Published : 07 Jan 2024 06:57 AM
Last Updated : 07 Jan 2024 06:57 AM

உலகளாவிய ஒடுக்குமுறைகளின் கதை

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘முடிவற்ற கதைகள்’ (Unending Stories)நாடகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் சமீபத்தில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தை இணைந்து வழங்கிய மேடை,சென்னை ஆர்ட் தியேட்டர் அமைப்புகள், ப்ரஸன்னா ராமஸ்வாமியுடன் இணைந்து ஒருங்கிணைத்த, 100 மணி நேர நடிப்புப் பயிற்சிப் பட்டறை வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்ட 11 பேர், இந்த நாடகத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமானார்கள்.

முதன்மையாகக் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம் என்றாலும் தன் வழக்கமான பாணியில் பாடல், நடனம், செய்திப் பகிர்வு எனபல்வேறு நிகழ்த்துக் கலை சாத்தியங்களை உள்ளடக்கி உருவாக்கியிருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.

கவிஞர்கள் சேரன், இன்குலாப், மனுஷ்ய புத்திரன், ஜெர்மானியக் கவிஞர் பெர் தோல்ட் பிரெக்ட்,அமெரிக்கக் கவிஞர் லாக்ஸ்டன் ஹ்யுக்ஸ், பாலஸ்தீனக் கவிஞர் அபு நட்டா ஆகியோரின் கவிதைகளோடு சில பகுதிகளை எழுதி இந்த நாடகத்தை உருவாக்கி இருக்கிறார். ஜமைக்காவைப் பூர்விகமாகக் கொண்டஇங்கிலாந்து எழுத்தாளர் பெஞ்சமின் ஸெஃபானியாவின் எழுத்துக்கள், அடிமை முறையிலிருந்து விடுபட்டஅமெரிக்க எழுத்தாளர் வில்லியம் வெல்ஸ் பிரவுனின் அடிமை அனுபவக்கதைகள் ஆகியவற்றையும் சேர்த்துஇந்நாடகப் பிரதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி உள்ளடக்கங்களுடன் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்துவரும் சாதிக்கொடுமைகள், அமெரிக்கா போன்றநாடுகளில் ஆப்ரிக்கர்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றின் சில கதைகள், காசாவில், ஹமாஸ் அமைப்பைஅழித்தொழிப்பதாக அறிவித்துவிட்டுஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல் என கடந்தகால, சமகால உண்மை நிகழ்வுகளேஇந்த நாடகத்தின் முதன்மையான பேசுபொருள். இந்தக் கொடுமைகள் ஒவ்வொன்றின் தாக்கமும் பார்வையாளருக்கு முழுமையாகக் கடத்தப்படும் வகையில் நாடகம் அமைந்திருந்தது.

பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கப்படும் கொடிய வன்முறையின், செய்திகளில் இடம்பெறாத கோரப் பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

பார்வையாளர்களை இரண்டு நேரெதிர் வரிசைகளாக அமர வைத்துஇடைப்பட்ட பகுதியில் நாடகக் கலைஞர்கள் நடிப்பது போன்ற மேடை அமைப்பு புதிய அனுபவத்தைத் தந்தது. நடிகர்கள் நடந்தும் ஓடியும் நடனமாடியும் இவற்றோடு வசனங்களையும் உணர்வுகளையும் பெரிய பிசகின்றி வெளிப்படுத்தியிருந்தார்கள்.

பெரும்பாலும் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடிப்பு அமைந்திருந்தது. குரு, கார்குழலி, ஸ்வேதா ஜெய்ஷங்கர், கார்த்திக் தரன், செல்வகுமார் பேச்சிமுத்து, மனோஜ் குமார் எஸ்.வி, ரிஷிபிரபாகர், ரா.விக்னேஷ், கே.நவநீதன்,பாரோ சலில், பிரபு சி.ஏ ஆகிய11 புதுமுக நடிகர்களும் பாராட்டுக்குரியவர்கள். கவுதம் கணேசனின் ஒளிஅமைப்பும் சிநேஹா சேஷின் பாடலும் நாடகத்தின் ஒட்டுமொத்த தாக்கத்துக்கு வலு சேர்த்தன.

உள்ளூரிலும் உலக அளவிலும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் காத்திரமாகப் பதிவு செய்திருப்பதோடு கலை அம்சத்திலும் குறை வைக்காத நாடக அனுபவத்தைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x