Published : 21 Sep 2013 03:42 PM
Last Updated : 21 Sep 2013 03:42 PM
ராபர்ட்டோ அம்புயேரோ தென் அமெரிக்க நாடான சிலியில் பிறந்தவர். தற்போது அயோவா பல்கலைக் கழகத்தில் ஸ்பானிய மொழி கற்பிக்கும் பேராசிரியராகப் பணி புரிகிறார். ஸ்பானிய மொழியில் இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். இவற்றையெல்லாம் ட முக்கியமானது அவர் உலகப் புகழ் பெற்ற கவிஞர் பாப்லோ நெருதாவின் பக்கத்து வீட்டுக்காரர். அம்புயேரோ சிறுவனாக இருந்தபோது வசித்த வால்பிரைசோ என்ற கடலோர நகரத்தில் குன்றின்மேல் கட்டப்பட்ட வீட்டில்தான் சிலியின் மகாகவி நெரூதாவும் வசித்தார். பள்ளிக்குச் செல்லும்போதும் வீடு திரும்பும் போதும் கவிஞர் உலாவுவதையும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிப்பதையும் பார்த்தார். ஆனால் அந்த வீட்டுக்குள் சென்று பார்க்க ஒருபோதும் தைரியம் வரவில்லை. அந்தக் குறையைத் தன்னுடைய நாவலில் தீர்த்துக் கொள்கிறார் அவர். ‘மூன்று முறை நான் நுழையப் பார்த்தும் உள்ளே போகத் தயங்கிய அந்த வீட்டுக்குள் என் கதாபாத்திரத்தை அனுப்பி வைத்தேன்’ என்று அம்புயேரோ குறிப்பிடுகிறார். அவர் எழுதிய ஆறாவது நாவல் , பாப்லோ நெரூதாவைப் பற்றியது. 'நெரூதா கேஸ்'. சென்ற ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கும் இதுதான் ஸ்பானிய மொழியறியாத வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைக்கும் முதலாவது அம்புயேரோ நாவல்.
சிலியில் நடந்த உள்நாட்டுப் போர்க் கால கட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது. 1970 களை ஒட்டிய ஆண்டுகளில் சிலியில் கலவரங்கள் மெல்ல அடங்கி நாட்டின் அதிகாரம் இடதுசாரிகளின் கைக்கு வருகிறது. சால்வடார் அலெண்டேயின் தலைமையில் சோஷலிச அரசாங்கம் அமைகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உதவும் சில ரகசிய விசாரணைகளுக்காக அல்மாக்ரோ ருகாரியோ அசோசியேட்ஸ் நிறுவனம் (ஏஆர் அண்ட் ஏ) பணியாற்றுகிறது. பணியாளர்களில் ஒருவனான சயடானோ புருலோவிடம் ஒரு ரகசிய விசாரணையின் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. பிரபலமான ஒருவர் தனக்கு வேண்டிய இருவரைக் கண்டு பிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். அந்தப் பிரபலம் நோபெல் இலக்கியப் பரிசு பெற்ற பாப்லோ நெரூதா. இதற்கிடையில் பினோஷே தலைமையிலான கூலிப் பட்டாளம் அலெண்டேயின் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப் பற்றிக் கொள்கிறது. நெரூதா புற்று நோயால் பீடிக்கப்பட்டு படுக்கையில் வீழ்கிறார். மரணம் நெருங்குவதற்குள் சயடோனாவிடம், தான் குறிப்பிட்ட நபர்களைக் கண்டு பிடித்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறார். காணாமற் போன அந்த இருவரை சயடோனா தேடுவதுதான் நாவலின் கதை.
1970 இல் அலெண்டே ஆட்சியைப் பிடித்தது முதல் 73 இல் பினோஷே ரத்தக் களரிக்கிடையில் சர்வாதிகார அரசை ஏற்படுத்தும்வரையிலான எல்லா அரசியல் நிகழ்வுகளும் நாவலின் பின்னணியாக அமைகின்றன. சமகால மனிதர்களையும் நிகழ்கால அரசியலையும் வைத்து ஒரு கற்பனைப் படைப்பை உருவாக்குவது சவால்; கூடவே ஆபத்தானதும். இந்தச் சவாலையும் ஆபத்தையும் உண்மைக்கு மிக நெருக்கமான கற்பனைத் திறனால் ஆசிரியர் சமாளித்திருக்கிறார் என்பது நாவலை வாசிக்கும்போது தெளிவாகிறது. ஒரு துப்பறியும் நாவலின் வேகமும் சுவாரசியமும் வாசிப்பை ஆனந்த நடவடிக்கையாக மாற்றுகிறது.
நாவலின் மையப் பாத்திரமான பாப்லோ நெரூதா சதையும் இயக்கமுமாக புத்தகத்தின் பக்கங்களில் மறு பிறப்பெடுக்கிறார். உயிர்ப்புள்ள கவிதைகளை எழுதியவர்; கம்யூனிஸப் போராளி; இயற்கையின் நேசர்; தளாராத மனிதாபிமானி என்று எல்லாத் தோற்றங்களிலும் நெரூதா நடமாடினாலும் நாவலின் மொத்தத்தில் மாபெரும் காதலனாகவே பேருருவம் கொள்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அவர் மாளாக் காதலர். அவர் எழுதியிருக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் கவிதைகளில் சரி பாதி காதல் கவிதைகள்தாம் குழந்தை பருவத்திலேயே தாயை இழந்த நெரூதாவுக்கு அன்பின்
சுவையைப் புகட்டிய வளர்ப்புத்தாய் முதல் பின்னர் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் அவரால் காதலித்துக் கைவிடப்பட்டும் அவரைக் காதலித்துக் கைவிடப்பட்டர்களுமான எண்ணிக்கையற்ற பெண்களுக்காக அவர் எழுதியவை.
தான் மட்டுமே அறிந்த ரகசியத்தின் நடமாடும் சாட்சிகளைக் கண்டு பிடிக்கத்தான் அவர் சயடோனாவிடம் வேண்டுகிறார். காதலித்து, அதன் விளைவாக ஒரு பெண்குழந்தையையும் பெற்றெடுத்த பின் தன்னால் கைவிடப்பட்ட மரியா அண்டோனியேட்டாவையும் தான் மகளையும்தான் நெரூதா கண்டு பிடிக்கப் பணிக்கிறார்.நெரூதாவின் நிஜ வாழ்க்கையில் அந்த இருவரும் தொலைந்து போனவர்கள். கற்பனையில் அவர்கள் இருப்பவர்கள். அவர்களை உயிர்ப்பித்திருப்பதுதான் ராபர்ட்டோ அம்புயேரோவின் வெற்றி.
தி நெரூதா கேஸ் ( நாவல்)
ராபர்ட்டோ அம்புயேரோ
ஆங்கில மொழிபெயர்ப்பு: கரோலினா டி ராபர்ட்டிஸ்
ரிவர்பெண்ட் புக்ஸ், நியூயார்க் (2012)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT