Last Updated : 30 Apr, 2017 03:31 PM

 

Published : 30 Apr 2017 03:31 PM
Last Updated : 30 Apr 2017 03:31 PM

உலக அரங்கம்: புதிய காற்றைச் சுமந்து வரும் கதைகள்

சமீபத்தில் வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பு ‘சுல்தானின் பீரங்கி’தமிழுக்குப் புதிய காற்றைச் சுமந்துவருகிறது. இதன் மொழிபெயர்ப்பாளர் கார்த்திகைப் பாண்டியன் சமகாலச் சிறுகதையாளர். அவரது தேர்வும் வாசிப்பவருக்கு விலகலை அளிக்காத மொழியாக்கமும் கதைகளை நெருங்க உதவுகின்றன.

இத்தொகுதியின் மைய இழையென எதையும் பகுத்துணர முடிவதில்லை. அலைகிறவர்களால் அலைகழிக்கப்படுகிறவர்களால் ஆன கதைகள் என இவற்றை ஏகதேசமாகச் சுட்டலாம். சில கதைகள் அளிக்கும் மாறுபட்ட வாசிப்பனுபவம் உறங்கிக் கிடக்கும் படைப்பின் விதைகளை உசுப்புகின்றன. குறிப்பாக இரண்டு கதைகள். அவற்றுள் ஒன்று டொனால்ட் ஆண்ட்ரிமின் (அமெரிக்கா) ‘இன்னொரு மன்ஹாட்டன்’.

இந்த நெடுங்கதையின் கரு தமிழுக்குப் பழக்கமானது. கள்ள உறவு. இரு இணைகள். அவர்களுக்கிடையே பரஸ்பரம் மாறி அமைந்துவிடும் உறவு. அந்நால்வரையும் இணைத்த புள்ளிகளைத் தொட்டும் வட்டமிட்டும் உள்நுழைந்து சென்றும் நவீன வாழ்வின் அபத்தம், சோர்வு, பதற்றம், கசப்பு போன்ற உணர்வுநிலைகளைத் தீவிரமாகப் பேச விழைகிறது இக்கதை. அமெரிக்க இணையர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டிருப்பினும் ஆண்ட்ரிம்மின் எழுத்தாக்க முறை அப்பட்டமான யதார்த்தக் கதைகள் அளிக்கும் சலிப்பிலிருந்து நம்மை விடுவிக்கிறது. ஒரே நேரத்தில் இரு வேறு பகுதிகளில் நிகழும் சம்பவங்களைப் பின்னிச் செல்வதன், அடுக்குவதன் வழியே வாசிப்பின் முன்முடிவுகளை குலைக்கிறது.

தமிழில் பரிசோதனை, மாற்றுக் கதைசொல்லல் உத்தியில் வெளிவந்த படைப்புகள் மூளை நரம்புகளைக் கருகச் செய்யக்கூடிய அபாயகரமான வஸ்துகள் என்பதால் அவற்றை நெருங்க மனத்திடம் வேண்டும். இத்தொகுதியிலுள்ள ரூயி மேனுயேல் அமராலின் (போர்ச்சுக்கல்) குறுங்கதைகளின் வடிவத்தால் ஆன ‘கிட்டத்தட்ட பத்துக் கதைகள்’ அதற்கு நேர் எதிரானது. படைப்பூக்கத்துடன் கற்பனையைக் கைக்கொள்ளும் அமரால் அதனாலேயே வாசிப்பவரின் விலா எலும்புகளில் சிறகை முளைக்கச் செய்கிறார். வறட்டுத்தனமான கற்பனைகள் அளிக்கும் ஒவ்வாமைகளுக்கு மாறாக ஒன்றுக்கொன்று வேறுபட்ட இந்தப் பத்துக் குறுங்கதைகளும் அளிக்கும் ஆசுவாசமும் விடுதலையுணர்வும் அளப்பரியன.

போர்ச் சூழலில் சொந்த நில மக்களே படைவீரர்களின் கண்களுக்குள்ளும் கைகளுக் குள்ளும் அகப்பட்டு அல்லலுறுவதைக் குறைந்த சொற்களில் காட்டும் ராக்சென் கேவின் (அமெரிக்கா) ‘லாக்ரிமோசா’. கிராமத்தைச் சுற்றி வளைத்து நோட்டமிட்டு அமர்ந்திருக்கும் போர்வீரர்கள் எதிர்ப்பாளர்களைக் கொன்றழித்து ‘அமைதி’யை நிலைநாட்டுவதைச் சிறுவனின் மனம் வழி சொல்லும் பென் ஓக்ரியின் (நைஜிரியா) ‘யுத்தத்தின் நிழலில்’ ஆகிய இரு கதைகளும் நடக்கும் இடங்களின் பின்னணி வேறாக இருப்பினும் அவை பேசும் அரசியல் கிட்டத்தட்ட ஒன்றே.

தங்கியிருக்கும் விடுதியறையையே வீடாக எண்ணிக்கொள்ளும் நபரின் புலம்பெயர் வாழ்வின் அவலத்தை ஒரு இரவுக்குள் அவர் சந்திக்க நேரும் ஆட்களால் சித்தரிக்க முனையும் ஷம்யேல் யூசுப் ஆக்னனின் (ஹுப்ரு) ‘இரவு’ குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதை. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக யுத்தமும் புலம்பெயர் வாழ்வும் அளித்த ரணங்களை, அதன் உக்கிரத் தருணங்களை ஈழ இலக்கியத்தின் வழி எதிர்கொண்டவர்கள் தமிழ் வாசகர்கள். போர் உருவாக்கும் சூழல் சிற்சில மாறுபாடுகளுடன் உலகமெங்கும் ஒன்று தான் என்னும் புரிதலை மட்டுமே இம்மூன்று கதைகளும் அளிக்கின்றன.

யங் ஹா கிம்மின் (தென்கொரியா) ‘மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனுக்கு என்னதான் நேர்ந்தது?’. அந்த நிகழ்வுக் கண்ணிகளின் வழியே நவீன வாழ்வின் விதிகள், நடைமுறைகள் இருத்தலின் பாசாங்கை, கோரமுகத்தைக் காட்டி நகர்கின்றன. மாட்டிக்கொண்ட அந்த மனிதனைக் கதையின் இரண்டாம் பக்கத்திலேயே கண்டுகொள்ளும் கதைசொல்லி முப்பது பக்கத்தைக் கடந்த பின்னும் அவனை மீட்க வழியற்றிருக்கிறான். மேற்கொள்ளும் முயற்சிகளும் பிறரால் புறமொதுக்கப்படுகின்றன. அந்த மனிதனுக்கு நேர்ந்தென்ன என்பது தெரியாத நிலையில் கதையும் முடிந்துவிடுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு மனிதனை இயந்திரம்போல முடுக்குவதையும் அதன் கட்டளைகள் சகமனிதனைப் பொருட்படுத்த இயலாத அளவுக்கு வலுவானவை என்பதையும் உட்கூறாகக் கொண்ட கதையிது. கீழைத்தேய ஆன்மாவின் தேடலுடன் கனவைப் பின்தொடர்ந்து போகிறவன் தன் அலைச்சல்களின் வழி அக்கனவின் அர்த்தத்தைத் திடுக்கிடலுடன் அறிவதையும் அடைவதையும் காட்டும் பெமா செடானின் (திபெத்) ‘நாடோடி இசைக் கலைஞனின் கனவு’ போன்றதொரு ஆக்கத்தை மேற்கின் மனதால் கற்பனைசெய்ய இயலாது என்றே தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய-ஆஸ்திரேலிய எழுத்தாளாரான அரவிந்த் அடிகாவின் ‘சுல்தானின் பீரங்கி’தலைநகர் டெல்லியைக் களமாகக் கொண்டிருப்பினும் நவீன தமிழ்ப் புனைகதையொன்றை வாசிப்பதுபோன்றே இருக்கிறது. ஒரே இடத்தில் சுற்றி வராத செறிவூட்டப்பட்ட யதார்த்தக் கதை இது. கதையின் வழித்தடம்கூட ஓரளவு பழக்கமானது என்றபோதும் நேர்த்தியான உரைநடை, கதையைக் கொண்டு செலுத்தும் உந்து விசையாக அமைந்திருக்கிறது.

சில கதைகள் நீங்கலாக, பெறுமொழிக்கு உரமாக ஆகக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப் பட்டு உருவான மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தீவிரத்தன்மை கொண்ட இந்தப் படைப்புகளை நம்பகமான மொழிபெயர்ப்பால் கார்த்திகைப் பாண்டியன் நமக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துவிடுகிறார். பரந்த இவ்வுலகில் இந்தக் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன, பெயர்க்கும்போது சந்தித்த இடர்கள் என்ன ஆகியவற்றை அவர் எழுதியிருக்கலாம். அவை இந்தக் கதைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் மீது மேலும் வெளிச்சம் பாய்ச்சியிருக்கும். பிற மொழி எழுத்தாளர்களின் புகைப்படங்களும் குறிப்புகளும் தரப்பட்டிருக்கும் இடத்தில் ஆசிரியர்களின் பெயரை ஆங்கிலத்திலும் தந்திருக்கலாம். இதுபோன்ற சில நெருடல்களைத் தாண்டி, தமிழ்ப் புனைகதைகளின் புத்துயிர்ப்புக்குத் துணைபுரியக்கூடிய தொகுப்பாக இதை அடையாளம் காட்டலாம்.

கே.என். செந்தில், எழுத்தாளர், ‘அரூப நெருப்பு’ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர், தொடர்புக்கு: knsenthilavn7@gmail.com

சுல்தானின் பீரங்கி உலகச் சிறுகதைகள் தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கார்த்திகை பாண்டியன். எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. பக்.168 விலை.ரூ.150







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x