Published : 15 Sep 2025 05:58 PM
Last Updated : 15 Sep 2025 05:58 PM
சென்னை: 2025-ம் ஆண்டுக்கான அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசுக்கு ஜி.குப்புசாமி, அனுராதா கிருஷ்ணசுவாமி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநர் சிற்பி பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 2025-ம் ஆண்டுக்கான அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது தேர்வுக்கான நடுவர் குழு கூட்டம் மையத்தின் அலுவலகத்தில் செப்.10 அன்று நடைபெற்றது.
நடுவர்களாக திறனாய்வாளர் க.பஞ்சாங்கம், விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம், மொழிபெயர்ப்பாளர் மோ.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் ஒருமித்த தேர்வாக பின்வரும் மொழிபெயர்ப்பாளர்கள் பரிசுக்குரியவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர்.
முதல் பரிசு ரூ.2 லட்சம்: முதல் பரிசு இரு மொழிபெயர்ப்பாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அருந்ததிராயின் "சின்ன சின்ன விஷயங்களின் கடவுள்" ஆங்கில நாவலை அதே தலைப்பில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமிக்கும் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் நாவலை "மணல் சமாதி" என்ற தலைப்பில் மொழிபெயர்த்த அனுராதா கிருஷ்ணசுவாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
2-ம் பரிசு ரூ.50 ஆயிரம்: இந்த பரிசும் 2 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. டி.டி. ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய "மாதா ஆப்பிரிக்கா" என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்த குறிஞ்சிவேலனுக்கும் அப்துல் ரஸாக் குர்னாவின் "போரொழிந்த வாழ்வு" நாவலை தமிழில் மொழிபெயர்த்த கயலுக்கும் வழங்கப்படுகிறது.
3-ம் பரிசு ரூ.25 ஆயிரம்: மூன்றாம் பரிசாக 4 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அளிக்கப்படுகிறது. சார்லஸ் ஆலன் எழுதிய வரலாற்று நூலை பேரரசன் அசோகன் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த தருமி, ராபின் டேவிட்சன் எழுதிய பயண இலக்கியத்தை தமிழில் "தடங்கள்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்த பத்மஜா நாராயணன், தற்காலக ஆங்கில சிறுகதை தொகுப்பை “அழிக்க முடியாத ஒரு சொல்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த அனுராதா ஆனந்த், கெ.என்.சிவராஜ பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ஆராய்ச்சி நூலை “தமிழ் நிலத்தில் அகஸ்தியர்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த இஸ்க்ரா ஆகியோர் பெறுகின்றனர்.
அருட்செல்வரின் நினைவு நாளான அக்டோபர் 2-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் வள்ளலார் காந்தி விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT