Published : 17 Jun 2017 09:59 AM
Last Updated : 17 Jun 2017 09:59 AM
கோயில்களின் ஊரான, கலைகளுக்கு இசைக்கும் பேர்போன, தோஷம் கழிக்கத் தேடி வரும் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த ரவிசுப்பிரமணியன், தன் சொந்த ஊரின் தன்மையில் கொண்டுவந்திருக்கும் புதிய கவிதைத் தொகுப்பு ‘விதானத்துச் சித்திரம்’.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் ரவிசுப்பிரமணியனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகளைவிட முக்கியமான ஒன்றாக இது வந்திருக்கிறது.
வடிவரீதியில் மரபை நவீன கவிதை களைய வேண்டும் என்பது க.நா.சு. முன்னிறுத்திய முக்கியமான இலக்கணம். மரபின் ஆழம் எந்த அளவுக்கு நவீன கவிதைக்கு அவசியமானது என்பதையும் மரபை உள்வாங்கிய நவீன கவிதைக்கு எப்படியான புரதானத் தன்மையை விழுங்கி வெளியே வரும் என்பதற்கும் இந்தத் தொகுப்பை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். வெஃகல் போன்ற பல அரிய சொற்களைக் கொண்டு ஒரு புராதனத்தன்மையைக் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன். கவிதைகளுக்கு ஒரு நடன அசைவையும் அவர் கொடுத்திருக்கிறார். தமிழில் ஞானக்கூத்தன், விக்கிரமாதித்தியன் கவிதைகளை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். சமீப காலமாக என்.டி. ராஜ்குமார் தன் கவிதைகளில் இந்தத் தன்மையைக் கொண்டுவருகிறார். ஆனால், அவை நாட்டார் இசையைப் பிரதிபலிப்பவை. ரவி சுப்பிரமணியத்தின் கவிதைகள் சாஸ்திரீய சங்கீதத்தின் மெல்லிசைத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. நாணல்போல அவை அசைகின்றன.
இந்தத் தொகுப்பின் விவரிப்பு மொழி எளிமையானது; அதே சமயம் ஆற்றல் மிக்கது. புறச் சூழலில் உள்ள ஒரு பறவையை, ஒரு மிருகத்தை, ஒரு குழந்தையை விவரிப்பது பொதுவாகக் கவிதைகளில், கதைகளில் காணக் கிடைப்பது. ஆனால், அந்தப் புறச் சூழலில் உள்ள பறவையை நாம் ஏன் கவிதைக்குள் கூட்டி வருகிறோம் என்று வாசகர் கேள்வி எழுப்பினால் அதற்குக் கவிதை பதில் சொல்ல வேண்டும். சகாய விலைக்குக் கிடைக்கிறது எனப் பொருட்களை வாங்கி வீட்டுக்குள் மாட்டிவைப்பது போன்ற தேவையற்ற அலங்காரங்கள் பொதுவாகப் புதுக்கவிதையில் இருக்கின்றன. ரவியின் கவிதைகளிலும் புறவெளியில் உள்ள காக்கை, மரம், விதானத்துச் சித்திரம், எள் விளக்குகள், கற்கிளி எல்லாம் வருகின்றன. ஆனால், அவை எல்லாவற்றுக்கும் ரவி வேலை கொடுத்திருக்கிறார். கவிதையை விவரிக்கும் பணியில் ஒரு பகுதியாக வருகின்றன. தஞ்சையின் புராதனக் கலையை உள்வாங்கி ஓவியர் பாலாஜி
ஸ்ரீனிவாசன் முகப்பு ஓவியங்களும் உள் ஓவியங்களும் வரைந்திருக்கிறார். தொகுப்புக்கு மேலும் அழகூட்டுகின்றன இந்த ஓவியங்கள்!
இந்தக் கவிதைகள் ஒருவிதத்தில் தன்மைப் பொருள் பேசுபவை. அந்தத் தன்மை நினைவுகளில் அமிர்தா வருகிறாள். நகுலனின் சுசீலாபோல், கலாப்ரியாவின் சசிபோல் ரவிசுப்பிரமணியனுக்கு ஒரு அரூப அமிர்தா. இந்த நினைவுகளை ‘ஞாபக நதி’, ‘நீ நிகழ்த்திய கோடைமழை’, ‘பகல் நேரத்துப் பொரிகளின் ஞாபகம்’, ‘இமைகளிலே கரையுடைக்கும் ஜலதாரை’, ‘நினைவின் கமகங்கள்’எனப் பல பல பெயர்களில் கவிதைக்குள் படைத்திருக்கிறார். கவிஞனின் இதுபோன்ற நினைவுகள் முயங்கிப் பெற்ற குழந்தைகள் இந்தத் தொகுப்பில் தனித்துவத்துடன் துள்ளித் திரிகின்றன. சங்கீதத்தின் ஏறுநிரல் இறங்குநிரல்போல், கவிதையின் தொடக்க வரிகள் ‘எள் விளக்கு’வெளிச்சத்தைப் போல் தொடங்கி, கணுக்கால் வெள்ளமாக நிறைவுறுகின்றன. சங்கீதத்தை முறைப்படி கற்ற ரவி, கவிதைக்குள் அதைக் கொண்டுவருவதை ஒரு ரசவாதம்போலவே செய்திருக்கிறார். இந்த ரசவாதத்தில் ‘விதானத்துச் சித்திரங்கள்’ தரை இறங்கி ஆடுகின்றன, வானில் பறக்கின்றன!
விதானத்துச் சித்திரம்
ரவிசுப்பிரமணியன்
விலை: ரூ. 100
வெளியிடு: போதி வனம், சென்னை-05.  : 98414 50437.
படம்: அய்யப்ப மாதவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT