Last Updated : 22 Sep, 2017 10:52 AM

 

Published : 22 Sep 2017 10:52 AM
Last Updated : 22 Sep 2017 10:52 AM

தமிழோடு விளையாடி அசத்திய மதுரை!

‘தி

இந்து’ தமிழ் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் தமிழ், தமிழ் பாரம்பரியம் எனப் பல்வேறு நிகழ்வுகள் களைகட்டின. இறுதி நிகழ்ச்சியாக ‘தமிழோடு விளையாடு’ என்ற நிகழ்ச்சியை நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ‘நண்டு’ ஜெகன் தொகுத்து வழங்கினார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கலகலப்பாக்கிய இந்த நிகழ்ச்சியை, நண்டு ஜெகன் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் நடத்தினார்.

‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். சென்னை அணி சார்பாக ராஜீவ், செந்தில்; கோவை அணி சார்பில் சந்திரசேகர், சுசாரிகா; மதுரை அணி சார்பில் அப்பச்சி சபாபதி, ஆதலையூர் சூரியகுமார்; திருநெல்வேலி அணி சார்பில் பிச்சுமணி, ராமபூதத்தான் ஆகியோர் பங்கேற்றார்கள்.

இந்த விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில் நடைபெற்றது. முதல் பிரிவில் ‘கண்ணாமூச்சி’ என்ற பெயரில் போட்டி நடைபெற்றது. வட்டார வழக்கு, இலக்கியம், தமிழ்ச் சொற்கள், தமிழ் வளர்த்தோர் என நான்கு விதமாக போட்டித் தலைப்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. குலுக்கல் முறையில் அணியினர் போட்டித் தலைப்புகளைத் தேர்வு செய்து கண்ணாமூச்சி விளையாடினர். இதில் மதுரை அணி 10 கேள்விகளுக்கும் பதில் அளித்து அசத்தியது.

இரண்டாவது பிரிவில் ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாட்டு நடந்தது. திரையில் தமிழ் சார்ந்த விடைகள் சிதறிக் கிடந்தன. நண்டு ஜெகன் கேட்ட கேள்விகளுக்கு அணியினர் அந்த விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி போட்டி அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவில் போட்டியாளர்கள் விறுவிறுப்புடன் விளையாடினார்கள். மூன்றாவது பிரிவில் ‘பல்லாங்குழி’ என்ற பெயரில் நடைபெற்றது. மாறிமாறிக் கிடக்கும் வார்த்தைகளைச் சேர்த்து சரியான விடையைச் சொல்லும் விளையாட்டு இது. இந்த விளையாட்டில் எல்லா அணியினரும் ஆர்வமாக விளையாடி மதிப்பெண்கள் பெற்றனர்.

நான்காவது பிரிவின் பெயர் ‘சித்திரம் பேசுதடி’. அழைப்பு மணியை அழுத்தி விடையைச் சொல்லும்படி இந்தப் பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. திரையில் தோன்றிய படங்களைக் குறிப்பாகக்கொண்டு நண்டு ஜெகன் கேட்ட கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் கூறினர். சில கேள்விகளுக்கு திணறியும், இன்னும் சில கேள்விகளுக்கு எளிமையாகவும் போட்டியாளர்கள் பதில் கூறினர். ஐந்தாவது பிரிவு ‘சடுகுடு’ என்ற பெயரில் நடந்தது. குழப்பத்தைத் தரக்கூடிய ஒரு சொற்றொடரை அணியில் உள்ள ஒரு போட்டியாளர் சொல்ல, அந்த சொற்றொடரை மூன்று முறை பிழையின்றி இன்னொரு போட்டியாளர் திரும்ப சொல்லும் போட்டி இது. இதில் கோவை அணி சிறப்பாக விளையாடி கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றது.

போட்டியின் முடிவில் மதுரை அணி 160 மதிப்பெண்களையும் கோவை அணி 102 மதிப்பெண்களையும் சென்னை அணி 110 மதிப்பெண்களையும் திருநெல்வேலி அணி 55 மதிப்பெண்களையும் பெற்றன. மதுரை அணி சார்பில் விளையாடிய அப்பச்சி சபாபதி - ஆதலையூர் சூரியகுமார் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

போட்டித் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்கள், வாசகர்களிடம் தமிழ் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாகப் பதில் சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x