Published : 26 Jul 2025 07:09 AM
Last Updated : 26 Jul 2025 07:09 AM
ஒரு த்ரில்லர் திரைப்படத்தைப் பார்க்கும் பரபரப்புடனும் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்புடனும் வாசகனை ஆழமாகவும் அதிர்ச்சியுடனும் இழுத்துச் செல்கிறது, இலங்கையைச் சேர்ந்த டிலுக்ஸன் மோகன் எழதியிருக்கும் ‘படுபட்சி’ நாவல். புனைவும் தன் வரலாறும் கொண்ட ‘ஆட்டோ பிக் ஷன்’ வகை நாவலான இது, இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவையும் அக்கனவு சுக்குநூறாக உடைந்த வலியையும் பேசுகிறது. இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில்
இன்று நடக்க இருக்கும் நிலையில், இந்நாவலாசிரியர் டிலுக்ஸன் மோகனிடம் உரையாடினோம்.
‘படுபட்சி’யை எங்கிருந்து தொடங்கினீர்கள்? - எங்கே என் வாழ்க்கையும் கனவும் நிராகரிக்கப்பட்டதோ, எங்கே என் வலி என்னைத் துரத்திக் கொண்டே இருந்ததோ, என் ஆதங்கம் எப்போது கேள்விக் கேட்கத் தொடங்கியதோ அங்கிருந்துதான் ‘படுபட்சி’ தொடங்கியது. தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை. எனக்கு என்ன நடந்தது என்பதன் மூலம் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்லும் முயற்சிதான் இது.
அதை விளக்கமாகச் சொல்லலாமா? - அப்பாவுக்கு நான் விமானியாக வேண்டும் என்று ஆசை. ஊரில் எங்காவது யாரையாவது பார்த்தால், என் மகன் பைலட்டாக போகிறான் என்றுதான் சொல்வார். சிறுவயதிலேயே அது என் மனதில் பதிந்துவிட்டது. பிறகு எனக்கு விமானம் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டது. இலங்கையில் இருக்கிற விமானங்கள் அனைத்தும் ‘அசம்பிள்’ பண்ணியது.
அங்கு தயாரித்தது அல்ல. அதனால் இலங்கையின் முதல் விமானத்தை நான்தான் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பிறகு அது என் கனவாகவும் மாறியது. ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். என் வகுப்பில் நான் மட்டுமே தமிழ் மாணவன். பாடப்புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சிங்களத்தில்தான் பாடம் எடுப்பார்கள்.
எனக்குச் சிங்களம் தெரியாது. சுயமாக படித்து தயார்ப்படுத்திக் கொண்டேன். ஒரு விமானம் உருவாக்குவதற்கான அனைத்தையும் தெரிந்துகொண்டேன். அது தொடர்பாகப் பேராசிரியர்கள் முன் நடத்திக் காட்டிய ‘பவர்பாயின்ட் பிரசன்டேஷன்’ அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு 40 நிமிடம் அவர்கள் தனியாக விவாதித்துவிட்டு,“அனுமதி வழங்க மாட்டோம்” என்றார்கள்.
“ஏன்?” என்றேன். “நீ தமிழன். இதை விடுதலைப் புலிகளுக்காகத் தயாரிக்க இருக்கிறாயா? அவர்கள்தான் படிக்க வைக்கிறார்களா?” என்று கேட்டார்கள். என் கனவு ஆரம்பத்திலேயே சிதைந்தது. இது முடிந்த மறுநாள், புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டு ‘நான்காவது மாடி’க்குக் கொண்டுச் செல்லப்பட்டேன். அது ஒரு சித்தரவதை. அதை எப்படி விளக்கினாலும் மற்றவர்களால் ஓரளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடியும். அதை அனுபவித்து, உயிரோடிருப்பதே பெரிய விஷயம்.
‘புலிகளுக்காக விமானம் தயாரித்து, எங்கே குண்டு போடப் போகிறீர்கள்?’ என்கிற ஒரே கேள்வியை நான்கு நாட்களாகத் திரும்பத் திரும்பக்கேட்டு சித்தரவதைச் செய்தார்கள். இதே போல பல ரணங்கள், கொடுமைகள். பிறகு இலங்கையில் இருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்றேன். இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். அந்த வலிகள்தான் இதை எழுதத் தூண்டியது.
அப்படின்னா நாவலில் எது புனைவு, எது புனைவல்லாதது? - பெரும்பாலும் தன் வரலாறுதான். நான் படிப்பதற்கும் இலங்கையின் முதல் விமானத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற என் கனவுக்கும் ஆதாரமாக இருந்தது, என் அம்மா. இதற்காக பல சொத்துகளை விற்றார். ஆனால், அவருக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது. அவரை இந்த நாவலில் பேச வைத்திருக்கிறேன்.
என் அம்மா பேசினால் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் எப்படிச் சொல்லியிருப்பார் என்பதை இதில் கூறியிருக்கிறேன். அதோடு கம்பீரமான அம்மாவாகவும் அவரை உலவ விட்டிருக்கிறேன். இது போல ஆஸ்திரேலியாவில் நடக்கும் சில விஷயங்கள், காலத்தை முன் பின் மாற்றியது புனைவாக இருக்கும்.
‘புலிகளிடம் கைப்பற்றிய விமானம்’ என்று நீங்கள் தயாரித்த விமானத்தை இலங்கை விமானப்படை, காட்சிக்கு வைத்திருப்பதாக நாவலில் கூறியிருக்கிறீர்களே... அது உண்மைதானா? - உண்மைதான். விமானம் தயாரிக்கக் கூடாது என்று கடுமையாக மிரட்டிய பிறகும் யாருக்கும் தெரியாமல் ஒரு விமானத்தைத் தயாரித்தேன். ஒரு கட்டத்தில் அதைத் தெரிந்துகொண்டு என்னைப் பிடித்துச் சித்தரவதை செய்தார்கள். பிறகு நான் தயாரித்து மறைத்து வைத்திருந்த விமானத்தை அவர்கள் கைப்பற்றிச் சென்றார்கள்.
அதைத்தான் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ரத்மனாலை என்ற இடத்தில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விமானம் ஒன்றையும் நான் தயாரித்த விமானத்தையும் வைத்திருக்கிறார்கள். அது என்னுடையது என்பது அவர்களுக்கே தெரியும்.
‘பஞ்ச பட்சி’ என்று சொல்லப்படுகிற ஐந்து பறவைகளின் பெயரை ‘படு பட்சி’ என்பார்கள். நீங்க இந்த தலைப்பைத் தேர்வு செய்ய காரணம் என்ன? - நான் இந்த நாவலை எழுதி முடித்ததும் எழுத்தாளர் ஷோபா சக்தியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அவருடைய எழுத்துகள் எனக்குப் பிடிக்கும். அவர் இந்நாவலை எடிட் செய்து தருவதாகச் சொன்னார்.
இந்த தலைப்பைத் தேர்வு செய்ததும் அவர்தான். நான் ‘காகித விமானம்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். பறக்காத பறவை என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். இதே நாவல் ஆங்கிலத்திலும் வர இருக்கிறது. அதற்கு ‘பேப்பர் பிளேன்’ என்றே தலைப்பு வைத்திருக்கிறேன்.
யுத்தத்துக்குப் பிறகு வருகிற ஈழ எழுத்தாளர்களின் படைப்புகள் இன்னும் அங்கு நடந்த வேதனைகளையே பேசுகின்றன. இப்போது அங்கு இருக்கும் நிலைமை பற்றி... இப்போதும் அங்கு நிலைமை என்ன மாறிவிட்டது? பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட என் அப்பா, சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்ய திட்டமிட்டதாகச் சொல்லி கைது செய்தார்கள். இப்போதும் அங்கு பழைய நிலைமைதான் இருக்கிறது. குண்டு, துப்பாக்கிச் சத்தங்கள் மட்டும் கேட்கவில்லையே தவிர மற்ற நிலைமை அப்படியேதான் இருக்கிறது.
அடுத்து என்ன எழுதுகிறீர்கள்? - பெரு நாட்டின் பின்னணியில் ஒரு நாவலை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் ‘கேர்ள் பிரண்ட்’ பெரு நாட்டைச் சேர்ந்தவர். அவருடன் அங்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள மனிதர்களின் கஷ்டம் எனக்கு இலங்கையில் இருக்கும் உணர்வைத் தந்தது.
அதனால் அதன் பின்னணியில் நாவல் எழுதுகிறேன். அங்கு மனித கடத்தல் எப்படி நடக்கிறது, அவர்கள் எப்படி அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்கிற பின்னணியிலான கதையாக இருக்கும்.
அத்துடன் இன்னொரு லட்சியமும் இருக்கிறது. எந்த நாடு இலங்கையின் முதல் விமானத்தைத் தயாரிக்கும் கனவைச் சிதைத்ததோ, அதே நாடு இவன் இலங்கையைச் சேர்ந்தவன் என்று பெருமையாகச் சொல்கிற ஒரு விஷயத்தைச் செய்ய இருக்கிறேன். என்னை விரட்டிய நாடே அதன்பிறகு மரியாதையுடன் அழைக்கும் என நம்புகிறேன். அதுவரை அதற்காகப் போராடுவேன்.
படுபட்சி
டிலுக்ஸன் மோகன்
கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை.
விலை: ரூ.250
தொடர்புக்கு: 94442 72500
- தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT