Published : 03 Jan 2023 04:03 AM
Last Updated : 03 Jan 2023 04:03 AM
கோவை: கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ‘யங் இந்தியன்ஸ்’ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் ‘கோவை விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்வு நாளை (ஜன.4) தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக லேசர் ஒளிக்காட்சி சுங்கம் வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் நேற்று முதல் மாலை நேரத்தில் காட்சிப் படுத்தப் படுகிறது. வரும் 8-ம் தேதி வரை லேசர் ஒளிக்காட்சி நிகழ்வு நடக்கிறது.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நாளை காலை 9 மணி முதல் நடக்கிறது. மேலும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஒருமை பயணம் என்ற பெயரில், பல்வேறு மதம் சார்ந்த இடங்களுக்கு செல்லும் நிகழ்வு, இறுதியாக போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
5-ம் தேதி ரேஸ்கோர்ஸில் இருந்து சரவணம்பட்டி வரை பழங்கால கார்களின் அணிவகுப்பு ஊர்வலம், அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை உணவு, இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் சுங்கம் வாலாங்குளம் கரையில் நடக்கிறது. 7-ம் தேதி ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் உள்ளூர் ஓவியர்களின் வரைபடக் கண்காட்சி, கலந்துரையாடல் நிகழ்வு ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடக்கிறது.
அன்று காலை 10 மணிக்கு கொடிசியா டி அரங்கில் செட்டிநாடு திருவிழா நிகழ்ச்சியும், சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் கண்காட்சியும் நடக்கிறது. 8ம் தேதி கோவை நேரு மைதானம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT