Published : 27 Feb 2023 07:48 PM
Last Updated : 27 Feb 2023 07:48 PM

தருமபுரி சிறுதானிய கருத்துக் காட்சி: ஆட்சியரையும், பார்வையாளர்களையும் ஈர்த்த பழங்கால பொருட்கள்

கண்காட்சியில் இடம்பெற்ற பழங்கால பொருட்கள்

தருமபுரி: தருமபுரியில் நடந்த சிறுதானிய கருத்துக் காட்சி அரங்கில் இடம்பெற்றிருந்த, ‘குந்தாணி’ உள்ளிட்ட பழங்காலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் தொடங்கி பார்வையாளர்கள் வரை பலரும் ஏக்கத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.

தருமபுரியில் இன்று (27-ம் தேதி) தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு-2023-ஐ முன்னிட்டு சிறுதானிய கருத்துக் காட்சி நடந்தது. தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் திருமண மண்டப வளாகத்தில் நடந்த இந்த கருத்துக் காட்சியை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து மண்டபத்தில் ஒரு பகுதியில் அரசுத் துறைகள், விவசாயிகள் குழுவினர், அமைப்புகள் உள்ளிட்டோர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இவ்வாறு அவர் பார்வையிட்டபோது, ஓர் அரங்கில் குந்தாணி, முறம், ஏர் கலப்பை, இரு வாசல் (தொம்பை), மொறக்கோல், சால், உலக்கை ஆகிய வேளாண் தொழில் சார்ந்த பழங்கால பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்கின் அருகே வந்தபோது அவை குறித்த தகவலை கேட்டறிந்த ஆட்சியர், அவை தொடர்பான தமது சிறுவயது நினைவுகளை தம் மனத் திரையில் சில விநாடிகள் சுழலவிட்டு மகிழ்ந்து நகர்ந்ததை அவரது முகபாவங்களைக் கொண்டு அறிய முடிந்தது.

மாவட்ட ஆட்சியரைப் போலவே, கருத்துக் காட்சி நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்களில் பலரும் இந்த பொருட்களை ஆச்சர்யத்துடன், ஆவலுடன் பார்த்து தகவல்களை கேட்டறிந்து அடுத்தடுத்த அரங்குகளுக்கு நகர்ந்தனர். மொத்தத்தில், இந்த பழங்கால பொருட்கள் ஆட்சியர் முதல் பார்வையாளர்கள் வரை பலரையும் ஏக்கத்துடன் பார்வையிட வைத்தன என்பது குறிப்பிடத் தக்கது.

அதேநேரம், கருத்துக் காட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் இந்த பழங்கால பொருட்களை இயல்பாக மட்டுமே பார்த்து நகர்ந்தனர். அவர்களில் சிலரிடம் இதுபற்றி கேட்டபோது, ”இந்த அரங்கில் இடம்பெற்றிருக்கும் குந்தாணி உள்ளிட்ட விவசாயம் தொடர்பான பழங்கால பொருட்களில் பல, இன்றளவும் விவசாயிகள் சிலரின் வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

இதர விவசாயிகளும் கூட இவற்றை பயன்பாட்டில் வைத்திருக்காவிடினும், வீட்டு பரணிலாவது வைத்திருக்கிறார்கள். எனவே, எங்களைப் போன்றவர்களுக்கு இவற்றால் புதுவித அனுபவங்கள் ஏற்படவில்லை. ஆனால், அரசு நடத்தும் ஒரு கருத்துக் காட்சி நிகழ்ச்சியின் அரங்கில் இதுபோன்ற பொருட்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது எங்களைப் போன்ற விவசாயிகளுக்கெல்லாம் ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது.

அதேநேரம், நகரில் வசிப்பவர்கள், இளைய தலைமுறையினர், குழந்தைகள் போன்றோருக்கு இவையெல்லாம் பிரமிப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் பொருட்களாக இன்று மாறி விட்டது. ஆனால், நம் மண்ணின், நம் அனைவரது மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் சுவடுகள் அவை என்பதை உணர்ந்து என்றென்றும் போற்றப்பட வேண்டிய பொருட்கள் அவை என்பது மட்டும் உண்மை’” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x