Published : 18 Oct 2025 06:48 AM
Last Updated : 18 Oct 2025 06:48 AM

மரபும் புதுமையும் | தீபாவளி மலர்கள்

தீபாவளி மலருக்கான மரபோடும் காலத்துக்கேற்ற புதுமையோடும் மலர்ந்திருக்கிறது இந்து தமிழ் திசை தீபாவளி மலர். நூற்றாண்டு கண்ட திரை ஆளுமைகள், ஆன்மிகம், சுற்றுலா, சிறுகதைகள், சிறப்பு நேர்காணல்கள், திரை அலசல்கள் எனப் பொங்கிப் பிரவகித்து நம் மனங்களை நிறைக்கிறது இந்த மலர்.

ஓவியர் மருதுவின் நேர்காணல் இதுவரை வெளியே தெரியாத அவரது சில பக்கங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. பின்னணிப் பாடகி பி.சுசீலாவைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் நம் நினைவுகளைக் கிளறுகின்றன. பாயசத்தில் மிதக்கும் முந்திரித் துண்டுகளைப் போல நகைச்சுவையும் பகடியும் சுவைகூட்டுகின்றன.

இந்து தமிழ் திசை
தீபாவளி மலர்
276 பக்கங்கள்
விலை: ரூ.175

பல்சுவை படைப்புகள்: ஆன்மிகம், கலை, இசை, சிறுகதை, கவிதை, சினிமா - சின்னத்திரை எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஏராளமான படைப்புகள். இவற்றுக்கு இடையே வரலாறு, சுற்றுலா, விளையாட்டு போன்றவையும் கவனம் ஈர்க்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொலைக்காட்சிகளின் ராசிபலன் சொல்லிவரும் வித்யாதரனின் நேர்காணல், கவனம் ஈர்க்கிறது. சமகாலத்தைப் பதிவுசெய்ததோடு அந்த நாள் நினைவுகளையும் அசைபோடும் வகையிலான நினைவலைகள் மனதுக்கு அணுக்கம். எல்லாத் தரப்பு வாசகர்களுக்கான இதழாகக் கைகளில் தவழ்கிறது விகடன் தீபாவளி மலர்.

விகடன்
தீபாவளி மலர்
400 பக்கங்கள் விலை: ரூ.190

பரவச அனுபவம்: லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில், இலக்கியம், ஆன்மிக, நகைச்சுவை, புராணம் எனச் சில தலைப்புகளுக்குள் மட்டுமே மலரின் உள்ளடக்கம் அடங்கிவிட்டாலும், ஒவ்வொன்றிலும் விரிவான படைப்புகள் அணிவகுத்து நிற்கின்றன. சிவசங்கரி, திருப்பூர் கிருஷ்ணன், தேவிபாலா, இரா.முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் மலர் முழுவதும் வியாபித்திருக்கின்றன.

பாக்யம் ராமசாமியின் ஹாஸ்யமும் பா.ராகவனின் அனுபவக் கட்டுரையும் கலகல ரகம். தெலுங்கு எழுத்தாளர் அப்பூரி சாயாதேவியின் கதை கௌரி கிருபானந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டிருப்பது இனிய ஆச்சரியம்.

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்
192 பக்கங்கள்
விலை: ரூ.200

ரசனைக்கு விருந்து: ஆன்மிக மணத்துடன் மலர்ந்திருக்கிறது கலைமகள் தீபாவளி மலர். மும்மயிலன் காப்பில் தொடங்கி கண்ணனின் யசோதை, கந்தன் அருள் அரசு குமரகுரு சுவாமிகள், அருணயின் அருள் மழை - பகவான் ரமணர், சத்ய சாய் சத்தியமே சாய் என அடுத்தடுத்து ஆன்மிகப் பக்கங்கள் விரிகின்றன.

ராஜேஷ்குமார், ‘காலச்சக்கரம்’ நரசிம்மா, தேவிபாலா, வித்யா சுப்ரமணியம் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளோடு, கவிதைகளும் கவனம் ஈர்க்கின்றன. சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய அன்னை சாரதாதேவி குறித்த கட்டுரையும், அஞ்சலை அம்மாள் குறித்த கட்டுரையும் இருவேறு முனைகள் என்கிறபோதும் இரண்டுமே பெண்ணின் பெருமையைப் பறைசாற்றுபவை.

கலைமகள் தீபாவளி மலர்
222 பக்கங்கள்
விலை: ரூ.200

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x