Published : 30 Jan 2023 04:03 AM
Last Updated : 30 Jan 2023 04:03 AM

கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 500 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தற்போதுவரை 500 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை 2019 ஆகஸ்ட் மாதம் இரண்டு ரத்தநாள நிபுணர்களுடன் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோயாளிகளுக்கு கை, கால், குடல், மூளை போன்ற இடங்களில் ரத்தநாள அடைப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி அழுகி குடல், கை, கால்களை அகற்றும் நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க, நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இவ்வாறு அடைப்பு ஏற்பட்டால் நோயாளிக்கு தாங்கமுடியாத வலி ஏற்படும். அத்தகைய நேரங்களில் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, அடைப்பை கண்டறிந்து அதை அகற்றினால் கை, கால் இழப்பை தவிர்க்க முடியும்.

தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் 500 நோயாளிகளுக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், 2019-ம் ஆண்டு 66 பேர், 2020-ம் ஆண்டு 52 பேர், 2021-ல் 134 பேர், 2022-ல் 226 பேர், 2023 ஜனவரியில் 22 பேர் பயன்பெற்றுள்ளனர். முதியவர்கள், இருதய நோயாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சையை அளிக்க முடியும்.

இங்கு சிகிச்சை பெற்ற 500 பேரில் 60 வயதுக்கு மேற்பட்ட 267 பேரும் அடங்குவர். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இங்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை நிபுணர்கள் ப.வடிவேலு, பா.தீபன்குமார் ஆகியோர் இந்த சிகிச்சையை சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு, பேராசிரியர்கள் வெங்கடேஷ், முருகேசன், ஆனந்த சண்முகராஜ் ஆகியோர் உறுதுணையாக வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x