Published : 27 Sep 2025 07:41 AM
Last Updated : 27 Sep 2025 07:41 AM
மனித வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வெற்றியைவிட, தோல்விகளின் எண்ணிக்கைதான் அதிகம். வெற்றிகள் பெரும்பாலும் களிப்புகளைத்தான் தருகின்றன. ஆனால், தோல்விகள் தான் மேலும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன.
தோல்விகளைச் சந்திக்கும் மனிதன்தான் சவால்களை எதிர்கொள்ளும் மன வலிமையைப் பெறுகிறான். வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததே மனித வாழ்க்கை. இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதும் மனோபாவம் கொண்டவர்களால்தான் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். இந்த மனோபாவத்தை வாசகர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே ‘வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை...’ என்ற இந்நூலை கவிஞர் மு.முருகேஷ் எழுதியுள்ளார்.
வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை
மு.முருகேஷ்
விலை : 130
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
திண்ணை | தொல்லியல் அகழாய்வு சிறப்புரை: களம் இலக்கிய அமைப்பு சார்பில் 'சங்கத் தமிழனின் தொன்மையும் தொல்லியல் அகழாய்வுகளும்' நிகழ்வு, இன்று (27-09-2025) மாலை 5.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், ப்ளாசம் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார். மருத்துவர் எஸ்.செந்தில்குமார், மருத்துவர் சு.ஸ்ரீதரன், ஆர்.தங்கராஜ் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
அண்டனூர் சிறுகதைகள் - 100 வெளியீடு: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் எழுத்தாளர் அண்டனூர் சுரா சிறுகதைகள் - 100 இரண்டு தொகுதிகள் வெளியீட்டு விழா இன்று (27-09-2025) மாலை 5.30 மணிக்கு, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது. கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கவிஞர் கவிதைப்பித்தன், எழுத்தாளர் கவிப்பித்தன், ஒட்டடை பாலச்சந்திரன், பத்திரிகையாளர் வெ.சந்திரமோகன், கவிஞர் ஸ்டாலின் சரவணன், கவிஞர் ஜோ.டெய்சிராணி, நூலாசிரியர் அண்டனூர் சுரா உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
தமிழ் அறிஞர்கள் நாள்: சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக, 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா, இன்று (27-09-2025 சனிக்கிழமை) இரவு 8 மணி (இந்திய நேரம்) முதல் இணைய வழி நிகழ்வாக நடைபெற உள்ளது. மயிலை சீனி.வேங்கடசாமி மற்றும் ந.பிச்சமூர்த்தியின் 125வது பிறந்த நாள்விழா, குன்றக்குடி அடிகளார், ராஜம் கிருஷ்ணன், தி.க.சிவசங்கரன், இரா.சாரங்கபாணி ஆகியோரின் 100வது பிறந்த நாள் விழா இணைந்து கொண்டாடப்படும் இந்நிகழ்வில், முனைவர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் சு.வேணுகோபால், புதுவை பேரா. மு.இளங்கோவன், வட கரோலினா எழுத்தாளர் பழமைபேசி, வாஷிங்டன் எழுத்தாளர் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் அரசர் அருளாளர், சிகாகோ தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் பிரசாத் இராசாராமன் உள்ளிட்டோரின் உரையும் இடம்பெறுகின்றது.
விழா நிகழ்ச்சியினை நேரலையில் https://www.facebook.com/Chicago Tamil Sangam, https://www.youtube.com/Chicago Tamil Sangam ஆகிய இணையவழி இணைப்புகளில் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT