Published : 21 Sep 2013 04:08 PM
Last Updated : 21 Sep 2013 04:08 PM
பெயரை விட்டுச் செல்லும் சிட்டுக்குருவி
இசையின் கவிதைகள், சமூகத்தை, மனிதர்களை மற்றும் தன்னையே கலாட்டா பண்ணும் கவிதைகள். இவர் கவிதைகளைப் படிக்கும்போது, ஞானக்கூத்தன் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. பிரமீள் கவிதையில் படிமங்களிலும்,சொற்களின் வேகத்திலும் கவித்துவம் தானாகவே மலர்ந்திருக்கும். ஞானக்கூத்தன் பாணி கவிதைகளில் சூட்சுமங்களில் கவித்துவம் கூடியிருக்கும். பகடி,விமர்சனம் என்ற சொற்களின் போதாமையில் கலாட்டாத்தன்மை என்ற சொல்லை உபயோகிக்கிறேன். மேலும் பல கவிதைகள் சிறுகதைத் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. '999 வாழ்க்கை' என்ற கவிதை..
"இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய்
எனக் கடிந்து கொள்கிறாயே
நானென்ன அவ்வளவு நீதிமானா?
அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன்."
ஒற்றை வாழ்க்கை என்ற கற்பிதத்தை இக்கவிதை கலாட்டா செய்கிறது. 'ஒரு குள்ளமான காதல்' கவிதையில்-
"நூறு காதல்களில்
ஒரு காதல் ரொம்பவும் குள்ளமானது
அது தன் கையை உயர்த்திக்காட்ட வேண்டியிருக்கிறது"
என்று ஒரு பகுதி வருகிறது. குள்ளமான காதல் தன் கையை உயர்த்தித் தன் இருப்பைக் காட்டுவதை நினைக்கும் போது சிரிப்பு ஏற்படுகிறது. மனிதனோடு பல காதல்கள் சம்பந்தப்பட்டுத் தானே இருக்கிறது.
"வாராது வந்த மாணிக்கம்" என்ற சிறுகதைத் தன்மையுடைய கவிதையில் வரும் ராமகிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே ஆயிரம் முறைக்கும் அதிகமாகத் தாயை அரச மரத்தைச் சுற்றவைக்கிறார். வாராது வந்த மாமணிக்கு எட்டாம் வயதில்தான் பேச்சு வருகிறது. 33 வயதில் திருமணம் முடித்து 9 வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. இப்போது நரை முற்றி, உடல் உளுத்து, துள்ளித்துள்ளி இருமும் அவருக்கு சாவு வந்து தொலைய மாட்டேனென்கிறது. புதிய மருத்துவமனையின் புதிய மருத்துவர் நோய்க்குறிப்பிற்காக அவர் பெயரைக் கேட்கும்போது "லேட் ராமகிருஷ்ணன்" என்று சொல்கிறார்.
"சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகின்றன" என்ற கவிதையில், ஒரு மழை நாளில் சிட்டுக்குருவி மரக்கிளையின் இலைமறைவில் அமர்ந்து நடுங்கிக்கொண்டிருக்கிறது. உடைந்த மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. உயிர் நடுங்கி அமர்ந்திருந்த அது, ஒருமுறை பூட்ஸ் காலின் கீழே சுருண்டு கதறிய அவன்தான். அதன் இறக்கைகள் எதிலும் காயங்களில்லை. கால்கள் எதுவும் முடமாகவில்லை என்றாலும் அது மெல்ல மெல்ல நடந்து போகிறது. அப்போது சிட்டுக்குருவி என்ற பெயர் அதை விட்டுவிட்டுப் பறந்து போனது என்று கவிதை முடிகிறது.
இக்கவிதையில் வரும் சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது. பறத்தலை இயல்பாகக் கொண்ட சிட்டுக்குருவி, துள்ளித் துள்ளிப் பறந்து அமர்வதை இயல்பாகக் கொண்ட சிட்டுக்குருவி, இறக்கையும் காலும் காயம்படாத நிலையில் மெல்ல மெல்ல நடக்கும்போது சிட்டுக்குருவி என்ற பெயர் அதை விட்டுவிட்டுத்தானே செல்லும். முக்கியமான கவிதை இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT