Published : 30 Sep 2025 07:01 AM
Last Updated : 30 Sep 2025 07:01 AM

சமூக மாற்றத்துக்கான கதைகள் | பொருள் புதிது

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்து நடை, உளவியலைக் கையாளும் விதம், கருத்தாழம், சமுதாயச் சிந்தனைகள் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை. அவரது சிறுகதைகள், நாவல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். யாருக்காக அழுதான், பாரிசுக்குப் போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சினிமாவுக்குப் போன சித்தாளு, பிரம்மோபதேசம், இறந்த காலங்கள், அக்னிப் பிரவேசம் போன்றவை அவற்றில் சில.

ஜெயகாந்தன் சிறுகதைகளில் இடம்பெறும் சாதாரண கதாபாத்திரங்கள்கூட அறிவு ஜீவிகளாகச் சித்தரிக்கப்படுவர். எடுத்துக் காட்டாக ‘இலக்கணம் மீறிய கவிதை’ சிறுகதையில் பாலியல் தொழிலாளி ஒருவர் தன் மீது அனுதாபப்படும் இளைஞனைப் பார்த்து, “நான் எப்படி இருக்கேனோ அப்படியே என்னைப் பார்க்க உங்களுக்குத் தெரியாதா? இது ஒரு தொழில்.

அவ்வளவுதானே? இந்தத் தொழிலோட சம்பந்தப்படாதவங்க தூரத்திலிருந்து என்னைத் திட்டட்டும்... வருத்தப்படட்டும்... இது ஒரு தொழில்னு தெரிஞ்சு, இங்கே போனா இது கிடைக்கும்னு வந்துட்டு நான் எதை விக்கிறேனோ அதையே வாங்க வந்தப்புறம் ஐயோ, உன் கதி இதுவான்னா அயோக்கியத்தனமில்லே” என்று சொல்வார்.

ஒவ்வொருவருடைய அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அவரது ‘அந்தரங்கம் புனிதமானது’ சிறுகதை. அதில் தந்தையின் நடத்தையில் சந்தேகப்படும் மகனிடம் தாய், “புருஷன் - மனைவி - மகன் - தாய் - தகப்பன் எல்லாரும் ஒரு உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.

ஆனா, ஒரு ஸெபரேட் இன்டிவஜுவல்-தனி யூனிட் இல்லையா? ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு. அதை கௌரவிக்க வேணும். யார் மேல நமக்கு மதிப்பு அதிகமோ அவங்க அந்தரங்கத்தை நாம் ரொம்ப ஜாக்கிரதையா கௌரவிக்கணும். என்னால நீ கேட்ட மாதிரி அவரைக் கேட்க முடியுமா? கற்பனை பண்ணகூடச் சக்தி இல்லையப்பா...ஓ! நீ என்ன செஞ்சிட்டே!” என்கிறார்.

யாரோ செய்த தவறுக்குப் பெண் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற கேள்வியைச் சமூகத்தில் எழுப்பியது ‘அக்னி பிரவேசம்’ சிறுகதை. மழை வேளையில் கயவன் ஒருவனால் களங்கப்படுத்தப்பட்டு வீடு திரும்பிய மகளிடம் தாய், “நீ சுத்தம் ஆயிட்டே..‌. ஆமா, தெருவிலே கடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதற்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டுப் பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி வேண்டாம் என்று விரட்டவா செய்யறார். எல்லாம் மனசு தாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும்..” என்கிறார். - க.ரவீந்திரன், ஈரோடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x