Published : 18 Oct 2013 05:42 PM
Last Updated : 18 Oct 2013 05:42 PM
பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக மாற்றும் வினைச்சொற்களுக்கும் துணை வினைகளுக்கும் வினைப்படுத்தும் வினை என்று பெயர். ஆங்கிலத்தில் வெர்பலைசர் (verbalizer). ‘துயர்’என்ற பெயர்ச்சொல்லும் ‘உறு’என்ற வினைச்சொல்லும் இணைந்து ‘துயருறு’என்ற வினைச்சொல் உருவாகிறது. ‘மோப்பம்’என்ற பெயர்ச்சொல்லும் ‘பிடி’ என்ற வினைச்சொல்லும் இணைந்து ‘மோப்பம்பிடி’என்ற வினைச்சொல் உருவாகிறது.
இப்படி உருவாகும் வினைச்சொற்களை ‘துயர் உறு’என்றும் ‘மோப்பம் பிடி’என்றும் பிரித்து எழுதக் கூடாது. அதேபோல் பெயர்ச்சொல்லின் இறுதியில் வேற்றுமை உருபைச் சேர்த்து ‘துயரை உறு’என்றோ ‘மோப்பத்தைப் பிடி’என்றோ எழுதக் கூடாது. இடையில் வேற்றுமை உருபைச் சேர்க்க முடிகிற சொற்களை வினைப்படுத்தப்பட்ட சொற்களாகக் கருத முடியாது. (எ.டு.) ‘கொலைசெய்’என்பது வினைப்படுத்தப்பட்ட சொல், ‘கொலையைச் செய்’வினைப்படுத்தப்பட்ட சொல் அல்ல, அது சொற்றொடர்தான். வினைப்படுத்தும் வினைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: அடி, அடை, ஆக்கு, ஆகு, இடு, உறு, செய், எடு, படு, படுத்து, பார், பிடி, புரி, போடு.
வினைப்படுத்தப்பட்ட சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:
கொட்டமடி, துன்பமடை, பொடியாக்கு, பொய்யாகு, கோலமிடு, தவிப்புறு, கைதுசெய், ஓட்டமெடு, அவசரப்படு, காயப்படுத்து, அடம்பிடி, பிரசவம்பார், பணிபுரி, தும்மல்போடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT