Last Updated : 11 Jun, 2017 12:22 PM

 

Published : 11 Jun 2017 12:22 PM
Last Updated : 11 Jun 2017 12:22 PM

மனிதர்களை வாசிக்க உதவும் மனித நூலகம்

மின் நூல்கள், ஒலி நூல்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பேசும் நூல்களைப் பற்றியோ மனித நூலகத்தைப் பற்றியோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மனித நூலகம் என்பது மனிதர்களே புத்தகங்களாகச் செயல்படும் நூலகம். இந்த மனித நூலகம் நமக்கு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். ஆனால், உலகின் முதல் மனித நூலகம் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரத்தில் 2000-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் சமூகத் தொடர்பில் நிலவும் பாரபட்சங்களை எதிர்த்துச் சவால் விடும் நோக்கத்துடன் இது ஒரு சர்வதேச அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. “நேர்மறையாகக் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் மூலம் வழக்கமான முறைகள், பாரபட்சங்கள் போன்றவற்றுக்குச் சவால் விடும்படி இந்த மனித நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உண்மையான மனிதர்கள் வாசகர்களுக்குக் கடன் அளிக்கும் இடமாக இது இருக்கிறது. இந்த இடத்தில் கடினமான கேள்விகள் எதிர்பார்க்கப்படுகின்றன, பாராட்டப்படுகின்றன, பதிலளிக்கப்படுகின் றன” என்று விளக்குகிறார் ஹைதராபாதில் மனித நூலகத்தை நிறுவியிருக்கும் ஹர்ஷத் தின்கர் ஃபத். தற்போது உலகம் முழுவதும் 60 நாடுகளில் மனித நூலக அமைப்பு செயல்பட்டுவருகிறது.

கதைகளும் உரையாடல்களும்

வழக்கமான நூலகத்தின் கருத்தின் அடிப்படையில்தான் இதுவும் செயல்படுகிறது. ஒரு புத்தகம் எப்படி வாசிக்கப்படுகிறதோ விவாதிக்கப்படுகிறதோ ஒரே கருத்துடைய வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ளப்படுகிறதோ அதே போன்றுதான் மனித நூலகத்தில் மனிதர்கள் உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ அதே மாதிரி இங்கே உரையாடுவதற்கும் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த நூலகப் பட்டியலிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே வாழும் புத்தகத்தை இரண்டு வாசகர்கள் தேர்ந்தெடுப்பது, குழுவாகத் தேர்ந்தெடுப்பது போன்றவையும் சாத்தியம்தான்.

தனியார் கல்வி நிறுவனத்தில் ஊடக விளம்பரம் படிக்கும் மாணவர் ஹர்ஷத், இந்த மனித நூலகங்கள் பற்றி இணையதளம் வழியாக அறிந்திருக்கிறார். அவருடைய ஆர்வத்தால், இந்தியாவிலும் மனித நூலகங்களாகச் செயல்படுவதை அறிந்திருக்கிறார். “இந்தியாவின் முதல் மனித நூலகம் இந்தூரில் தொடங்கப்பட்டது. இப்போதும் அதன் செயல்பாடுகள் வலிமையாக இருக்கின்றன. இந்தக் கருத்து எனக்குப் பிடித்துப்போக, ஹைதராபாதில் மனித நூலகம் தொடங்குவதற்கான வேலைகளைத் தொடங்கினேன். பிறரின் கருத்து வேறுபாடுகளைப் பாராட்டுவதற்கும், சமூகத் தடைகளை மற்றவர்களிடம் கேட்டறிவதன் மூலம் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடைய அனுபவங்களுடன் இணைத்துக்கொள்வதற்கும் இந்த மனித நூலகத்தின் நிகழ்ச்சிகள் மக்களுக்கு உதவி செய்யும்” என்று விளக்குகிறார் அவர். கடந்த மார்ச் மாதம் ஹைதராபாதில் செயல்படத் தொடங்கிய இந்த மனித நூலகத்தில் இதுவரை இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இந்த மனித நூலகத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று கேட்டதற்கு, “யார் வேண்டுமானாலும் வாழும் புத்தகத்துக்கான ஆதாரமாகச் செயல்படலாம். சொல்வதற்குத் தனித்துவமான கதைகள் யாரிடம் இருக்கிறதோ அவர்களும் வாழும் புத்தகங்களாக மாறலாம். சமூகப் பாரபட்சங்களை அனுபவித்தவர்கள், இனம், பாலினம், வயது, உடல் இயலாமை, பாலினத் தேர்வு, பாலின அடையாளம், மதம்/ நம்பிக்கை, வாழ்க்கை முறை தேர்வுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வாழும் புத்தகங்களாக இருக்கிறார்கள். இவர்களைச் சந்திக்க வரும் வாசகர்கள், இந்த வாழும் புத்தகங்களைக் கடன் வாங்கலாம், அவர்களுடன் உரையாடலாம். சமூகத்தில் இருக்கும் பலவிதமான சமூகக் குழுக்களைப் பற்றிய பரந்த பார்வையை இந்த மனித நூலகம் உருவாக்கும். எங்களுடைய முதல் நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலானவர்கள் புத்தகங்களைப் பற்றிய நேர்மறையான கருத்துகளுடன்தான் சென்றனர்’’ என்கிறார் ஹர்ஷத்.

மனித நூலகத்தை பெங்களூரு, டெல்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, குஜராத் போன்ற நகரங்களுக்கு எடுத்து செல்வதற்கான முயற்சியில் இருக்கிறார் ஹர்ஷத்.

ஃபேஸ்புக்கில் ஹைதராபாத் மனித நூலகத்தில் இணைவதற்கு: https://www.facebook.com/hyderabadhumanlibrary/

-

‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x