Published : 30 Apr 2023 04:26 AM
Last Updated : 30 Apr 2023 04:26 AM
புதுச்சேரி: சானிடரி நாப்கின்களை குப்பையில் தூக்கி வீசாமல், வீட்டிலேயே எரிக்கும் சூலா மண் அடுப்புகளை, மாதிரி அடிப்படையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி உருவாக்கி வருகிறார்.
பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்களை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அவை மக்கி அழிவதற்கு அதிக ஆண்டுகள் ஆகும். நாப்கின் பேடுகளை அழிக்க மத்திய அரசு, பல மாநிலங்களில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் நாப்கின் களை குப்பையில் கொட்டாமல் தங்கள் வீடுகளிலேயே எரித்து அழிப்பதற்கு, புகை ஏற்படுத்தாத சூலா மண் அடுப்புகளை மாதிரியாக தயாரித்து வருகின்றனர்.
அதன்படி ஒரு அடி அகலம் ஒன்னரை அடி உயரம் கொண்டகளிமண் மூடியுடன் கூடிய இந்தமண் அடுப்பில் சானிடரி நாப்கின்களை போட்டு கொளுத்தினால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பலாகிவிடும். சாம்பலை கீழ்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
டெரகோட்டா கைவினைக் கலைஞர் பத்ம ஸ்ரீ முனுசாமி குழுவினர் ஒதியம்பட்டுகாசி விஸ்வநாதர் கோயில் அருகே இந்த அடுப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி டெரகோட்டா கலைஞர் பத்ம ஸ்ரீ முனுசாமி கூறுகையில், "அரசின் மூலம் பெண்களுக்கு நாப்கின்களை எரிக்கும் களிமண்ணால் ஆன சூலா அடுப்பு தயாரித்து வருகிறோம்.
முதல்கட்டமாக 300 மாதிரி அடுப்புகளை தயாரிக்க உள்ளோம். மாதிரி அடுப்புகளை அரசு தரப்பில் ஆய்வு செய்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்தக் கட்டமாக சுய உதவிக் குழு பெண்களுக்கு சூலா அடுப்பு தயாரிக்க பயிற்சி தருவோம். இதைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து 34 ஆயிரம் அடுப்புகளை உருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசு நிதியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நலிந்த மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 34,000 ஆயிரம் பெண்களுக்கு சூலா அடுப்புகளை இலவசமாக வழங்க புதுவை அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT