Published : 14 May 2017 10:58 AM
Last Updated : 14 May 2017 10:58 AM
எதிர்பாராத துயர நிகழ்வுகளைக் கடக்க, நமக்குப் பெரும்பாலும் உதவுவது சுய எள்ளலும் வாழ்வின் மீதான அங்கதப் பார்வையும்தான்! அதனால்தான், ஹிட்லரின் காலத்தில் சார்லி சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்துடனும், ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் ஜார்ஜ் ஆர்வெல் ‘விலங்குப் பண்ணை’ என்ற புத்தகத்துடனும் வந்தார்கள். அன்றைய மனித குலத்தின் வலிக்கு நகைச்சுவை மருந்திட்டார்கள்.
ஹிட்லரைப் போலவும், ஸ்டாலினைப் போலவும் உலகைப் பயமுறுத்தும் ஆட்கள் யாரும் இன்று அரசாட்சி செய்யவில்லை. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போலவும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவும் மக்களைப் பைத்தியக்காரர்களாக்கும் ஆட்சி
யாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். வரலாற்றில் கொடுங்கோலர்களைக் காட்டிலும் இப்படியான கோமாளிகள் அதிக அளவில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள் என்பது வேதனை. இதையெல்லாம் பார்த்து சிரிப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்துவிட முடியும்? ஹோவர்டு ஜேக்கப்சன் போன்ற எழுத்தாளர்களோ இந்தப் பைத்தியக்காரத்தனங்களை ரசனைக்குரிய இலக்கியமாக்கிவிடுகிறார்கள்.
டிரம்ப் எனும் ஒற்றை மனிதர் எடுக்கும் முடிவுகளால், இன்று உலகம் முழுவதும் பல்வேறு விதமான அதிர்ச்சிகள் உருவாகிவருகின்றன. அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட மாபெரும் அதிர்ச்சியின் விளைவாகப் பிறந்தது ‘புஸ்ஸி’ எனும் அங்கத நாவல். ஹோவர்டு ஜேக் கப்சன் எனும் ஆங்கில எழுத்தாளர் இந்தப் புத்த கத்தை எழுதியிருக்கிறார். ‘மேன் புக்கர் பரிசு’ வென்ற இரண்டாவது நகைச்சுவை எழுத்தாளர் இவர். பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பக வெளி யீடாக சமீபத்தில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம். டிரம்ப் பதவியேற்று 100 நாட்கள் கடந் திருக்கும் நிலையில் இது வருவது சாலப் பொருத்தம்.
சிறந்த அங்கத இலக்கியம்
கற்பனை நாடு ஒன்றில், அந்நாட்டின் அரசருக்குப் பிறந்த மகன் எவ்வாறு சீர்கெட்டுப் போகிறான், பின்னாளில் அவன் எப்படி ஆட்சியைப் பிடிக்கிறான் என்பதுதான் கதையின் மையம். ஆனால் நாடுகள், மனிதர்கள், அவர்களின் செயல்கள் ஆகியவற்றை நடைமுறை நிஜங்களுடன் ஒத்துப் போகும்படி கதையை அமைத்திருப்பதுதான் இந்த நாவலை சுவாரசியமாக்குகிறது. கதாபாத்திரங்களும் உருவகங்
களும் பெரும்பாலான அளவு நிஜ உலக மனிதர்களுடனும் நிகழ்வுகளுடனும் இணையாகப் பயணிக்க வேண்டும் என்பது சிறந்த அங்கத இலக்கியத்துக்கான இலக்கணங்களில் ஒன்று. அந்த வகையில் ‘புஸ்ஸி’ நாவலை சிறந்த அங்கத இலக்கியமெனலாம்.
கதையின் நாயகன் ‘ஃப்ரேக்கசஸ்’ டிரம்ப்பையும், நாயகனின் பெற்றோர் புஷ் மற்றும் கிளின்டன் குடும்பத்தினரையும், ‘வோஸ்ஸெக் ஸ்ப்ராவ்சிக்’ கதாபாத்திரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும், ‘ப்ரோப்ரியஸ்’ கதாபாத்திரம் டிரம்ப்பின் ஆலோசகர் ரீன்ஸ் ப்ரீபஸையும், ‘சாஜூர்னர் ஹெமின்வே’ கதாபாத்திரம் ஹிலாரி கிளின்டனையும் நினைவூட்டுகின்றன. நாயகனின் நாடான ‘அர்ப்ஸ் லுதூஸ்’ அமெரிக்காவையும், ‘ஷோல்ம்’ ரஷ்யாவையும் நினைவுபடுத்துகின்றன.
நாயகன், தொலைக்காட்சி பார்த்தே தன் நாட்களைக் கழிக்கும் குணம் கொண்டவன். அவனுக்கு ரோம் மன்னன் நீரோவின் மீது ஈர்ப்பு. எனவே, நீரோவின் ஆட்சியில் இருந்ததைப் போன்ற அரங்கு ஒன்றைக் கட்ட ஆசைப்படுகிறான். அப்போது அவனுக்கும், அவனது பெற்றோருக்கும் கீழ்க்கண்டவாறு உரையாடல் நடக்கும்.
‘இந்த அரங்கு எதற்கு?’ - பெற்றோர்கள்.
‘கொல்வதற்கு’ - ஃப்ரேக்கசஸ்.
‘யாரைக் கொல்வதற்கு?’
‘கிறிஸ்துவர்களை.’
‘இது கிறிஸ்துவ நாடாயிற்றே?’
‘அப்படி என்றால் யூதர்களைக் கொல்லலாம். இஸ்லாமியர்கள், மனித நேயர்களையும்...’
‘மனிதநேயம் என்பது மதமல்ல.’
‘பரவாயில்லை. அவர்கள் மீதும் சிங்கங்களை ஏவிவிடலாம்.’ மேற்கண்ட வரிகளைப் படித்தால், இஸ்லாமியர்கள், அகதிகள், இந்தியர் உள்ளிட்டோர் மீது டிரம்ப் அரசு ஏவும் இன, மத, நிற வெறியை நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.
ரசனை ததும்பும் நாவல்
‘தாராளவாத ஜனநாயகம், குண்டு வீச்சில் இறந்தவர்களுக்கு அனுதாபப்படுவதை விடவும் குண்டு வீசியவர்கள் மீதே அதிக அனுதாபம் கொள்கிறது’ என்று ஃப்ரேக்கசஸ் ‘ட்வீட்’ செய்வதுபோல ஒரு இடம் நாவலில் உண்டு. நிஜ உலகில், டிரம்ப்பின் அரசு எதை நோக்கிச் செல்கிறது என்பதை இந்த வரிகள் சுட்டும். நாவல் சொல்கிற செய்தியைவிட, நாவல் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, நாவலாசிரியரின் மொழி. அவரின் வார்த்தை விளையாட்டு. உதாரணத்துக்கு நாயகனின் பெயரையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் ‘ஃப்ரேக்கஸ்’ (Fracas) என்ற சொல் உண்டு. இதற்கு, இரைச்சல் மிகுந்த தொந்தரவு அல்லது சச்சரவு என்று பொருள். 2005-ம் ஆண்டு நிகழ்ச்சியொன்றில், பெண்கள் குறித்து டிரம்ப் பேசியபோது அவர் பயன்படுத்திய ‘புஸ்ஸி’ எனும் ஆங்கிலச் சொல்லையே இந்த நாவலுக்குத் தலைப்பாக்கியிருக்கிறார் ஹோவர்டு ஜேக்கப்சன்.
‘அந்த மிருகத்துக்கு ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றைக் கொடுத்து மக்கள் அழகு பார்த்தார்கள். பிறகு, அந்த மிருகம் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்தது. உண்மைக்கு எதிராகப் புறம் பேசியது. அப்போதுதான் மக்கள் யோசித்தார்கள். அந்த மிருகம் கடலுக்குள்ளிருந்து வரவில்லை. தங்கள் இதயத்திலிருந்து வந்திருக்கிறதென்று. ஒருமுறை வெளியே வந்துவிட்டால், மீண்டும் அந்த மிருகத்தை உள்ளே போகச் செய்ய முடியாது என்று அந்த மக்கள் உணரத் தொடங்கினார்கள்’ என்று நாவலின் ஆரம்பத்தில் எழுதுகிறார் ஜேக்கப்சன்.
மக்களின் இதயங்களிலிருந்து இன்னும் எத்தனை மிருகங்கள் வெளிப்படக் காத்திருக்கின்றனவோ!
ந.வினோத் குமார் தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT