Published : 20 Jan 2023 03:45 PM
Last Updated : 20 Jan 2023 03:45 PM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வறுமையான குடும்பப் பின்னணியில் அரசுப் பள்ளியில் படித்த பட்டியலினப் பெண் என்.காயத்ரி நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காரஹள்ளியை சேர்ந்தவர் 25 வயதான என்.காயத்ரி. இவரது பெற்றோர் நாராயணசாமி - வெங்கடலட்சுமி இருவரும் விவசாய கூலியாக வேலை செய்கின்றனர். காரஹள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில் பயின்ற இவர், பங்காரு பேட்டை அரசு கல்லூரியில் பி.ஏ.படிப்பை முடித்தார். பின்னர் கோலார் தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா கல்லூரியில் சட்டம் பயின்றபோது அதிக மதிப்பெண்கள் பெற்று, கர்நாடக சட்டப் பல்கலைக்கழகத்தில் 4-வது மாணவியாக தேர்வானார்.
கடந்த இரு ஆண்டுகளாக பங்காருபேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவராம் சுப்பிரமணியனிடம் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கர்நாடக சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் என்.காயத்ரி பங்கேற்றார். இதில் வெற்றிப் பெற்றுள்ளதால், சிவில் நீதிபதியாக பணியாற்ற தேர்வாகியுள்ளதாக கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த என்.காயத்ரி வறுமையிலும் கடினமாக உழைத்து இளம் வயதில் நீதிபதியாக தேர்வாகியுள்ளதால் ஏராளமானோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து என்.காயத்ரி கூறுகையில், ''என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்தனர். அவர்களை சந்தோஷமாக கவனித்துக் கொள்வதே என்னுடைய முதல் கடமை. என்னைப் போல பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுவேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT