Published : 16 Jan 2023 08:53 PM
Last Updated : 16 Jan 2023 08:53 PM
46-வது சென்னைப் புத்தகக் காட்சி கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தமிழக சிறைத் துறைக்கு அரங்கு எண் 286 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கில், தமிழகத்தில் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக புத்தகங்கள் சேகரிப்படுகிறது. வழக்கமாக புத்தகங்களை வாங்க புத்தகக் காட்சிக்கு வருகை தந்த மக்கள் இம்முறை, சிறைவாசிகளுக்காக புத்தகங்களை தானமாக வழங்கி வருகின்றனர்.
இந்த அரங்கில் 4 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புத்தகங்கள் கொடுப்பவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அதோடு, எத்தனைப் புத்தகங்களை அவர்கள் கொடுக்கின்றனர் என்ற விவரங்களும் அந்த பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், தினந்தோறும் சேகரிக்கப்படும் புத்தகங்கள் அட்டைப்பெட்டிகளில் கட்டி, சிறைத் துறை அலுவலகத்திற்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இந்த அரங்கில் சேகரிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 2,000 புத்தகங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சிறைத் துறை டிஐஜி முருகேசன் கூறியது: "சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை சார்பில் அரங்கு எண் 286 உள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருப்பதற்கான நோக்கம், தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கான நூலகங்கள் இருக்கின்றன. அங்கிருக்கக்கூடிய பழைய புத்தகங்களாக இருக்கின்ற காரணத்தால், அந்தப் புத்தகங்களைத் திரும்ப திரும்ப எடுத்து படிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதேபோல், புத்தகங்களும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. இந்த இரண்டு குறைகளைக் களைய வேண்டும் என்பதற்காகவே, பபாசி நடத்துகின்ற இந்தப் புத்தகக் காட்சியில் எங்களுக்கு அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்ததற்கு, பொதுமக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அரங்கு குறித்த செய்தியும் பெரிய அளவில் பரவியிருக்கிறது. இதனால், பொதுமக்கள், புத்தக பதிப்பாளர்கள், அரங்க உரிமையாளர்கள் என அனைவருமே ஆவலாக வந்து புத்தகங்களைக் கொடுக்கின்றனர்.
பொதுமக்கள் ஏற்கெனவே தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களைக் கொடுக்கின்றனர். பலர் புத்தகக் காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கித் தருகின்றனர். பழைய புத்தகங்களைவிட புதிய புத்தகங்கள் நிறைய கொடுத்து வருகின்றனர். இதுவரை (ஜன.15) ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 10,000-க்கும் அதிகமான புத்தகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால், எங்களுடைய இலக்கு இந்த புத்தகக் காட்சியில் ஒரு லட்சம் புத்தகங்களைப் பெற வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் 142 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் மத்திய சிறைச்சாலைகள் 9, பெண்கள் தனிச்சிறைகள் 5 மற்றும் மாவட்டச் சிறைகள் 14 மற்றவை எல்லாம் கிளைச் சிறைகள். இந்த புத்தகக் காட்சி மூலம் திரட்டப்படும் புத்தகங்கள் அனைத்தையும், இந்த அனைத்துச் சிறைகளுக்கும் பகிர்ந்து கொடுக்க இருக்கிறோம்.
பொதுவாகவே, சிறைச் சாலைகளைப் பொறுத்தவரை புத்தகங்கள்தான் சிறைவாசிகளுக்கு உறுதுணை. சிறைவாசிகளின் நண்பன், தோழன் என அனைத்துமே புத்தகங்கள்தான். எந்தப் புத்தகங்கள் கிடைத்தாலும் அதனை சிறைவாசிகள் நன்றாக படிப்பார்கள். சிறையில் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். சிறைக்கம்பிகளின் வழியே கிடைக்கும் வெளிச்சத்தைக் கொண்டு நடுஇரவு வரை புத்தகங்கள் வாசிக்கும் சிறைவாசிகள் உள்ளனர்.
புத்தகங்கள் வாசிக்கும்போது, சிறைவாசிகளுக்கு யாரோ ஒருவர் உடனிருப்பது போன்ற உணர்வைப் பெறுகின்றனர். இந்த வாசிப்புப் பழக்கத்தின் மூலம் சிறைவாசிகள் தங்களது கவலைகளை மறந்து, மன இறுக்கத்தில் இருந்து விலகி நல்லதொரு சீர்திருத்தம் பெற்றும் மிகச்சிறந்த குடிமக்களாக மாற இந்த புத்தகங்கள் உறுதுணையாக இருக்கும். அவர்களை நல்ல மனிதராக மாற்ற உதவும் புத்தகங்களை நாங்கள் இந்த புத்தக்காட்சி மூலம் பெற்று அவர்களுக்கு கொடுக்க இருக்கிறோம்.
இந்திய அளவில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று கருதுகிறேன். பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்கள், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாக்யராஜ், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.
சிறைவாசிகளுக்கு இலவசமாக புத்தகங்களைக் கொடுத்து, அவர்களை மனிதநேயமிக்க மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் ஆர்வத்துடன் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். கணநேர கோபத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் இருந்து சிறைவாசிகளை மீட்டு சாதாரண மனிதர்களைப் போல சிறந்த குடிமகனாக அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் சிறைத் துறையின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நிச்சயம் எங்களது இலக்கான ஒரு லட்சம் புத்தகத்தை அடைவோம்" என்று அவர் கூறினார்.
புத்தகங்களை தானமாக வழங்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஹசன் என்பவர் கூறியது: "சென்னை 46-வது புத்தகக்காட்சியில் தமிழக சிறைத் துறை சார்பில் அரங்கு எண் 286 அமைந்துள்ளது. சிறைகளில் உள்ள நூலகங்களில் உள்ள பழைய புத்தகங்களுக்கு மாற்றாக புதிய புத்தகங்களைக் கொடுப்பதற்காக சிறைத் துறை சார்பாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். நானும் எனது நண்பரும் எங்களால் முடிந்த புத்தகங்களை சிறைவாசிகளின் நலனுக்காக வாங்கிக் கொடுத்துள்ளோம். இன்னும் பலர் இந்த அரங்கிற்கு வந்து நிறைய புத்தகங்களை வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
குடும்பத் தலைவி ஒருவர் கூறியது: "சென்னை புத்தகக் காட்சியில் சிறைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறந்த முயற்சி இது. நானும் எனது சார்பில், புத்தகங்களை வழங்கினேன். சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்த இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும். இந்த முயற்சி சிறைத் துறை சார்பில், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறந்த விழிப்புணர்வாக நான் பார்க்கிறேன்" என்று அவர் கூறினார்.
இரும்புக் கம்பிகளுக்குள் அடைப்பட்டு செய்த தவறுக்கான தண்டனைகளை அனுபவித்து வரும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைவாசிகளின் நலன்கருதி, செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற திட்டங்கள், சிறைவாசிகள் திருந்தி வாழ வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற புதுமையான முயற்சிகள் புத்தகக் காட்சிகளோடு முடிந்துவிடாமல், தொடர வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT