Published : 20 Dec 2022 04:27 AM
Last Updated : 20 Dec 2022 04:27 AM

ராணிப்பேட்டை மாவட்ட அளவில் கலை நன்மணி விருது பெற்று மணல் சிற்ப கலையில் அசத்தி வரும் ஓவிய ஆசிரியர்

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச மணற் சிற்ப போட்டியில் பங்கேற்று தமிழக பாரம்பரிய பொங்கல் பண்டிகை குறித்தும், உலக அமைதி குறித்து ஓவிய ஆசிரியர் சாமுவேல் வடிவமைத்த மணல் சிற்பங்கள்.

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சாஸ்திரி நகைரச் சேர்ந்த ஆர்.சாமுவேல் (58), தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர். இவர், மணல் சிற்ப கலையில் அசத்தி வருகிறார். இவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மணற் சிற்ப கலைஞரனான ‘சுதர்சன் பட்நாயக்கிடம்’ இதற்கான பயிற்சிகளை பெற்றவர்.

சமீபத்தில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச மணற் சிற்ப கலைஞர் களுக்கான போட்டியில் ஆர்.சாமுவேல், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி வரபிரசாத் என்பவருடன் சேர்ந்து, தமிழக பாரம்பரியமான பொங்கல் பண்டிகை மற்றும் வீரத்தின் அடையாளமான ஜல்லிகட்டு குறித்தும், உலக அமைதிக்காக தத்ரூப மான மணல் சிற்பத்தை வடிவமைத்தனர். இந்த மணல் சிற்பம் அங்கு வந்த உள்நாடு, வெளிநாடு உட்பட இரண்டரை லட்சம் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தன.

அந்த போட்டியில் அவர் முதல் பரிசும் பெற்று வெற்றி பெற்றார். கலைக்கான போட்டியாக மட்டுமின்றி மணல் சிற்பத்தின் மூலமாக சமூகத்தின் மீது அக்கறையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையிலும் இவரின் வடிவமைப்புகள் அமைந்துள்ளன. கரோனா காலத்தில் ராணிப் பேட்டை மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் மணல் சிற்பத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து ஓவிய ஆசிரியர் சாமுவேல் கூறும்போது, "சிறு வயது முதல் ஓவியத்தின் மீது தனி ஆர்வம் இருந்தது. பி.ஏ. ஆங்கில பட்டம் முடித்தேன். இருப்பினும், ஓவியக்கலை மீது இருந்த ஆர்வமே அதிகம் ஈர்த்தது. தற்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். மாணவர் களுக்கு புதுமையாக ஏதாவது சொல்லித் தர விரும்பினேன். அதற்காக, இணையதளத்தில் தேடலை தொடங்கினேன். அப்போது, தான் மணற் சிற்ப கலையும், அதில் சிறந்து விளங்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பற்றி தெரிந்துக்கொண்டேன்.

மணற் சிற்ப கலையை கற்க, அவரை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தேன். அவர் சில தேர்வுகளை வைத்து, பின்னர் என்னை ஒடிசாவுக்கு வரவழைத்து பயிற்சிகளை கொடுத்தார். அதன் பிறகு இக்கலையை மாணவர்கள் மட்டுமின்றி சமூக அக்கறையுடன் கரோனா காலத்திலும், மது, புகைக்கு எதிராகவும் பல்வேறு விழிப்புணர்வுகளை மணற் சிற்பங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறேன். நாட்டின் பிரபல மானவர்களான அப்துல் கலாம், மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பல தலைவர்களையும் மணற் சிற்பங்களாக வடிவமைத்துள்ளேன்.

மேலும், ஒடிசாவில் நடைபெற்ற மணற் சிற்ப ஓவியத்தில் 4 முறை பங்கேற்று உள்ளேன். இறுதியாக இந்த முறை முதல் பரிசையும் வென்று உள்ளேன். கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவில் இக்கலைக்காக ‘கலை நன்மணி விருதையும்’ வாங்கியுள்ளேன். இன்றைய இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் மணற் சிற்பக்கலையை கற்க ஆர்வமாக உள்ளனர். வெறும் கலையாக மட்டுமின்றி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இந்த கலை அமைந்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x