Published : 01 Sep 2017 11:35 AM
Last Updated : 01 Sep 2017 11:35 AM
இ
ந்தியாவில் சல்மான் ருஷ்டி, ரோஹின்டன் மிஸ்த்ரி ஆகியோருக்குப் பிறகு, நெருக்கடிநிலையைப் பற்றி சமகால இளைய தலைமுறைக்கென்று யாரும் எழுதவில்லை. இந்தச் சூழலில் கதாசிரியர் விஸ்வஜ்ஜோதி கோஷின் நண்பர் ஒருவர் நெருக்கடிநிலைப் பிரகடனம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டிருந்தார்.
அவருக்கு உதவிசெய்ய ஆராய்ச்சிகள், தேடல்களை மேற்கொண்டிருந்தார் கோஷ். அப்போதுதான் அந்த 19 மாதங்களைப் பற்றி இந்தத் தலைமுறைக்கான புரிதலை ஏற்படுத்த நினைத்தார். தான் கண்டதை ஒரு ஆவணமாக, கிராஃபிக் நாவல் வடிவில் கொடுக்க முடிவெடுத்தார். அதன் பிறகு, அவரது தேடல் மேலும் தீவிரமடைந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் உருவாக்கியதுதான் இந்த கிராஃபிக் நாவல்.
புதிய பார்வை
உலக அளவில் இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து கிராஃபிக் நாவல்கள் உருவாக்கப்படும்போது, ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து, அந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வதுதான் வழக்கமான பாணி. ஆனால், இதில் சம்பவங்களை, அவற்றின் பின்னணியை ரசிக்கும்படியான ஒரு பார்வையில் வழங்கி, தனிப்பட்ட பார்வையை கோஷ் தவிர்த்திருக்கிறார்.
நெருக்கடிநிலை துன்பியல் நிகழ்வுகளை, கொடூரங்களைப் பற்றியே பேசும் பதிவுகள் பல இருக்க, கோஷ் வேறொரு புதிய பாணியைக் கையாள்கிறார். இதில் நெருக்கடிநிலைக்குக் காரணமானவர்களைப் பகடி வடிவில் பதிவுசெய்திருக்கிறார். ஆனால், அவரது கோபம் முழுவதும் நெருக்கடி நிலைக்கு எதிராகப் புறப்பட்ட ஜே.பி. இயக்க இளைஞர்களின் மீதும், அவர்களின் முழுமையாகப் பொறுப்பேற்காத தன்மையின்மீதே வெளிப்படுத்துகிறார். இந்தியா முழுவதுமே காணப்பட்ட ஒருவிதமான புதிய ஊக்கத்தைக் கெடுத்த இந்தத் தன்மையை அவர் கடுமையாகச் சாடுகிறார்.
கோபத்துக்குக் காரணமானவர்கள்
அறிவார்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு படித்த இளைஞன், அரசியல் பற்றிய அவனது லட்சியவாதம், கருத்துகளைப் பின்தொடரும் அவனது செயல்பாடுகள், அதன் பிறகு மெதுவாகச் சில நடைமுறை விஷயங்களை உணர்வது, கடைசியாகப் போராட்டத்திலிருந்து விலகி, நிலையான ஒரு வாழ்க்கை முறையை அணுகுதல் என்று இந்த கிராஃபிக் நாவல் நீள்கிறது.
சல்மான் ருஷ்டியின் மிட்நைட்’ஸ் சில்ட்ரனிலும் இதே விஷயம் கையாளப்பட்டிருக்கும். ஆனால், சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, இந்த நெருக்கடிநிலைப் பிரகடனம் குலைத்ததாக ருஷ்டி எழுதி இருப்பார். அவரது பெருஞ்சினம் முழுவதுமே ஆட்சியாளர்களின் மீதுதான் வெளிப்பட்டிருக்கும். ஆனால், விஸ்வஜ்யோதி கோஷ் அந்த நம்பிக்கை சிதைவதற்கு மிக முக்கியக் காரணமாக அதற்கு எதிராகத் திரண்டவர்களின் மன நிலையையே கூறுகிறார். தற்போதைய சமகாலச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் இதைச் சொல்லி இருப்பதுதான் அவரது கிராஃபிக் நாவலின் சிறப்பம்சம்.
மாறுபட்ட வண்ணம்
டெல்லியைப் பொறுத்தவரையில், இருள் நிறைந்த சம்பவங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு நகரமாகவே அரசியலில் அது பதிவாகி இருக்கிறது. அதனாலேயே, இந்த கிராஃபிக் நாவலை வண்ணங்களால் நிறைக்காமல், மோனோகுரோமாட்டிக் வாட்டர் கலர் (ஒற்றைநிற வண்ணக்கலவை) முறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் பிறகு, கணினி மூலமாக இதைப் பழமைத்தன்மை கொண்ட ‘செபியா டோன்’ ஆக மாற்றி, சாதாரண பாணிக்கு மாற்றியுள்ளார்.
திரைப்பட மொழியில் வண்ணங்கள் சமகாலத்தையும், ‘செபியா டோன்’ பழைய நினைவுகளையும் உணர்த்தும். அதைப் போலவே இந்தப் பழுப்பு நிறம், காய்ந்த ரத்தத்தை நினைவுபடுத்தும் ஒரு விஷயமும்கூட. கதையில் எங்கெங்கு வன்முறை வருகிறதோ, அங்கெல்லாம் இதே பாணியில் பழுப்பு நிறத்தைத் தெறிக்கவிட்டு, வன்முறையையுமே உருவகமாகக் காட்டியிருக்கிறார்.
இந்த கிராஃபிக் நாவலில் குறைகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு. 246 பக்கங்களையும் மிகவும் விறுவிறுப்பாகப் படிக்க முடிந்தாலும், இறுதியில் எந்தக் காட்சியுமே நமது மனதில் ஆழமாகப் பதியாமல் போகிறது. வங்க ஓவிய முறையில் கண்களை மிகப் பெரியதாக வரையும் காளிகாட் பாணி, அதைப் பற்றித் தெரிந்தவர்களே ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், அது பற்றி விவரம் அறியாதவர்கள், இந்த கிராஃபிக் நாவலின் ஓவியங்களை ரசிக்க சற்றே சிரமப்பட வேண்டியிருக்கும்.
ஓர் அரசியல் நிகழ்வை, சம்பவத்தைப் பற்றிய ஆவணம் உருவாக்கப்படும்போது, அது கறுப்பு வெள்ளை என்று ஏதாவது ஒருபக்கம் சார்ந்து இருப்பது வாடிக்கையான ஒன்று. பக்கச் சார்புநிலையற்றுச் சொல்லப்பட்டால், அது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அந்த வகையில், இலக்கணரீதியாகச் சில குறைகள் இருந்தாலும்கூட, விஸ்வஜ்யோதி கோஷின் டெல்லி காம் என்ற இந்திய கிராஃபிக் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றுதான். அதைப் போலவே, பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்ணியம், சமூக அறம் பற்றியெல்லாம் தொடர்ந்து காமிக்ஸ் வடிவில் வெளிப்படுத்திவரும் கோஷும் கவனிக்கத்தக்க ஒரு படைப்பாளியே.
தலைப்பு: டெல்லி காம் (Delhi Calm) கதாசிரியர் & ஓவியர்: விஸ்வஜ்யோதி கோஷ் வெளியீடு: 2010 அமைப்பு: கறுப்பு வெள்ளையில் 246 பக்கங்கள், 599 ரூபாய். பதிப்பாளர்: ஹார்ப்பர் காலின்ஸ் கதைக்கரு: அவசர நிலைப் பிரகடனம். ஜூன் 25, 1975 - 18 ஜனவரி, 1977. இந்த 19 மாதங்களில் நடந்த சம்பவங்களை கிராஃபிக் நாவலாக ஆவணப்படுத்தி இருக்கிறார். |
விஸ்வஜ்யோதி கோஷ், கதாசிரியர்-ஓவியர்
தற்கால இந்திய கிராஃபிக் நாவல் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் கோஷ். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது கோஷின் குடும்பம் வங்கதேசத்திலிருந்து கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தது. சிறுவயதிலேயே அமர் சித்திரக் கதை, செய்தித்தாளில் வந்த வேதாளர் காமிக்ஸ் போன்றவற்றைப் படித்து, பின்னர் டின்டின் கதைகளுக்கு நகர்ந்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஒரு ஓவியப் போட்டியில், பள்ளியில் படிக்கும்போதே அரசியல் கார்ட்டூன் வரைந்து பரிசு பெற்றார். அதன் பிறகு, தொடர்ந்து அரசியல் கார்ட்டூன்களை வரையவும் ஆரம்பித்தார்.
டெல்லிக்குக் குடிபெயர்ந்து அங்கேயே கல்லூரிப் படிப்பை முடித்தார். அப்போது இந்திய கிராஃபிக் நாவல்களின் தந்தையென்று கருதப்படும் ஒரிஜித் சென்னைச் சந்தித்தார். கல்லூரியில் விளம்பரம், ஓவியம் பற்றிப் படித்து, நீர்வண்ண ஓவியராக மாற விரும்பிய கோஷ், சென்னின் பாணியால் ஈர்க்கப்பட்டு கிராஃபிக் நாவல்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
பின்னர், பிரெஞ்சு அரசின் நிதியுதவியுடன் பாரிஸ் சென்று ஐரோப்பிய கிராஃபிக் நாவல்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டார்.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT