Published : 21 Jan 2017 10:39 AM
Last Updated : 21 Jan 2017 10:39 AM

ஒரு பதிப்பாளர்; ஒரு பதிவு: எல்லாத் துறைகளிலும் தமிழ் நூல்கள் வேண்டும்!

புத்தகக் காட்சியின் வயது தற்போது நாற்பது ஆண்டுகள்! நடுத்தர வயதுக்குரிய முதிர்ச்சியும் பக்குவமும் செறிவும் புத்தகக் காட்சியினுள் விரவித் தெரிந்தன. அரங்குகளின் எண்ணிக்கை பலமடங்கு கூடி 700-ஐத்

தாண்டிவிட்டது. வெளியேயும் பழைய புத்தகக் கடைகளின் வரிசை வேறு. காணக் கிடைக்காத ஏராளமான புத்தகங்களின் அணிவகுப்பு மலைக்கச் செய்வதாக இருந்தது.

இந்த முறை சிறுபதிப்பாளர்கள் குறைந்த அளவே புதிய நூல்களைக் கொண்டுவந்தார்கள். பணமதிப்பு நீக்கம் அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. எனினும், குழந்தை இலக்கிய நூல்களின் வருகை அதிகரித்திருப்பதைக் காண முடிந்தது. விதவிதமான அளவுகளில், வசீகரமான வண்ண அட்டைகளில் நிறைய புத்தகங்களைக் காண முடிந்தது.

வாகன நிறுத்துமிட வசதி, கழிவறை ஏற்பாடுகள் மேம்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் ஒருசில பிரச்சினைகள் நீடிக்கவே செய்கின்றன. பணத் தட்டுப்பாட்டின் விளைவைக் காண முடிந்தது. பல நேரங்களில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக ஸ்வைப்பிங் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை.

உணவு விடுதியில் உணவுகளின் விலை வழக்கம்போல் கூடுதலாக உள்ளன. காபி - 30 ரூபாய், டீ - 20 ரூபாய் என்பது மிக அதிகமில்லையா? இதில் ஏன் எதுவும் செய்ய முடியாமற்போகிறது? அடுத்த முறையாவது இதற்கெல்லாம் தீர்வு கண்டாக வேண்டும்.

சென்னை புத்தகக் காட்சிக்கு முன், செங்கல்பட்டு மாவட்டத்திலும், சென்னை மாநகரில் பல இடங்களில் டிச.31,

ஜனவரி 1 தேதிகளில் புத்தாண்டின் போதும் புத்தகக் காட்சிகளும் விற்பனையும் நடந்தன. எனினும் சென்னை புத்தகக் காட்சி விற்பனை குறையவில்லை. இளைஞர்கள் வருகை அதிகரித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

பதிப்பாளர்கள், தமது செயல்திறன்களை மேம்படுத்திக்

கொள்ள வேண்டும். சமகாலத் தேவைக்கேற்ப புதிய புதிய தளங்களில் புத்தகங்களை வெளியிட முன்வர வேண்டும். புதிய புத்தகங்களை அறிமுகம் செய்ய விளம்பரம் செய்வது அவசியம். பொருள்

வாரியான அறிமுகக் குறிப்புகளுடன் விலைப் பட்டியல்களைத் தயாரித்து வழங்குவது கூடுதல் பலன் தரும். சமூக வலைத்தளம், வாட்ஸ்அப்,

ட்விட்டர் போன்ற நவீன ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் எல்லாத் துறை சார்ந்தும் நூல்கள் வெளிவருவதுபோல் தமிழில் வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உள்ளது. நமது கலாச்சாரத்தில் புத்தக வாசிப்பு பிரதான இடத்தைப் பிடித்தால் இது சாத்தியமாகும். இதற்கு பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர், ஊடகங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும்; அதற்குப் புத்தகக் காட்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x