Published : 01 Dec 2013 03:40 PM
Last Updated : 01 Dec 2013 03:40 PM
வரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள். ஆவணங்கள். இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளை யானை நிரூபிக்கிறது.
தமிழக - இந்திய வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களை தவிர்த்த வரலாறுதான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களாகவும், சமூகத்திற்கான அடிப்படையான வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை எப்படி எழுத முடியும்? ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள் எப்படி அடிமைகளாக இருக்க முடியும்? உணவு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் எப்படிப் பசியாலும் சாக முடியும் என்ற கேள்விகளின் வழியாக வெள்ளை யானை நாவல் வளர்கிறது.
தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் இறந்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறோம். அழுதிருக் கிறோம். ஒரு சராசரியான குடும்பத்தில் ஒரு மனிதனின் இழப்பு பேரிழப்பாக கருதப்படுகிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நான்கில் ஒரு பகுதி மக்கள் மாண்டார்கள். கொள்ளை நோயால் அல்ல, பசியால். சக மனிதர்களின் கண் முன்னேதான், அதிகாரத்தின், ஆளுவோரின் கண் முன்னேதான் செத்துத் தொலைந்தார்கள். யாருக்கும் வருத்தமில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. நடந்த நிகழ்வுதான் இது. கற்பனை இல்லை. சமூகத்திற்கான மொத்த உணவையும் உற்பத்தி செய்த வர்கள்தான் தீப்பந்தத்தில் ஈசல்கள் கருகி மாண்டு போவதுபோல பசி என்ற தீயில் மாண்டார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மாண்டார்கள். வரலாறு என்பது அறிவது, படைப்பிலக்கியம் என்பது உணர்வது என்று வெள்ளை யானை நாவலில் அறிய முடியும்.
இன்றளவும் இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினை பயங்கர வாதமல்ல, வறுமையல்ல, சாதிதான். தீண்டாமைதான். பயங்கரவாதத்தைவிட வும் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கிறது சாதியக் கட்டமைப்பு. வெள்ளைக்காரத் துரைமார்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கேகூட எளிதில் புரிந்துகொள்ள முடியாதது சாதியின் முகங்கள் என்று ஜெயமோகன் நேரிடையாகவே பேசுகிறார்.
19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் செயற்கையானது. உணவு உற்பத்திப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல. எஜமானர்களின் கருணையின்மையால் ஏற்பட்டது. நாகப்பட்டினம் துறை முகத்தில் ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்களை ஒரு வாரம் நிறுத்தியிருந்தால் பஞ்சம் ஏற்பட்டிருக்காது என்று ஜெயமோகன் சொல்கிறார். அவர் சொல்வது யூகமல்ல. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் பசியால் செத்தபோது சமூகத்தின் மனதில் சிறு சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, எவ்வளவு நபர்கள் இறக்கிறார்களோ, அவ்வளவு உணவுப் பொருட்கள் மீதமாகும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்திய சமூகத்தின் அறமாக, நீதியுணர்ச்சியாக எது இருந்திருக்கிறது என்பதுதான் வெள்ளை யானை நாவலின் மையம்.
சென்னை ராஜதானியில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் வளர்ச்சி, மதராசபட்டினம் - நகரமாக உருமாறுவது, மிஷனரிகளின் செயல்பாடு, நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயருதல் - சேரிகள் உருவாதல், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சுரண்டல் - காமவிளையாட்டுக்கள், உல்லாசங்கள், பதவிப் போட்டிகள், உள்ளூர் உயர் சாதியினர், பணக்காரர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தோடு கொண்டுள்ள இணக்கமான உறவு என்று அப்போதைய சமூகத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் நாவல் விவரிக்கிறது. நாவல் பிரிட்டிஷ் நிர்வாகக் கண்கள் மூலமாக, எய்டன் மூலமாகச் சொல்லப்படுகிறது, ஒரு வகையில் அவனும் அடிமைதான். எய்டனுக்கு கொஞ்சம் மனசாட்சியும், நீதியுணர்ச்சியும் இருக்கிறது என்றால் அது ஷெல்லியின் கவிதையால் ஏற்பட்டது. எய்டன் நிர்வாகத்தின் ஒரு கருவி என்பதை நாவலின் இறுதியில் பார்க்கிறோம். இது ஜெயமோகனைக் கலைஞனாக நிரூபிக்கும் இடம்.
தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சிக் காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு சலுகை காட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மட்டும் சிறு அசைவு ஏற்பட்டது. அது கல்வியின் வழியாக, ஆங்கில மொழியின் வழியாக ஏற்பட்டது என்பதை மிகவும் ஆணித்தரமாக காத்தவராயன் என்னும் பாத்திரம் எடுத்துக்காட்டுகிறது.
உயர் சாதியினரின் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கே அருகதையற்ற, அதிகாரமற்ற, துணிச்சலற்ற மக்கள் ஒன்று கூடிப் பேசுவதோ, கூட்டம் போடுவதோ, ஒரு அமைப்பாக உருவாகித் தங்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களுக்கெதிராகக் குரல் எழுப்புவதோ சாத்தியமா? சாத்தியம் என்று ஐஸ் ஹவுஸ் போராட்டம் நிரூபித்தது. தாழ்த்தப்பட்ட மக்களுடைய முதல் கூட்டுக்குரல் அது.
உழைப்பவர்கள் இறந்த பிறகு உணவு உற்பத்தி எப்படி நிகழும், சமூகத்தின் கழிவுகளை யார் அகற்றுவார்கள் என்பது குறித்து அப்போதைய சமூகம் ஏன் சிந்திக்கவில்லை என்பது நாவலின் மற்றுமொரு முக்கியமான கேள்வி.
மொத்த நாவலையும் ஷெல்லியின் கவிதைகளின் வழியே அணுகியிருப்பது பெரும் குறை. வண்டியோட்டுபவர்களும், வெள்ளைக்கார துரைமார்களும் கவிதை நடையிலேயே பேசுகிறார்கள். படைப்பாளன் படைப்பில் எவ்வளவு பேசலாம், தலையிடலாம் என்ற கேள்விகளும் நாவலைப் படிக்கும்போது எழுகின்றன. ஆனாலும் வெள்ளை யானை முக்கியமான நாவல்.
நாவலைத் தரமான வகையில் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
வெள்ளையானை (நாவல்) ஜெயமோகன்
வெளியீடு எழுத்து
1, சிரோன் காட்டேஜ்,
ஜோன்ஸ்புரம், பசுமலை, மதுரை,
விலை ரூ.400
தொலைபேசி: 9047920190
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT