Published : 18 Apr 2025 06:29 AM
Last Updated : 18 Apr 2025 06:29 AM
சென்னை: தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருதை உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்கினார்.
‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025 வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பங்கேற்று, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ‘மா.அரங்கநாதன்’ மற்றும் ‘முன்றில்’ ஆகிய வலைதளங்களை தொடங்கிவைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மா.அரங்கநாதன் சிறுகதை எழுத்தாளர் என்று மட்டுமே பலர் அறிந்திருந்தாலும் கவிதை பற்றிய ஆழ்ந்த சிந்தனையை அவர் கொண்டிருந்தார். ஒரு கவிதையின் உருவாக்கம், வடிவம், அந்த கவிதை எவ்வாறு படைக்கப்படுகிறது, கவிதை என்றால் என்ன, எது கவிதை என்று கேட்ட மாத்திரத்திலேயே கவிதையின் அம்சம் மாறுபட்டு விடும், அதிலிருந்து வெகு தூரம் பயணித்துவிடும் என்றெல்லாம் பதிவு செய்து, ‘பொருளின் பொருள் கவிதை’ எனும் அற்புதமான நூலை கவிதை உலகுக்கு மா.அரங்கநாதன் தந்தார். அவரது படைப்புகளில் கூறிய விஷயம் சிறியதுதான்.
ஆனால், 2 வரிகளுக்கு உள்ளே படைப்பின் உன்னதத்தை எடுத்துக் காட்டுவார். கவிதை சார்ந்த கட்டுரைகள் மட்டுமின்றி, உலக சினிமா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
விருதாளர்களுக்கு புகழாரம்: கிராமத்து இளைஞர்களை தேடிப் பிடித்து, ஆவண படங்கள், குறும்படங்களை உருவாக்குவது எப்படி என்று பயிற்சி தந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி திரைத்துறை சார்ந்த ஆன்மாவை வெளிப்படுத்தியவர் ப.திருநாவுக்கரசு. ‘நிழல்’ என்ற அற்புதமான சிறு பத்திரிகையை உருவாக்கி, அதன்மூலம் திரைத்துறை சார்ந்த சிந்தனைகளை தமிழ் படைப்புலகம் எங்கும் கொண்டுபோய் சேர்த்துள்ளார்.
அதேபோல, மிகச்சிறந்த படைப்புகளை தந்ததன் மூலம், பேராசிரியர்களின் பேராசிரியராக அறியப்படுபவர் தமிழவன். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு பல்கலைக்கழகங்களில் தனது அறிவின் வீச்சை, தனது ஆளுமையை பல்வேறு கல்வியாளர்களுக்கு புகுத்தி அதன் மூலம் புகழ்பெற்றவர். ‘தமிழும் பொறியியலும்’ என்கிற அவரது நூல், ஆராய்ச்சி மாணவர்களுக்கு அடிப்படை நூலாக இருந்து வருகிறது. அவர் இந்த மண்ணுக்கான கொடை. அவர்கள் இருவருக்கும் இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அறிவியல் எழுத்தாளர் சுஜாதா நடராஜன், கவிஞர்கள் எஸ்.சண்முகம், ரவிசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT