Published : 10 Apr 2023 07:17 AM
Last Updated : 10 Apr 2023 07:17 AM
தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. புதிதாக கிணறு தோண்டியும், கிணற்றில் போர்வெல் அமைத்தும் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், கிணற்றின் அருகே உள்ள கொட்டகை ஷீட்டில் இருந்து மழைநீரை குழாய் வழியாக தொட்டியில் தேக்கி, கிணற்றுக்குள் செலுத்தி, விவசாயம் செய்து வருகிறார்.
ரூ.50 ஆயிரம் செலவு: இதுகுறித்து சிவகுமார் கூறும்போது, “மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கிராமத்தில் எனது தந்தை தனியாக விவசாயம் செய்து வந்தார். அதனால், நான் வேலையை விட்டுவிட்டு தந்தைக்கு துணையாக விவசாயம் செய்து வருகிறேன்.
கள்ளம்புளியில் எங்கள் விவசாய நிலம் 10 ஏக்கர் உள்ளது. இதில் தற்போது தக்காளி, புடலை சாகுபடி செய்துள்ளோம். இங்கு ஓராண்டுக்கு முன்பு கிணறு தோண்டினோம். 60 அடி ஆழம் கிணறு தோண்டியும் ஊற்று நீர் குறைவாகவே இருந்தது. இதனால், கிணற்றில் அடிப்பகுதியில் சைடு போர் போட்டோம். அதிலும் போதிய நீர் கிடைக்கவில்லை. மோட்டார் போட்டால் 10 நிமிடம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.
இதே பகுதியில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். மழைக் காலத்தில் கொட்டகையில் இருந்து வழியும் நீர் வீணாவதை தடுத்து, கிணற்றில் தேக்க முடிவு செய்தோம். மாட்டு கொட்டகை ஷெட்டில் இருந்து மழைநீர் வழியும் பகுதியில் குழாய்கள் அமைத்து ஒரு தொட்டியில் தேக்கி, அங்கிருந்து நேரடியாக மழை நீர் கிணற்றில் விழும் வகையில் அமைத்தோம்.
இப்போது மாட்டு கொட்டகையில் விழும் மழை நீர் கிணற்றுக்குள் செல்கிறது. இதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவானது. ஒரு முறை பலத்த மழை பெய்தால் கிணற்றில் தேங்கும் மழை நீர் மூலம் ஒரு மாதத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து கிணறு, போர்வெல் அமைத்து கிடைக்காத நீர், மழை நீர் மூலம் கிடைக்கிறது” என்றார்.
மாற்றத்துக்கான தேடல்: விவசாயத்துக்காக தண்ணீரை கொண்டுவர லட்சக்கணக்கில் செலவு செய்த விவசாயிக்கு இயற்கை அளித்த கொடையால் குறைந்த செலவில் நிரந்தர, நீண்டகால தீர்வு கிடைத்துள்ளது. விடா முயற்சியும், மாற்றத்துக்கான தேடலும் இவருக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT