Published : 19 Jan 2025 08:40 AM
Last Updated : 19 Jan 2025 08:40 AM
சென்னை: 'தி இந்து' குழுமத்தின் 13-வது ஆண்டு இலக்கிய திருவிழா (Lit for Life) சென்னையில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இத் திருவிழாவை சென்னை வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் கண்டுகளித்தனர்.
‘தி இந்து’ குழுமம் சார்பில் இலக்கிய திருவிழா (Lit for Life) நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான 2 நாள் இலக்கிய திருவிழா - 2025, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது.
இவ்விழாவில், பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான ஆபிரகாம் வர்கீஸ் பேசும்போது, "மனிதர்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், முதலில் பதிவு செய்யப்பட்ட எழுத்து, மெசபடோமியாவில் கியூனிஃபார்ம் பலகைகளில் உள்ள சுமேரிய எழுத்து ஆகும். இது, சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இதேபோன்ற எழுத்து வடிவங்கள் சிந்து சமவெளி மற்றும் சீனாவில் இருந்தன.
எனவே, எழுத்து சுமார் 5,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும் புத்தக வடிவில் அச்சிடுதல் 15-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் தொடங்கியது. நாம் படிக்கும்போது, பிம்பத்தை விழித்திரை உள்வாங்கிக் கொள்கிறது. மூளை அதை அடையாளம் கண்டு செயலாக்குகிறது. வாசகர்கள் இல்லாமல் எழுத்தாளர்கள் இல்லை" என்றார்.
மூத்த பத்திரிகையாளரும் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவருமான நிர்மலா லக்ஷ்மண் பேசும்போது, "இந்த இலக்கிய திருவிழா எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், தங்கள் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல களமாக அமையும். ` வாசகர்கள், எழுத்தாளர்கள் இடையே நேரடிப் பிணைப்பை உருவாக்கவும் இந்த விழா உறுதுணையாக இருக்கும். பாரம்பரியமிக்க ‘தி இந்து'வின் மரபான நேர்மை, அச்சமற்ற பண்பு உள்ளிட்ட அம்சங்களுடன் பத்திரிகை உலகில் தொடர்ந்து பயணம் செய்வோம்’’ என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அமர்வுகள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில், எழுத்தாளரும், ‘ஓ ஒன்டர்லேண்ட் ஆப் வேர்ட்ஸ்’ நூலாசிரியருமான சசி தரூரும், ‘தி இந்து’ தலைமை நிர்வாக அதிகாரி எல்.வி.நவநீத்தும் உரையாடினார். அப்போது சசி தரூர் பேசும்போது, "சிலர் இசையை கேட்டவுடன் பாட்டுப்பாட தொடங்கி விடுவார்கள். அதுபோல எனக்கு வார்த்தைகளுடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ளும்போது சுவாரஸ்யமாக இருக்கிறது. புத்தகங்களை தொடர்ந்து வாசிக்கும் போது அதன் வார்த்தைகளின் மேல் காதல் கொள்கிறேன். வார்த்தைகளுக்கான தொடக்கங்களை கண்டறிந்தாலே, அதன்மூலம் பல கதைகளை கண்டறியலாம். அந்த வகையில் வாசிப்பது என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும், ‘தி தமிழ்ஸ்’ (The Tamils) ஆங்iகில நூலின் ஆசிரியருமான நிர்மலா லக்ஷ்மண், நடனக் கலைஞர் அனிதா ரத்னம் ஆகியோர் கலந்துரையாடினர். அப்போது நிர்மலா லக்ஷ்மண், ‘தி தமிழ்ஸ்’ நூல் எழுதியபோது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
முன்னதாக ‘தி இந்து’ குழுமம் சார்பில் சர்வதேச விவகாரங்கள், சுகாதாரம், அறிவியல், வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்டவை அடங்கிய ‘சர்ஃப் அண்ட் டைவ்’ இதழ் வெளியிடப்பட்டது. இந்த இதழை சசி தரூர் வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து வெவ்வேறு அமர்வுகளில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் என் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்த இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிறு) பல்வேறு அமர்வுகளில் பல்துறை நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT