Published : 23 Dec 2022 04:17 AM
Last Updated : 23 Dec 2022 04:17 AM
தூத்துக்குடி: உலக அமைதி, கூட்டுக்குடும்பம் போன்ற கருத்துக்களை மையமாக வைத்து தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி ஓவிய ஆசிரியர் தனதுவீட்டில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் நி.இசிதோர் பர்னாந்து (58). இவர், தனதுவீட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஏசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருகிறார்.
மதநல்லிணக்கம், உலக சமதானம், இலங்கை தமிழர் பிரச்சினை,தேசிய ஒருமைப்பாடு, தீவிரவாதம்ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுனாமி பாதிப்பு, பண மதிப்புநீக்க நடவடிக்கை, கரோனா பாதிப்பு உள்ளிட்ட கருத்துகளை மையமாக வைத்து கடந்த 19 ஆண்டுகளாக குடில் அமைத்துள்ளார்.
தற்போது 20-வது ஆண்டாக இந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரினால் உருவாகியிருக்கும் உலக அமைதியின்மை நீங்கி உலக நாடுகளிடையே மீண்டும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்தும், ‘இரக்க உணர்வுடன் உலகை வழி நடத்துவோம்' என வலியுறுத்தியும் இசிதோர் பர்னாந்து கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார்.
மேலும் கூட்டுக்குடும்பம், முதியோர் மற்றும் பெற்றோரை அரவணைத்தல், வறியோருக்கு உதவி செய்தல், அன்னதானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை தவிர அவதார் பட கதாபாத்திரங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த கிறிஸ்துமஸ் குடிலை அந்த பகுதி மக்கள்,பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT