Last Updated : 04 Jun, 2017 11:32 AM

 

Published : 04 Jun 2017 11:32 AM
Last Updated : 04 Jun 2017 11:32 AM

அஞ்சலி: அப்துல் ரகுமான்- புல்லாங்குழலால் எழுதிய கவிஞன்

பிறப்பு: 9.11.1937 இறப்பு: 2.6.2017

கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றிக் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்: “நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும்போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்துவிட்டார்!’’

ஒரு கவிஞன் பிறக்கும்போது கவிஞன் மட்டுமல்ல; கூடவே ஒரு புதிய காலமும் பிறக்கிறது. அந்தக் காலம் எப்போதும் நிகழ்காலமாகவே இருக்கிறது. “காலா என் காலருகே வாடா!’’ என்று பாரதி அழைப்பதும், ‘‘கவிஞன் யானோர் காலக் கணிதம்…” என்று கண்ணதாசன் உரைப்பதும் அந்தப் பெருமிதத்தில்தான். இப்படி வாழையடி வாழையாக வந்துதித்த கவிதைத் தமிழில் இப்போது நமக்குமுன் விரிந்து நிற்கும் தேன்கதலி கவிக்கோ அப்துல் ரகுமான்.

கவிதைகளை வண்ணத்துப்பூச்சிகள் மொய்க்கும் காலம் அவருடையது; அவற்றில் ஒரு வண்ணத்துப்பூச்சி என்னுடையது. கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் அவர்.

ஹைகூ என்றால் என்ன?

கஜல் என்றால் என்ன?

கவ்வாலி என்றால் என்ன?

இவ்வாறு பிறமொழிகளின் கவிதைகளையும், கவிஞர்களையும் ஆற்றுப்படுத்தியவர் அப்துல் ரகுமான். அவருக்குப் பல மொழிகள் தெரியும்; அவற்றின் அரிய இலக்கியங்கள் தெரியும்; எந்த மொழிகளில் கவிதைகள் எழுதப்பட்டாலும் கவிதைக்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் கவிதையின் தாய்மொழி. அதை ஒப்பாய்வோடு உணர்ந்து எங்களுக்கு உணர்த்தியவர் கவிக்கோ.

சிற்றிதழ்களைக் கடந்து உன்னதமான உலகக் கவிதைகளை வணிகப் பத்திரிகைகளுக்குக் கொண்டுவந்து அதற்காகப் பரந்துபட்ட வாசகர் தளத்தை, கவிதைக்கென்றே எதிர்பார்க்க வைத்தார். அந்த எழுத்துகள் வாசகர்களுக்கு ஆயிரம் கதவுகளைத் திறந்துவைத்தன.

வாணியம்பாடியில் அவர் பேராசிரியராகப் பணியாற்றியபோது அங்கே அடிக்கடி மின்வெட்டு இருந்திருக் கிறது. மின்சாரத் தட்டுப்பாடு ஊரை யெல்லாம் இருட்டுக்குள் திக்குமுக்காட வைத்திருக்கிறது. அந்த நேரத்தில் அங்கே உள்ள வணிகச் சங்கங்களும் தொழிற்சங்கங்களூம் ஒரு துண்டறிக்கையை விநியோகித்தார்கள். மின்சாரத் தட்டுப்பாட்டை அதில் அவர்கள் கவிதை மொழியில் கவனப்படுத்தியிருந்தார்கள்.

‘சின்னஞ்சிறுசுகள்

இங்கு

இப்போதெல்லாம்

மரங்களில் அல்ல

மின்சாரக் கம்பிகளில்

ஊஞ்சல் கட்டி

உற்சாகமாக விளையாடுகிறார்கள்

கம்பி மேல் நடந்து சர்க்கஸ் காட்டும்

கழைக் கூத்தாடிகள்

மின்சாரக் கம்பிகள் மீதே

அஞ்சாது எப்போதும்

அலுங்காது நடக்கிறார்கள்

எங்கள் ஊர் அரசியல் கட்சிகள்

தோரணம் கட்ட

சணல் கயிறுகள் வாங்குவதில்லை

மின் கம்பிகளே

போதுமென்கிறார்கள்

நகராட்சித் தேர்தலைப் போல

எப்போது வரும்

என்றும் சொல்ல முடியவில்லை

விடுமுறைக்கு வரும் வீரனைப் போல

எப்போது போகும் என்றும்

சொல்ல முடியவில்லை.’

அந்த ஊர் இளைஞர்கள் இப்படிப் பிரச்சினைகளையெல்லாம் அங்கதச் சுவையோடு கவித்துவமாகக் கவனப்படுத்தியதற்கு அப்துல் ரகுமானின் ஆழ்ந்த கவிமனம்தான் காரணம். அவரிடம் படித்த மாணவர்களையெல்லாம் அவர் தனது கவித்துவத்தால் கட்டிப்போட்டார். அவர் ஊற்றிக்கொடுத்த கவிதையின் கட்சுவையில் அவர்கள் மயங்கிக் கிடந்தார்கள்.

தெருவிளக்கைப்

பற்றிய அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று:

‘மறந்தது

திடீரென்று

ஞாபகம் வந்ததுபோல்

சட்டென்று எரிந்தது

தெருவிளக்கு’

அப்துல் ரகுமானின் இந்த வரியை வியந்து ‘புதுமைப்பித்தனைப் புரட்டிவிட்டுப் போவதைப் போன்ற ஒரு அசுர வரி’என்று பாராட்டியிருப்பார் வலம்புரிஜான். இதை நான் புதுமைப்பித்தனைப் புரட்டிப் போடுகிற வரியாகப் பார்க்கவில்லை; புதுமைப்பித்தன்கள் விளைவதற்குத் தமிழின் நிலத்தைப் புரட்டிப்போடும் வரியாகத்தான் உணர்கிறேன்.

தலைகீழாகச் சிந்தித்தாலும் நேராகச் சிந்திக்கிறவர் அப்துல் ரகுமான். அவருடைய ‘பித்தன்’ தொகுப்பு தமிழில் அரிதானது. வாழ்க்கையை உதறி மடித்த கவிதைகள் அவை.

பு த்தகங்களே…

சமர்த்தாயிருங்கள்

குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்

- என்கிறார் அப்துல் ரகுமான்.

ஒருமுறை இசைஞானி இளையராஜாவை அப்துல் ரகுமான் சந்தித்தபோது, “இசை தான் என் முதல் காதலி; எவ்வளவோ முயன்றும் அவள் கிடைக்கவில்லை. எனவே அவளுடைய தங்கையான கவிதையைக் கைப்பிடித்துக்கொண்டேன்” என்று சொல்லியிருக்கிறார். உடனே இளையராஜா, “இல்லை… இல்லை. கவிதை இசையின் தங்கையல்ல; அவளேதான்” என்று கூறியிருக்கிறார்.

‘இசை

வார்த்தை ஆடை அணியும்போது

அதற்குக் கவிதை என்று பெயர்

அது ஆடை களைந்து

நிர்வாணம் ஆகும்போது

அதற்கு இசை என்று பெயர்.’

- என்கிறார் அப்துல் ரகுமான்.

இலக்கியத்தைப் போலவே இசையிலும் அவருக்கு ஓர் ஈடுபாடு- மயக்கம் கரைதல் உண்டு. இரண்டையும் இணைக்கும் மனம் அவருடையது.

“முரண்பாடுகளை நேர் நிறுத்தி அவற்றின் மோதலில் வெளிச்சப் பொறிகளைக் கொட்டச் செய்வார்” என்று கலீல் ஜிப்ரானைக் குறித்து என்.ஆர்.தாசன் குறிப்பிடுவார். அந்த வெளிச்சப் பொறிகளின் தொடர்ச்சிதான் அப்துல் ரகுமானின் எழுதுகோலிலிருந்து கொட்டிக்கொண்டிருந்தது.

பூக்களில் மை தொட்டுப் புல்லாங்குழலால் எழுதியவர் மவுனமாகி விட்டார். அவரது கவிதையின் ‘சுட்டுவிரல்’ பறவைகளின் பாதையை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இன்னும் இன்னும் எழுத வைத்திருந்த வெள்ளைத்தாள்கள் அடிவானத்தில் மழை மேகங்களாக மிதந்துகொண்டிருக்கின்றன.

‘ஒருவர் மொழியை

ஒருவர் அறியாமல்

இரவும் நானும்

மொழிபெயர்ப்பாளனாய்

அமைதி’

- இவை அப்துல் ரகுமான் எழுதிய வரிகள். அந்தப் பேரமைதி யின் பெருவெளியில்தான், இப்போது அவர் தனது சிறகுகளை விரித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறார். கவிஞனுக்கு வாழ்வும் மரணமும் ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்கு. அவ்வளவுதான்.

- பழநிபாரதி, கவிஞர்- திரைப்படப் பாடலாசிரியர், தொடர்புக்கு: palanibharathi14@gmail.com



அப்துல் ரகுமான் நூல்கள்

அப்துல் ரகுமானின் எழுத்துலகம் என்பது கவிதைகள், கவிதைகளைக் குறித்த கட்டுரைகள், உலகக் கவிதைகள், மெய்யியல் கட்டுரைகள், ஆய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு, பதிப்பு என்று மிகவும் விரிவானது. அவருடைய நூல்கள் அனைத்தையும் நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட அவருடைய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது:

கவிதைத் தொகுப்புகள்:

பால் வீதி (1974), நேயர் விருப்பம் (1978), சொந்தச் சிறைகள் (1987), சுட்டுவிரல் (1989), ஆலாபனை (1995, சாகித்ய அகாடமி பரிசுபெற்ற தொகுப்பு), பித்தன் (1998), மின்மினிகளால் ஒரு கடிதம் (2004), தேவகானம் (2011), கவிக்கோ கவிதைகள் (2013).

கட்டுரை நூல்கள்:

அவளுக்கு நிலா என்று பெயர் (1986), முட்டைவாசிகள் (1986), பூப்படைந்த சப்தம் (1999), இது சிறகுகளின் நேரம் 1 & 2 (2005, 2014).

மொழிபெயர்ப்பு: தாகூரின் ‘சித்ரா’ (2005).

பதிப்பு: குணங்குடியார் பாடற் கோவை (1980).

அப்துல் ரகுமான் நூல்களை வாங்குவதற்கு: நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17. 044-2834 3385

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x