Published : 08 Apr 2017 09:28 AM
Last Updated : 08 Apr 2017 09:28 AM
இனாம் அல்ல, உரிமை!
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வழிவகை செய்யும் இடஒதுக்கீடு என்பது ‘இனாம்’ அல்ல; மாறாக நெடுங்காலமாய் ‘உயர்’சாதி ஆளும் வர்க்கத்துக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே நிலவிவரும் வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுதான் என்ற மிக அழுத்தமான கருத்தைத் தன்னுடைய ‘இந்துத்துவாவும் மண்டலும்’ எனும் நூலில் பல ஆய்வுகள் செய்து விளக்கியிருக்கிறார் பேராசிரியர் வெ.சிவப்பிரகாசம். ஏற்கெனவே அவர் எழுதிய ‘பார்ப்பனரும் மண்டலும்’ எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இடஒதுக்கீடு குறித்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், இடஒதுக்கீட்டுக்கு எதிராக எழுந்த மாணவர் போராட்டத்தின் பின்னணி, அதனை இயக்கிய இந்துத்துவ சக்திகள், இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த விடாமல் அதிகார மையத்திலிருந்து செயல்பட்டுவரும் பிராமணர்களின் ஆதிக்க மனோபாவம் ஆகியவற்றைத் தன்னுடைய நூலில் 30 கட்டுரைகளில் பல்வேறு தகவல்களும் விளக்கியுள்ளார்.
- ரேணுகா
புத்தரும் பெரியாரும்
இந்தப் புத்தகத்தில் க. திருநாவுக்கரசு புத்தரின் கோட்பாடுகளை மெலிதாகக் கோடிட்டுக் காட்டுகிறார். அந்தக் கோட்பாடுகள் எங்கெல்லாம் பெரியாரின் கொள்கைகளுடன் ஒப்புமை கொள்கின்றன, எங்கெல்லாம் வேறுபடுகின்றன என்பதைப் பற்றி ஆசிரியர் விவாதிக்கிறார்.
புத்தரும் பெரியாரும் அரசு என்ற ஒன்றில்லாமலே அரசை நடத்தியவர்கள் என்றெழுதும் திருநாவுக்கரசு, ஆன்மா என்கிற கருப்பொருளை எடுத்துக்கொண்டு, இதைப் பற்றி புத்தருடைய கருத்துகளையும் பெரியாரின் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்.
மறுபிறப்புக் கொள்கையில் உடன்படும் புத்தரோடு பெரியார் எங்கே, எப்படி வேறுபடுகிறார் என்றும் திருநாவுக்கரசு விவாதிக்கிறார். புத்தர் ‘மக்கள் கருதும் எந்தப் பேயோ பிசாசோ என் முன் வரவில்லை’ என்று திருநாவுக்கரசு எழுதும்போது, புத்தரின் தோள் மீது பெரியார் கைபோட்டுக்கொண்டு நடந்துசெல்வதுபோல் தோற்றம் நம் மனதில் எழுகிறது.
- மானா
அறிவியல் உலகின் மறுபக்கம்
தமிழில் அறிவியல் புனைகதை நாவல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும் அறிவியல் ஆய்வுகள் தளத்தில் மர்மமான நகர்வுகளுடன் கதைக் களத்தைக் கொண்டுசெல்லும் நாவல்கள் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருக்கின்றன. அந்த வகையில் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் 'டர்மரின் 384' என்ற நாவல் அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் மர்மங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கிறது.
அறிவியல் ஆய்வு உபகரணங்களை விற்றுவருகிறார் கதையின் நாயகன் அபிஜீத். கனவுகளும், அதீத நேர்மையும் கொண்ட இளைஞன் வாழ்வில் எத்தகைய போராட்டங்களைச் சந்திப்பான் என்பதை நாயகனை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே ஆசிரியர் விளக்கிவிடுகிறார்.
'வாழ்வில் மீண்டும் வெற்றி பெற்றுத் தனது இலக்கை அடைத்துவிட மாட்டோமா?' என்று மும்பை வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் நாயகன், விஞ்ஞானி ஒருவரின் சதிவலையில் சிக்குகிறான். அதனைத் தொடர்ந்து அவனது வாழ்வு மேலும் சிக்கலாகிறது. பேராசை மனிதர்களால் உருவாக்கப்பட்ட வலையிலிருந்து அபிஜீத் தனது காதலி உதவியுடன் மீள்கிறானா? வெளிநாட்டுக்கு விற்கப்பட்டுவிட்ட இந்திய மருத்துவ மூலக்கூறு 'டர்மரின் 384'-ஐத் தேடும் முயற்சியில் இறங்கும் அபிஜீத்தும் அவன் காதலியும் வெற்றியடைந்தார்களா? என்பவையெல்லாம் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
சமகால அறிவியல் உலகில் நடக்கும் அரசியலை இந்த நாவல் பேசுகிறது. முக்கியமாக, இந்தியாவில் மருத்துவ ஆய்வுகள் நடக்கும் விதத்தையும் ஆராய்ச்சியாளர்களும் உயர்மட்டத்திலுள்ள அரசியலுக்கு எவ்வாறு பலியாகிறார்கள் என்ற அறிவியல் ஆய்வு நிலையின் அவலத்தையும் கதையின் பல்வேறு கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன.
அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக் கிடையேயான சொல்லப்படாத ஒப்பந்தம், சர்வதேச அளவில் மருந்துகளுக்கான காப்புரிமை (பேடண்ட்) எப்படிப் பெறப்படுகிறது. கதையின் விறுவிறுப்பான ஓட்டத்தின் இடையே அறிவியல் ஆய்வுகளை எளிதாக வாசகர்களிடம் புரிய வைக்க எளிய எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் கையாண்டிருப்பது சிறப்பு.
மருத்துவ உலகில் உள்ள தனிமனிதப் பேராசைகளால் நாட்டின் அறிவியல் அறிவு எவ்வாறு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது என்ற, யாரும் பேசாத அரசியலை ஆசிரியர் பேச முயற்சித்திருக்கிறார்.
-இந்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT