Published : 23 Jan 2023 04:37 AM
Last Updated : 23 Jan 2023 04:37 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடும்பம் குடும்பமாகச் சென்று இரும்பு பட்டறை அமைத்து வடமாநிலத் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், மளிகைப் பொருட்கள், எண்ணெய், மிளகாய் வத்தல் உற்பத்தி ஆகியவற்றில் பிரசித்தி பெற்ற விருதுநகர் மாவட்டத்துக்கு, வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வியாபாரத்துக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால், அண்மைக் காலமாக வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து கடந்த வாரம் ரயில் மூலம் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விருதுநகர் வந்தனர். இவர்கள் 50 குடும்பங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று கிராமப்புறங்களிலும், நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இரும்புப் பட்டறைகளை அமைத்து அரிவாள், கத்திகள், மண் வெட்டி, கோடாரி, அரிவாள் மனை ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி இரும்புப் பட்டறை அமைத்துள்ள போபாலைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது:
எங்கள் மாநிலத்தில் போதிய அளவு விவசாயம் இல்லை, கல்வியறிவும் குறைவு. பலர் பள்ளிக்குச் செல்லாததாலும், தொழிற்சாலைகளில் பலர் வேலைக்குச் செல்வதில்லை. அதனால், குடும்பம், குடும்பமாக ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளோம். கடந்த ஒரு மாதமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் வந்துள்ளோம்.
இங்கும் பல இடங்களில் வேலை கிடைக்காததால், மதுரையில் இரும்புக் கடைகளில் இரும்பு பட்டாக்களை மொத்தமாக வாங்கி வந்து பட்டறை அமைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்புப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
ரூ.50 முதல் ரூ.200 வரை விற்கிறோம். இதிலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. கிடைக்கும் சொற்ப வருமானம் உணவுக்கே போதவில்லை. அதனால், ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பொது இடங்களில் தங்கி பட்டறை அமைத்து இரும்புத் தொழில் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT