Published : 26 Dec 2022 04:17 AM
Last Updated : 26 Dec 2022 04:17 AM

பார்வையற்றவர்கள் பாதுகாப்பாக செல்ல ‘அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூ' - புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவன் அசத்தல்

அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவுடன் மாணவர் கவுசிகன்.

புதுச்சேரி: கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும்போது, அவர்களுக்கு ஏற்படும் தடைகளை கண்டறியவும், பாதுகாப்பாக செல்லவும் அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவை புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவன் உருவாக்கியுள்ளார்.

புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கவுசிகன். அதே ஊரைச் சேர்ந்த இவர், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அறிவியல் ஆசிரியை செந்தில் வடிவு வழிகாட்டுதலோடு பிரத்யேக அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூவை உருவாக்கியுள்ளார்.

இந்த சென்சார் ஷூவினை அவர் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த மண்டல அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தார். அதில் ஆறுதல் பரிசு பெற்றார். தொடர்ந்து டிசம்பரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் தனது படைப்பை வைத்தார். இதில் மாணவர் கவுசிகன் உருவாக்கிய அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூ நடுவர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசை அவர் தட்டிச் சென்றார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு வழங்கினர். மாநில அளவில் முதல் பரிசை வெற்ற நிலையில், மாணவர் கவுசிகனின் அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூ கேரளாவில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளது.

இதுதொடர்பாக மாணவர் கவுசிகன் கூறுகையில், ‘‘கண் பார்வையற்ற மாற்றத் திறனாளின் துயரத்தை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக இந்த ஷூவை உருவாக்கினேன். அல்ட்ரா சோனிக் சென்சார் கருவியை அடினோ போர்டுடன் இணைத்துள்ளேன். இந்த கருவி இயங்குவதற்காக பேட்டரியும் பொருத்தியுள்ளேன்.

மேலும், எச்சரிக்கை ஒலி எழுப்புவ தற்காக ஒரு பசரையும் இணைத்துள்ளேன். இந்த கருவியை காலனியின் முன் பகுதியில் பொருத்திக் கொண்டு கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லலாம். அவர்கள் நடந்து செல்லும்போது எதிரே ஒரு மீட்டர் தூரத்துக்கு முன்பே தடைகள் ஏதேனும் இருந்தால் அல்ட்ரா சோனிக் சென்சார் உதவியுடன் எச்சரிக்கை ஒலி எழும்பும். அதன் பிறகு பார்வையற்றவர்கள் எதிரேதடை இருப்பதை உணர்ந்து மாற்றுவழியில் பாதுகாப்பாக செல்ல முடியும்.

இக்கருவியுடன் ஆன் - ஆப் சுவிட்ச் ஒன்றையும் அமைத்துள்ளேன். வெளியே செல்லும் நேரங்களில் மட்டும் சுவிட்ச் ஆன் செய்துவிட்டு நடந்து செல்ல லாம். மற்ற நேரங்களில் சுவிட்ச் ஆப்செய்து வைத்துவிட வேண்டும். தற்போதுஇக்கருவியை மிகக்குறைந்த செலவில் தான் உருவாக்கியுள்ளேன். அடுத்தகட்டமாக தென்னிந்திய அளவி லான போட்டியில் பங்கேற்கும்போது, இக்கருவியை சோலார் பேனல் மூலம் இயங்கும் வகையில் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிக்கு செல்லும்போது எச்சரிக்கை ஒலி சரியாக கேட்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால் வைப்ரேட் சவுண்டு வரும் வகையிலும் இக்கருவியை மேம்படுத்த இருக்கிறேன். அதோடு படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் வகையில் டவுன்வேர்டு பேசிங் சென்சார் பொருத்தவும் இருக் கிறேன்.

இதன்மூலம் யாருடைய உதவியும் இன்றி கண் பார்வையற்றவர்கள் நடந்து செல்ல முடியும். என்னுடைய கருவி தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக என்னுடைய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்று தெரிவித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை, அறிவியல் ஆசிரியை செந்தில்வடிவு ஆகியோர் கூறும்போது, ‘‘பள்ளி மாணவர் கவுசிகனுக்கு சிறு ஐடியா மட்டுமே நாங்கள் கொடுத்தோம். அவர் அந்த ஐடியாவை கொண்டு இந்த ஷூவை உருவாக்கியுள்ளார். அவரது இந்த படைப்பு மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து, தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்தனர். அல்ட்ரா சோனிக் சென்சார் ஷூ கேரளாவில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x