Last Updated : 29 Mar, 2023 06:44 PM

 

Published : 29 Mar 2023 06:44 PM
Last Updated : 29 Mar 2023 06:44 PM

தற்கொலைத் தடுப்பும், சமூகப் பிரச்சினையும் - ஓர் உளவியல் பார்வை

உலகளவில் 7 லட்சம் பேர் ஓர் ஆண்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை நடக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலகளவில் தற்கொலைகள் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்து, அதனை பொது சுகாதார பிரச்சினையாகவே உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தற்கொலைக்கான தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குவது அவசியமாகிறது.

நம்மில் பலர் தற்கொலை செய்திகளை படிக்கும்போதெல்லாம் ‘இதற்காகவா தற்கொலை பண்ணிப்பாங்க?’, ‘கோழைத்தனம்’ என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஏனெனில், நமது சமூக அமைப்பில் தற்கொலை என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத மன்னிக்க முடியாத குற்றமாக பார்க்கப்படுகிறது. இதன்பொருட்டே நாம் தற்கொலைகளை செய்திகளை அணுகுவதால், அவற்றின் உளவியல் சிக்கல் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தொடர்ந்து இருக்கிறோம்.

உண்மையில், தற்கொலைகளுக்கு பெரிய காரணங்கள்தான் வேண்டும் என்பதில்லை. உளவியல் காரணங்களோ, காரணம் இல்லா தற்கொலை எண்ணங்களோ கூட மனிதர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள காரணமாகிவிடுகின்றனர் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். நம்மில் பலருக்கும் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவது பொதுவான ஒன்று என்றே சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், பலர் இந்த எண்ணத்தை கடந்துவிடுகின்றனர். சிலரால் அதனை கடக்க முடிவதில்லை. இவ்வாறு தற்கொலை எண்ணங்களை கடுக்க முடியாதவர்களுக்கு மனம் சார்ந்த ஆரோக்கிய பயிற்சிகள் அவசியம். அதில் முதன்மையானது நம்பிக்கை, அடுத்தது நன்றியுணர்வு.

வாழ்க்கை மீதான நம்பிக்கையே நாம் அனைவரையும் நகர்த்துகிறது. அந்த வகையில் கடக்க நம்மை சுற்றி காணப்படும் நேர்மறையான எண்ணங்களில் நம்பிக்கை கொண்டு அதன்மீது பற்று வைத்தலே இக்கட்டான காலங்களை கடக்க உதவும். அடுத்தது வாழ்வின் மீதான நன்றியுணர்வு, நம்மை வந்து சேரும் சிறு சிறு நன்மைகளுக்கு நன்றியுணர்வுடன் இருப்பது மன அழுத்தத்திலிருந்து நாம் விடுப்பட உதவும்.

குடும்பமும் சமூக ஆதரவும்: தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. முதலாவது, தான் யாருக்கும் சொந்தமில்லாமல் இருப்பது (தனிமை உணர்வு), இரண்டாவது பிறருக்கு பாரமாக இருப்பதாக உணர்வது. இதில் குடும்பம் மற்றும் சமூக ஆதரவோடு இருக்கும் நபர்களுக்கு தற்கொலை எண்ணம் இருந்தாலும் பிறர் மீது கொண்ட பிணைப்பு காரணமாக அவர்கள் தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 40% குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சமூகம், குடும்ப ஆதரவுகள் இருப்பின் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை உணர முடிகிறது. எனவே, தற்கொலை எண்ணம் இருந்தால் நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ எந்த தயக்கமும் இன்றி தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஆதரவை எந்த தீர்மானமுமின்றி இந்த குடும்பங்களும், சமூகங்களும் அளிக்க வேண்டும்.

இரண்டாவது இலக்கு ‘முயற்சி’. நீங்கள் விரும்பும் துறைகளில் வெற்றிக்கான இலக்கை அடைவதற்காக, நீங்கள் எடுக்கும் சிறு முயற்சிகளும் உங்களை தற்கொலை எண்ணத்திலிருந்து விடுவிக்கும். இவை கலாச்சாரம், மதம், கல்வி, வேலை , பயணம் என எவை சார்ந்தும் இருக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்கை முறை, உடற்பயிற்சிகள்: உடல் - மனதை ஆரோக்கியமாகவும்,உறுதியாகவும் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும், உடற்பயிற்களும் நிச்சயம் கைக்கொடுக்க கூடியவே. இவை எண்ண ஒட்டத்தை சீர்ப்படுத்தவும் உதவுபவை.

உடற்பயிற்சிகளுக்கு நமது நாளை மாற்றும் சக்தி உண்டு. அந்த வகையில் பெரும்பாலனவர்களை தற்கொலையிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் உதவி இருக்கின்றன.

ஊடகங்களுக்கு பொறுப்பு தேவை: தற்கொலை செய்திகளை பரப்பரப்பு செய்திகளாக அணுகாமல், அதனை கூடுதல் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டிய தேவையும், கடமையும் ஊடகங்களுக்கு உள்ளது. முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் ஒருவர் எடுக்கும் துயர முடிவுகளை உங்களது டிஆர்பிக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அறவுணர்வு ஊடகங்களுக்கு அவசியம்.

எல்லாவற்றையும்விட உங்களுடைய பரப்பரப்பான தற்கொலை செய்தி, எங்கோ ஒரு பகுதியில் பதற்ற உணர்வுடன் இருக்கும் ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் என்ற அடிப்படை மனிதாபிமானம் ஊடகங்களுக்கு தேவை.

தற்கொலைகளை வெறும் செய்தியாக கடந்துவிடாமல் அவை குறித்தான விவாதங்கள் பரவலாக எழுப்பப்பட வேண்டும். விழிப்புணர்வுகளும் அதிகரிக்க வேண்டும். உண்மையில் தற்கொலை என்பது கோழைத்தனம் அல்ல, சமூகப் பிரச்சனை..!

| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x