Published : 21 Jun 2017 10:04 AM
Last Updated : 21 Jun 2017 10:04 AM

திசையில்லாப் பயணம் 11: மனித முகம்!

நான் போலந்து வார்ஸாவில் இருந்தபோது (1981-1986) எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று. ஒரு கிராமத்துக்குச் சென்ற அனுபவம். அப்போது ராணுவ ஆட்சியின் உச்ச நிலை.

வார்ஸாவில் இருந்து 6 மணி நேர பேருந்துப் பயணத்தில், கோனின் என்ற ஒரு கிராமம். அது வார்த நதிக்கு அருகே இருந்தது. அந்தக் கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், மத்திய நூற்றாண்டுகளில் ஒரு போலந்து கிராமம் எப்படி இருந்திருக்குமோ, அதை எடுத்துக் காட்டும் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக, அரசாங்கம் அதை வைத்திருந்ததுதான்.

அந்தக் கிராமத்தை நானும் என் மனைவியும் பார்க்க வேண்டுமென்று என் மாணவிகள் சொன்னார்கள். நான்கு மாணவிகள் கூட வருவதாகச் சொன்னார்கள். அந்தக் கிராமத்தை ஒட்டியிருந்த ஒரு சிறிய நகரத்தில் இறங்கினோம். நவீன காலத்து வாடை அடிக்கக் கூடாதென்பதற்காக, அந்தக் கிராமத்துக்குள் காரோ, பஸ்ஸோ எதுவும் வரக் கூடாதென்ற தடை இருந்தது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதென்ற ஏற்பாடு.

அந்தச் சிற்றூருக்குப் போயிறங்கியதும், எங்களுக்கு ஏற்பாடாகியிருந்த ஒரு சிறிய விடுதியில், சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அந்தக் கிராமத்துக்குப் புறப்பட்டோம்..

அது குளிர் காலம். வானத்தில் இருந்து பனிமலர்கள் கீழே விழுந்து கொண்டிருந்தன.

கிராம ‘மியூஸிய’த்தைப் பார்க்க வந்தவர்கள் என் மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. காரணம் அவள் உடை. காஞ்சிவரம் புடவை, அதற்கு மேல் ஓவர் கோட். நான் எவ்வளவு சொல்லியும் ‘பேண்ட்’ அணிய மறுத்துவிட்டாள்.

கிராமத்தைச் சென்றடைந்ததும், திடீரென்று 15-ம் நூற்றாண்டுக்குப் போய்விட்டதைப் போல ஓர் உணர்வு. அந்தக் கிராமத்து வீடுகளில் இருந்தவர்கள், 15-ம் நூற்றாண்டு ஐரோப்பிய உடைகளில் இருந்தார்கள். குதிரைகளில் சிலர் சவாரி செய்துகொண்டிருந்தனர். அவர்கள் உடையைக் காட்டிலும் என் மனைவியின் உடைதான் அவர்களுக்கு அதிசயமாக இருந்திருக்கிறது!

கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த மண்பாண்டங்கள், பெரிய பெரிய ஜாடிகள், அவற்றை நிர்வகிக்க அமர்த்தப்பட்டிருந்த இளைஞர்களும் மத்திய நூற்றாண்டுக் காலத்திய போலிஷ் மொழி பேசியதாக என் மாணவிகள் சொன்னார்கள்.

நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுச் சிற்றுருக்குத் திரும்பி வந்தபோது இளம் வெய்யில். வீதியில் இருந்த பனி மலர்கள் வெய்யிலில் இறுகிக் கண்ணாடியின் தோற்றத்துடன் இருந்தன. மிக எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் வழுக்கிவிடும்.

என் மனைவி வழுக்கிக் கீழே விழுந்துவிட்டாள். நல்லவேளை, நாங்கள் தங்கியிருந்த விடுதி அருகே இருந்தது. அவளைக் கைத் தாங்கலாக அழைத்துச் சென்று, உள்ளே கட்டிலில் படுக்க வைத்தோம். பொறுக்க முடியாத வலியினால் கஷ்டப்பட்டாள்.

ஒரு டாக்ஸியில், கிராமத்துக்கு அருகே இருந்த ஒரு சிற்றூரில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நல்ல கூட்டம். அங்கிருந்த அந்த நகரத்து மக்கள் முதல் தடவையாக சேலை கட்டிய ஒரு பெண்ணை பார்த்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ‘ஜிப்ஸி’யா என்று என் மாணவிகளிடம் கேட்டார்கள். ‘இந்துஸ்கா’(இந்தியப் பெண்மணி) என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

போலந்தில் ஜிப்ஸிகள் இரண்டாம் உலகப் போருக்கு முன் நிறைய இருந்தார்களாம். அவர்களில் முக்கால்வாசிப் பேர் ஹிட்லரின் காஸ்-சேம்பரில் பலியானார்கள். அவர்கள் இந்தியாவில் இருந்து மத்திய நூற்றாண்டுகளில் ஐரோப்பாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் நாடோடிகள். ஒரே இடத்தில் பல நாட்கள் தங்க மாட்டார்கள். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட மொழியில் வடிவம் இழந்த இந்துஸ்தானிச் சொற்கள் நிறைய இருக்கும். கறுப்பு முடி, கருத்த கண்கள், நிறத்தில் மட்டும் ஐரோப்பியர்கள் மாதிரி இருப்பார்கள். போலிஷ் மக்கள் அவர்களுக்கு ஜோஸ்யம் தெரியுமென்று நம்பினார்கள்!

‘இன்று நான் வி.ஐ.பி. பொறாமைப்படாதீர்கள்’ என்றாள் என் மனைவி என்னிடம் வேதனையுடன் சிரித்துக்கொண்டே.

பரிசோதனையில் இடது காலில் எலும்பு முறிவு என்று தெரிந்தது. ‘இப்போது தாற்காலிகமாக் கட்டுப் போடுகிறோம். வர்ஷாவா (வார்ஸா) போய் cast போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார் அங்கிருந்த மருத்துவர்கள்.

‘உட்காரக் கூடாது படுக்கவைத்தே அழைத்துப் போங்கள்’ என்றார் அந்த அழகிய பெண் டாக்டர்.

விடுதிக்குத் திரும்பி வந்தபோது இருட்டிவிட்டது. வார்ஸாவுக்கு விடியற்காலைதான் ‘ட்ரெய்ன்’. பஸ்ஸில் என் மனைவியால் போக முடியாது. டாக்ஸியிலும் அதே பிரச்சினைதான்.

என் மாணவி ஒருத்தி புகைவண்டிக்குப் பயணச் சீட்டுகள் வாங்கிக்கொண்டு வந்தாள்.

விடியற்காலை 4 மணிக்கு வண்டி. ஸ்டேஷன் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. விடியற்காலை 2.33 மணிக்கு டாக்ஸி அழைத்து வர இரண்டு மாணவிகள் சென்றார்கள். அரை மணி நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. எங்களுக்கு ஒரே கவலையாக இருந்தது.

10 நிமிஷங்கள் கழித்து, வாசற்கதவு பலமாகத் தட்டப் படும் சத்தம் கேட்டது.

ஒரு மாணவி போய் திறந்தாள்.

டாக்ஸி கொண்டுவரப் போன இரண்டு பெண்களும் இரண்டு போலீஸ்காரர்களுடன் திரும்பி வந்திருந்தார்கள்.

‘‘என்ன பிரச்சினை?’’ என்று கேட்டேன்.

‘‘இப்போது ராணுவ ஆட்சி அல்லவா? இரவு முழுவதும் ஊரடங்குச் சட்டம். யாரும் நடமாட முடியாது. எங்களை சாலிடாரிட்டி (அரசானக எதிர்ப்பு) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் இவர்களுக்கு. புரொஃபஸர் மனைவிக்குக் காலில் எலும்பு முறிவு, உடனே வார்ஸா போக வேண்டும். ஸ்டேஷனுக்குப் போக டாக்ஸி தேடி வந்தோம் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். பானி (மேடம்) இந்திராவை (பேஷண்டைப்) பார்க்க வேண்டுமென்றார்கள். அழைத்து வந்திருக்கிறோம்’’ என்றாள் ஒரு மாணவி.

அவர்களை உள்ளே நான் அழைத்துச் சென்றேன். கட்டிலில், பெரிய கட்டு போடப்பட்ட நிலையில் படுத்திருந்தாள் என் மனைவி.

அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்கள் அந்த போலீஸ் போலிஷ் இளைஞர்கள். பிறகு என் மாணவிகளிடம் போலிஷில் வேகமாக எதோ சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை.

நடாலியா (மாணவிகளில் ஒருத்தி) சொன்னாள்: ‘வாசலில் போலீஸ் வேன் இருக்கிறது. ஸ்ட்ரெச்சர் இருக்கிறது. வண்டியில் இன்னும் இரண்டு போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஸ்டேஷனுக்கு உடன் வந்து டிரெய்னில் ஏற்றிவிடுவதாகச் சொல்கிறார்கள், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால்...’’

என் மனைவி, அவர்களைப் பார்த்துப் புன்னகையுடன் ‘ஜெங்குயா(ங்) என்றாள். ‘ஜெங்குயாங்’ என்றால் போலிஷில் ‘நன்றி’என்று அர்த்தம்.

இதை எதிர்பார்க்காத அந்தப் போலீஸ்காரர்களின் முகங்கள் மலர்ந்தன. இருவருக்கும் வயது, இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். உடனே அவர்கள் செயல்படத் தொடங்கினார்கள். ‘ஸ்டெச்சரை’எடுத்துக்கொண்டு வந்தான் ஒருவன். இன்னொருவன், பிளாஸ்கில் தேநீர் கொண்டுவந்தான்.

டிரெயினில் ஏறியதும் என் மனைவி புன்னகையுடன் சொன்னாள்: ‘கிராம மியூஸியத்தைப் பார்த்ததைக் காட்டிலும் இதுதான் நல்ல அனுபவம். இப்பொ எனக்கு வலியே தெரியலே. நம்மூர்லே இப்படி நடந்திருக்குமா?’

‘‘ஒப்பிட்டுப் பேசாதே. நல்ல மனிதர்கள் இருக்கும் எல்லா இடத்திலும் நடக்கும்’’ என்றேன் நான்.

- பயணிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x