Published : 10 Dec 2024 06:10 AM
Last Updated : 10 Dec 2024 06:10 AM

ப்ரீமியம்
காவல் | அகத்தில் அசையும் நதி 3

வாசலில் யாரோ வழுக்கிவிழும் சத்தம் கேட்டது. சுதாரித்து எழுந்த செல்லபாங்கியக்கா வானத்தை வைதுகொண்டிருந்தாள்.

“வாங்கக்கா.”
“எங்குட்டு வாறது? முத்தத்துல பெரண்டு எழும்புனாத்தான் உள்ள வுடுவ போலருக்கு?”
“கீழ சாஞ்சிட்டியளாக்கா?”
“இஞ்சபாருங்கச்சி பதிஞ்சி கெடக்குறத்த. இவ்வள தூரம் வழுக்கியடிச்சா சாயாம நிக்க முடியுமா?”
“ஐயய்யோ பாத்து வரக்கூடாதுக்கா?”
“கட்டவெரல ஊணிவச்சிதான் நடந்தன். எப்புடி வழுக்குச்சின்னே தெரியலங்கச்சி.”
“உள்ள வாங்கக்கா.”
உள்ளே வந்தாள். சூடுகாட்டி எடுத்துவந்த காப்பியைக் கொடுத்தேன்.
“ஒனக்கு புண்ணியமாப் போவுங்கச்சி.”
“எதுக்குக்கா?”
“சுடச்சுட வாயில ஊத்துறன்ல. உள்ளங் காலுல ஏறுற ஈரம் நெஞ்சாங்கொல வரைக்கும் வெறச்சி போவுதுல்ல.”
“சரிசரி குடிங்க.”
“யாங்கால பாரங்கச்சி. இத்தி எடம் பாக்கியிருக்கா? வெரலிடுக்கெல்லாம் கொதகொதன்னு இருக்கு.”
“பொழுதேனைக்கும் சேத்துக்குள்ளயும் தண்ணிக்குள்ளயுமே நின்னுகிட்டு இருந்தா இப்புடித்தான் ஆவும்”.
“என்னங்கச்சி பண்ணுறது? கடகன்னிக்கி போவாண்டாமா? தண்ணிவெண்ணிக்கு வெறவுசத்தைக்கு வெளிய கெளம்புறதில்ல? சரிங்கச்சி. அது கெடந்துட்டுப் போவுது. வடவாண்ட வேலியில மருதண்ணி செடி இருந் திச்சே இருக்கா வெட்டிப் போட்டுட்டியளா?”
“இருக்குக்கா.”
“ஒரு கையி உருவிக்கிட்டுப்போயி அரச்சி ரெண்டு காலுலயும் அப்பிக்கிட்டு படுக்கணுங் கச்சி. அரிச்ச அரிப்புல ரெண்டு நாளா கண்ணகொண்டு மூடமுடியலங்கச்சி.”
“அதுக்கென்ன நீங்க உருவிக்கிட்டு போங் கக்கா” என்றதும் வடவாண்டை வேலியில் அடர்ந்து உயர்ந்திருந்த மருதாணிச் செடியைப் பார்த்தபடி நடந்தாள். சற்று நேரத்திலேயே மடியைச் சுருட்டிப் பிடித்தபடி வந்தாள். மடி நிறைய மருதாணி இலைகள்.
“என்னக்கா போன சொவடு தெரியல, அதுக்குள்ள வந்துட்டிய. போதுமா?”
“கிண்டல்தானங்கச்சி பண்ணுற?”
“இல்லக்கா. நான் எதுக்குக் கிண்டல் பண்ணப்போறன் சொல்லுங்க?”
“அது கெடக்கட்டும். நீ சொல்லுங்கச்சி. இது நல்லா செவக்குமுல்ல?” “சேத்துப்புண்ணுல அப்புறது செவந்தான்ன செவக்காட்டிதான் என்னக்கா?” “அதுக்கில்ல. நான் ஒண்ணு சொன்னா நீ சிரிக்கக் கூடாது.” “சிரிக்கமாட்டேன் சொல்லுங்கக்கா.”
“யாந்தங்கச்சி மவள நாளைக்கி பொண்ணு பாக்க வாறாவொ. நானுந்தான போவணும். அதான் ஒத்த கைக்காவது அழகா மருதண்ணி வச்சிக்கிடலாமேன்னு பாத்தன்.”
“அதான் சங்கதியா? சரிசரி. ஒரு கையில மட்டும் என்ன? ரெண்டு கையிலயுமே போட்டுக் கிடுங்க. ஒங்கள யாரு கேக்கப்போறா?”
“என்ன இருந்தாலும் அததுக்கான வயசுன்னு ஒண்ணு இருக்கில்லங்கச்சி?”
“ஒங்களைப் பாத்தா வயசானமேரி தெரியலக்கா. நீங்க போட்டுக்கிடுங்க.” வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
“வந்துருக்குற எடம் கொஞ்சம் பெரிய எடம். படிச்ச குடும்பமாம். மாப்புள்ளக்கு போலீஸ்
கார வேலயாம். அவங்களுக்குத் தக்கன கொஞ்ச மாச்சிம் நம்மளும் இருக்கணுமுல்லங்கச்சி.”
“நீங்க சொல்றது சரிதாங்கா.”
“வந்து பாக்குறம். பொண்ணு புடிச்சிருந்தா மறுநாளே நீங்க வந்து மாப்புள்ள வூட்ட பாருங்க. ஒங்களுக்கும் புடிச்சிருந்தா வாரம் பத்துநாளுல முகூர்த்தோல எழுதிடுவமுன்னு சொல்லிருக்காவோ.” “நல்லத்துதானக்கா.”
“இந்தக் கல்யாணம் மட்டும் நடந்துட்டுதுன்னு வச்சிக்கயேன், எங்க ஏழெட்டுக் குடும்பத்துக்கும் எந்தப் பயமும் இருக்காது. யாரும் எதுக்காவயும் எங்ககிட்ட நெருங்ககூட முடியாது. எல்லாத்தையும் எங்க சின்னகுட்டி புருசன் பாத்துப்பாரு.”
“அது யாருக்கா?”
“அதான் நாளைக்கி பொண்ணு பாக்க வரப்போராவொல்ல, அந்த மாப்புள்ளதான். அவரு போலீஸ்காரு இல்லயா அதான்.”
“மாப்புள்ளய பத்தி அக்கம்பக்கம் விசாரிக்க யாருக்கா போனா?” “என்னங்கச்சி இப்புடிக் கேக்குற? ஊருல சுத்துற திருட்டுப் பயலுவள, கள்ளச்சாராயம் விக்கிற பயலுகள, கொலகாரப்பயலுகளயெல்லாம் வெரட்டிப் புடிக்கிறவரு. அவரப்போயி யாராவது விசாரிப்பாவொளாங்கச்சி? கத்துகுடுக்குற வாத்தியாருக்கு வித்த தெரியுமான்னு சந்தேகப் பட முடியுமா? சரிங்கச்சி மறுமழ வந்துடும் போலருக்கு நான் பொயிட்டு வாறன்” என்றவள் குடலைமட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x