Published : 07 Dec 2013 12:00 AM
Last Updated : 07 Dec 2013 12:00 AM
நவீனம் என்ற சொல்லாடல் 18ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலிருந்து தொடங்குகிறது எனலாம். அதுவரை ஐரோப்பாவை ஆட்கொண்டிருந்த மரபார்ந்த கிறிஸ்தவ திருச்சபையின் கட்டுப்பாட்டிலிருந்து சமூக அரசியல் அதிகாரங்களை மீட்டெடுக்கும் முயற்சிதான் இதன் உருவாக்கம். அதிலிருந்து ஒரு புதிய சிந்தனை மரபு உருவாக வேண்டும் என்பது அதன் உள்ளகமாக இருந்தது. நவீனத்துவம். மதசார்பின்மை, ஜனநாயகம், பகுத்தறிவு, சமதர்மம், குடியரசு, தேசியம் போன்ற சொல்லாடல்கள் அதன் தொடக்கத்திலிருந்து உருவாயின. மேற்கில் அறிவொளி காலம் (Enlightment) என்றழைக்கப்படும் இதன் சாராம்சம் புதிய லௌகீகக் கோட்பாடுகளை முன்னெடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தியது. வெறுமனே கோட்பாடாக இருந்து விடாமல் நடைமுறை செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியது. இதன் தொடர்ச்சியில் மேற்கின் இந்த லௌகீக கோட்பாடு கீழ்த்திசை நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தியது.
நவீனம் என்பது ஒருகாலகட்டத்தின், ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைப்பாடு என்பதிலிருந்து உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. மேற்கில் எலியட், பவுண்ட், ராபர்ட் புரூஸ்ட், மில்டன், ஷெல்லி, வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், ரிச்சர்ட் அல்டிங்டன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் இலக்கியத்தில் உருவவாதத்தையும், பிம்பங்களையும் பிரதிபலித்தன. நவீனத்துவக் கவிதைகள் முந்தைய மரபிலிருந்து துண்டிக்கப்பட்டு வித்தியாசமான உருவகங்களையும், குறியீடுகளையும் பிரதிபலித்தன. மேலும் பிம்பவாதம் (Imageism)1909 இல் லண்டனில் ஆங்கில கவிஞர் டி.இ. ஹுல்ம் என்பவரால் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிரெஞ்சு இலக்கிய விமர்சகரான எப்.எஸ் . பிளிண்ட் கவிதைகளில் இந்த சோதனை முயற்சியை முன்னெடுத்தார். இவரும் ஹுல்மும் நண்பர்கள். இருவரும் இணைந்து சக படைப்பாளிகளை சந்தித்து மரபார்ந்த கவிதை மொழியை உடைத்து புதிய வடிவில் கவிதை உருவாக வேண்டும் என்பதை முன்வைத்தனர். மேலும் நவீனத்துவ கவிஞரான எஸ்ரா பவுண்ட் மேற்கண்ட குழுவை கண்டறிந்து அவர்களின் கருத்துருவோடு ஒத்துப்போனார். மேலும் அல்டிங்டன் போன்றவர்ளை இணைத்துக்கொண்டு பிம்பவாத கவிதைகளை முன்னோக்கத்தொடங்கினார். அது பின்னாளில் தீவிர பிம்பங்களைக் கொண்ட கவிதை இயக்கமாக வளர்ந்தது. அந்த இயக்கம் பின்வரும் கூறுகளைக் கொண்டிருந்தது.
"பொருளின் நேரடியான அணுகுமுறை முழுமுதல் வார்த்தைகள் என்பதே கிடையாது. ரிதத்தைப் பொறுத்தவரை இசையின் தொடர்ச்சியான கோர்வையாக இருக்க வேண்டும்.தன்னிலையின் பொருளை முழுமையாக விடுவித்தல் சுதந்திர சொற்கள் கவிதைகளில் பயன்படுத்தப்படல் பொதுப் பேச்சுமொழியை பயன்படுத்தல் மற்றும் சரியான வார்த்தைகளைக் கவிதையாக்கல்"
மேற்கண்ட அம்சங்களை நவீனத்துவக் கவிதையின் தீர்மான சக்தியாக மாற்ற முடிவெடுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தினர். அவர்கள் கூர்மையான மொழியையும், பிம்பத்தையும் கவிதைகளில் உட்புகுத்தினர். அவர்களின் செயல்பாடுகள் ஆங்கில இலக்கிய உலகில் இருபதாம் நூற்றாண்டின் கடைசிவரை பெரும் தாக்கத்தைச் செலுத்தின. சிறந்த கவிஞர்கள் உருவாயினர்.
நவீனத்துவக் கவிதைகள் இவ்வாறாக நகர, அதற்கு இணையாக புனைவும் பயணித்தது. டி.எச். லாரன்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோசப் ஹன்ராட், உல்ப் போன்ற புனைவு இலக்கியவாதிகள் சிறுகதை மற்றும் நாவல் ஆகியவற்றால் தங்களை முன்னிறுத்தி்னர். அவர்களின் படைப்புகள் நவீனத்துவத்தின் பல வடிவங்களை உள்வாங்கியதாக இருந்தன. எதார்த்தவாத படைப்பு தன்மையும் இவர்களிடம் இருந்தது. கதைவெளியின் சாரமும், கதாபாத்திரக் கட்டமைப்பும் ஒருங்கிணைந்து பயணித்தன.
மேற்கில் நவீனத்துவம் உருவாகி இலக்கியவெளியில் தன்னை நகர்த்தி வந்த வேளையில் தமிழில் ஆக்கபூர்வமான, தீவிர படைப்பு முயற்சிகள் சமகாலத்தில் நடந்தேறின. புதுமைபித்தன், மௌனி, வ.ரா, கு.பா.ராஜகோபாலன்், க.நா.சு, கரிச்சான்குஞ்சு, லா.சா.ராமாமிருதம், கு. அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோர் புனைவு வெளியில் சிறந்த முறையில் சஞ்சரித்தனர். எதார்த்தவாத மரபையும், நவீனத்துவப் புனைவு மரபையும் ஒருங்கியைந்த தன்மையோடு இவர்களின் புனைவு வெளி அமைந்தது.
அதே நேரத்தில் ந.பிச்சமூர்த்தி, சி.மணி, நகுலன்,வைத்தீஸ்வரன் போன்றவர்கள் கவிதை வெளியில் தீவிரமாக இயங்கினர். நவீனத்துவ மரபை உள்வாங்கிய பல கவிதைகள் இவர்களிடமிருந்து வெளிவந்தன. தெளிவான உருவகங்களையும், பிம்பம் மற்றும் குறியீடுகள் இவற்றை தாங்கி பரிணமித்தன இவர்களின் கவிதைகள். தற்போது தமிழ்க் கவிதை மற்றும் புனைவு வெளி ஒரு தேர்ந்த பரிணாமத்தை அடைந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT