்பு கட்டிக் கொள்ளும். அதாவது எள்ளுப் பயிர் அளவுக்கு மீறிய செழுமையுடன் வளர்ச்சிதான் அடையுமே தவிர, நிறைய காய் வைக்காது. நல்ல மகசூல் தராது. எள்ளுக் காட்டுக்குப் பதனம் பார்த்து நீர் பாய்ச்சுவது என்பது ஜென் கவிதை எழுதுவது போன்றது.

அந்த வருடம் எள்ளுக்காடு வழக்கத்தை விடவும் அதிகமாகப் பூத்திருந்தது. ஆலா பறவைகள் பூக்களின் மேலே ஆலவட்டம் போட்டன. சாகுபடி முடிந்து எங்களூரில் சாமிப் பூச்சாட்டலின்போது, அம்மா எள்ளுப் பயிரை பூ கம்பத்தின் முன் வைத்துக் கும்பிட்டாள்.

‘போன வருடத்தைவிடவும் இந்த வருடம் வெள்ளாமை பரவாயில்லை’ என்று மகிழ்ச்சியுடன் வேண்டிக் கொண்டிருந்தாள் அம்மா.

கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர். தொடர்புக்கு: unnatham@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x