Published : 19 Jan 2023 04:23 AM
Last Updated : 19 Jan 2023 04:23 AM
மதுரை: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கி கார் பரிசு வென்றுள்ளார் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க 1,300-க்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன. இதில் தகுதி நீக்கம் தவிர 1000 காளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டாலும், மாலை 5 மணிக்குள் 825 காளைகள் மட்டுமே களமிறக்கப்பட்டன.
போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும் அதிக காளைகளை பிடித்து சிவகங்கை மாவட்டம், பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபிசித்தர் (21) முன்னிலையில் இருந்தார். கடைசியில் அவர் 26 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றார். அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் கார் பரிசும், அமெரிக்கா புருஸ் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை சார்பில், நாட்டின பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டன.
இப்போட்டியில் வென்ற அபிசித்தர் தொடக்கத்தில் மஞ்சு விரட்டு, வடமாடு மஞ்சு விரட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டியவர். பிறகு அதற்கான வாய்ப்புகளை அதிகமின்றியே ஜல்லிக்கட்டுகளில் அதிகளவில் பங்கேற்று சாதித்துள்ளார்.
இது குறித்து அபிசித்தர் கூறியதாவது: எனது தந்தை விவசாயி. நான் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பார். ஆரம்பத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டிகளில் அதிகம் பங்கேற்றேன். அதற்கான முக்கியத்துவம் குறைந்ததால், ஜல்லிக்கட்டில் ஆர்வம் அதிகரித்தது.
சமீபத்தில் என்னுடன் பிறந்த சகோதரர் அபினேஷ் என்பவர் இறந்தார். அவரது நினைவாக‘ அபினேஷ் நண்பர்கள் ஜல்லிக்கட்டு குழு ’ ஒன்றை ஏற்படுத்தி பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறோம். அலங்காநல்லூரில் இக்குழுவைச் சேர்ந்த 4 பேர் பங்கேற்றோம். ஆனாலும், நான் முதல் பரிசு வென்றேன்.
இளை எங்களது அஞ்சூர் நாடு பகுதி மட்டுமின்றி, சிவகங்கை மாவட்ட அளவில் பெருமையாக பேசுகின்றனர். மதுரையிலுள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்தாலும், குடும்பச் சூழலால் விடுமுறை நாட்களில் திருப்பூர் சென்று பனியன் நிறுவனத்தில் வேலை பார்ப்பேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன்.
பொதுவாக ஜல்லிக்கட்டில் எங்களை மாடுபிடி வீரர்கள் என அழைத்தாலும், பொதுவெளியில் மாடு பிடிக்கிறவர்கள் என்றே பேசுகின்றனர். சிறந்த மாடு பிடி வீரர்களை அங்கீகரித்து தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். இந்த முறை எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT