Published : 14 May 2024 04:14 AM
Last Updated : 14 May 2024 04:14 AM

இயற்கையை நேசித்தால் குற்றங்கள் குறையும்: எழுத்தாளர் சோ.தர்மன் கருத்து

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரத்திலுள்ள தமிழ் குடிலில் தாமிரபரணி கலை, இலக்கிய மன்றத்தின் 19-ம் இலக்கிய சங்கமம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சோ. தர்மன் பேசினார்.

திருநெல்வேலி: நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, மனிதர்களை கூர்ந்து கவனித்தாலே சிறந்த படைப்புகளை உருவாக்கலாம். இயற்கையை நேசித்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்று, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரத்திலுள்ள தமிழ் குடிலில் தாமிரபரணி கலை, இலக்கிய மன்றத்தின் 19-ம் இலக்கிய சங்கமம் நடைபெற்றது. ‘கலை, இலக்கியமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஓவியரும் சிற்பியுமான சந்ரு தலைமை வகித்தார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் பேசியதாவது: நம்மைச் சுற்றி உள்ள நிகழ்வுகளை, மனிதர்களை கூர்ந்து கவனித்தாலே சிறந்த படைப்புகளை உருவாக்கலாம். அவற்றில் சமூக அக்கறையுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழி செய்யும் நோக்குடன் படைப்பாக்கம் செய்வது நமது தார்மீக கடமையாகும். கண்மாய்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளை பாதுகாத்து, இயற்கையை நேசித்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையும்.

இயற்கையோடு இசைந்து பறவைகள், விலங்குகளை அதன் போக்கில் வாழ வழி செய்தால் இயற்கை சமநிலைக்கும், மனித சமூக செழுமைக்கும் வழி உண்டாகும். குறிப்பாக வவ்வால், யானை போன்ற பல உயிரினங்கள் சுற்றுச்சூழல் நலனுக்கு வழி செய்கிறது. இதனால் காரையார் பழங்குடியின மக்கள் வவ்வால் திருவிழாவை வருடாவருடம் கொண்டாடுகிறார்கள்.

எனது படைப்புகளினால் கண்மாய் குத்தகை விடுவதில் உள்ள அவல நிலைகளில் பெரும் மாற்றம் அடைந்து, அது தொடர்பாக உயர் நீதிமன்றமே உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது. படைப்பாளிகள் படைப்புகளின் வழியே இயற்கையோடு இயைந்த சமூக, சுற்றுச்சூழல் மேம்பாட்டையும், வளர்ச்சியையும் நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆடிட்டர் செல்வம் வரவேற்றார். தமிழ்ச் சங்க நிறுவனர்கள் யோகிஸ் ராஜா, நல்லையா ராஜ் ஆகியோர் கலந்துரையாடலை நடத்தினர். திருவள்ளுவர் கல்லூரி முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் நடராஜன், பிஎல்டபிள்யூ பள்ளி விளையாட்டு துறை இயக்குநர் ராஜேந்திரன், இளைய பெருமாள், கிரிக்கெட் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்வனம் சூரிய கலா நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x