Published : 19 Jan 2025 07:08 AM
Last Updated : 19 Jan 2025 07:08 AM

என்.கல்யாண் ராமனுக்கு விஜயா விருது | திண்ணை

கோவை விஜயா வாசகர் வட்டம் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பெயரில் விருது வழங்கிவருகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண் ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசோகமித்திரனின் ஆங்கில முகமாக இவர் அறியப்படுகிறார். அசோகமித்திரனின் பெரும்பான்மையான ஆக்கங்களை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பெருமாள் முருகனின் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்றுள்ளார். இவர் கணையாழியில் சிவசங்கரா என்கிற புனைபெயரில் சிறுகதை எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் சல்மா, தேவிபாரதி, சி.சு.செல்லப்பா, வாஸந்தி உள்ளிட்டோரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த விருது பாராட்டுக் கேடயமும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் உள்ளடக்கியது.

முத்துராசா குமாருக்கு விழி பா.இதயவேந்தன் விருது - எழுத்தாளார் முத்துராசா குமாருக்கு எழுத்தாளர் விழி பா.இதயவேந்தன் பெயரிலான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராசா குமார், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் இயங்கிவரும் நம்பிக்கையூட்டும் இளம் படைப்பாளி.

நாட்டார் வாழ்க்கைக்கூறுகளையும் தமிழ்த் தொன்மையையும் இவரது கவிதைகள் சூடியுள்ளன. கதைகளையும் அதன் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். ‘கங்கு’ என்கிற இவரது கவனம் பெற்ற நாவல். இது மேலவளவு என்கிற சமகாலப் பின்னணியில் எழுதப்பட்ட சமூக நாவலாகும். இந்த விருது 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x