Published : 07 Jul 2025 10:08 AM
Last Updated : 07 Jul 2025 10:08 AM
சென்னை: திருக்குறளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ‘வகுப்பில் வள்ளுவர்’ புத்தகத்தில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி எழுதிய ‘வகுப்பில் வள்ளுவர்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் தலைமை வகித்து நூலை வெளியிட்டனர்.
அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் தே.சங்கர சரவணன், தமிழக பாடநூல் கழகத்தின் உதவி இயக்குநர் ப.சரவணன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர். நூலின் முதல் பிரதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் டாக்டர் சங்கர சரவணன் பேசும்போது, ‘‘தமிழில் திருக்குறள் சார்ந்து மட்டுமே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வந்துள்ளன. அந்த வகையில் தமிழ் பண்பாட்டின் மிகவும் முக்கியமான நூல் திருக்குறள். இதை காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். அந்த வகையில் உரையாடல் மூலமாக இந்த நூல் குழந்தைகளிடம் திருக்குறளை எடுத்துச் செல்கிறது. இதில் ஏராளமான கதாபாத்திரங்கள் இடம்பெறுவதால் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நினைவுப்படுத்துகிறது.
குழந்தைகளை மனதில் வைத்து எளிய நடையில் பள்ளிச் சூழல்களை மையப்படுத்தியே நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. அதேபோல், புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தகம் மூலம் பாடநூல் கழகம் விரிவான பணிகளை முன்னெடுத்துள்ளது’’ என்றார்.
அதைத்தொடர்ந்து தமிழக முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் பேசும்போது, ‘‘2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல் உணர்வோடு ஒன்றுசேர்ந்துள்ளது. இதை பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துச்செல்லும் வகையில் எழுத்தாக்கத்தை கொடுத்துள்ள நூலாசிரியருக்கு எனது பாராட்டுகள். தற்போதைய சூழல் குழந்தைகளுக்கு மன அழுத்தம் நிறைந்ததாக உள்ளது. அதை மாற்றியமைத்து மகிழ்ச்சியான சூழல்கள் உருவாக்க வேண்டும்.
இந்த புத்தகத்தை படிக்கும்போது நமது தமிழ் திறன் மேம்படும். அந்தளவுக்கு எழுத்து நடை, உரையாடல் பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன. புத்தகம் முழுவதும் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் விதமான கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. உலகளவில் திருக்குறள் 47 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பைபிளுக்கு பிறகு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இதுவாகும்’’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது, ‘‘தற்போதைய காலச்சூழலில் குழந்தைகள், மாணவர்களுக்கு நன்னெறி கருத்துகளை போதிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப மிகச்சிறந்த பணிகளை மமதி சாரி தனது நூல் மூலமாக முன்னெடுத்துள்ளார். திருக்குறளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்த நூல் மாணவர்கள் மத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.
நிறைவாக எழுத்தாளர் மமதி சாரி நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கினார். ரஷ்ய கலாச்சார மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் ததனொவ், அண்ணா நூலகத்தின் தலைமை நூலகர் எஸ்.காமாட்சி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT