Published : 25 Dec 2022 04:23 AM
Last Updated : 25 Dec 2022 04:23 AM
நாமக்கல்: திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் மாவு பூச்சி உள்ளிட்ட நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் கிடைக்கும் மரவள்ளி ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, என விஞ்ஞானி ரா.முத்துராஜ் பேசினார்.
நாமக்கல்லில் மத்திய அரசின் கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகள் தினவிழா நடைபெற்றது. திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி ரா.முத்துராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் மரவள்ளி, சீனி, சேப்பக்கிழங்கு ஆகிய கிழங்கு வகை பயிர்கள் சாகுபடி குறித்து ஆராய்ச்சிநடைபெற்று வருகிறது. இதுவரை19 மரவள்ளி பயிர் ரகங்களை புதிதாக கண்டுபிடித்து வெளியிட்டுள்ளோம்.
தற்போது மரவள்ளியில் மாவு பூச்சி உள்ளிட்ட நோய் தாக்குதல்களை பெருமளவில் கட்டுப்படுத்தி, அதிக மகசூல் கிடைக்கும் வகையில் ஸ்ரீ அத்துல்யா, ஸ்ரீரக் ஷா ஆகிய இரண்டு மரவள்ளி ரகங்களை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் தரமான விதைக் கரணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விதைகிராமம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரவள்ளி விதைக் கரணைகள் படிப்படியாக அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
இந்த புதிய ரகங்களின் மூலம் மரவள்ளியில் 30 முதல் 33 சதவீதம் அளவிற்கு மாவுச் சத்து கிடைக்கும். மாவு பூச்சி தாக்கம் வெகுவாக குறையும். ரசாயன மருந்துகள் எதுவும் அடிக்க தேவையில்லை. நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. ஏக்கருக்கு 15 டன் வரை மகசூல் பெறலாம். நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் இந்த புதிய ரகங்களை பிரபலப்படுத்தி வருகிறோம். தரமான விதைக் கரணைகளை தேர்வு செய்து மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.
முன்னதாக நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி மற்றும் பில்லிகல் மேடு ஆகிய பகுதிகளில் வேளாண்நிலங்களில் சாகுபடி செய்யப் பட்டுள்ள புதிய ஸ்ரீ அத்துல்யா மரவள்ளி ரகம் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்து விஞ்ஞானிகள் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் செ.அழகுதுரை வரவேற்றார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் தேன்மொழி, சங்கர், முத்துசாமி, பால்பாண்டி, சத்யா உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய ரகங்களின் மூலம் மரவள்ளியில்30 முதல் 33 சதவீதம் அளவிற்கு மாவுச் சத்து கிடைக்கும். மாவு பூச்சி தாக்கம் வெகுவாக குறையும். ரசாயன மருந்துகள் எதுவும் அடிக்க தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT