Published : 29 Nov 2022 05:50 PM
Last Updated : 29 Nov 2022 05:50 PM
மதுரை: கார்த்திகை தீபத்திருநாள் நெருங்கி வருவதை முன்னிட்டு மதுரை அருகே விளாச்சேரியில் தயாரிக்கப்படும் கார்த்திகை விளக்குகள் ரூ.5 முதல் 1500 வரை விற்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றம், தாலுகா விளாச்சேரி கிராமத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வண்ண வண்ண கார்த்திகை தீபம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இவ்வாண்டுக்கான கார்த்திகை திருவிழா டிசம்பர் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கார்த்திகை திருநாளுக்கான தீபங்கள் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. மதுரை மாவட்டம், திருப்பங்குன்றம் அருகிலுள்ள விளாச்சேரி பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கார்த்திகைக்கு விழாவுக்கு தேவையான விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் விளக்குகள், அலங்கார விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அகல் விளக்கு, கணபதி, லட்சுமி மகாலட்சுமி விளக்குகள், ஐந்து முக விளக்குகள், சுழல் விளக்கு மற்றும் கோயில்களில் ஏற்றப்படும் மிகப் பெரிய விளக்குகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, சங்கரன்கோவில் பகுதிகளில் கார்த்திகையொட்டி மலைகளில் ஏற்றப்படும் 100 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் இங்கு தயாரிக்கப்படுவதாக என உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விளக்குகள் தயாரிப்பு பணியிலுள்ள மகாலட்சுமி பிரியதர்ஷனி கூறுகையில், ''எப்போதும், கார்த்திகை சீசனில் விளாச்சேரி பகுதியில் தயாரிக்கும் அகல் உள்ளிட்ட விளக்குகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களிலும் நல்ல கிராக்கி இருக்கும். ரூ.5 முதல் ரூ.1500 வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டாகவே கரோனா பாதிப்புகளால் கார்த்திகை விளக்குகள் விற்பனை இன்றி மந்தமாக இருந்த நிலையில், இவ்வாண்டுக்கான விற்பனை அதிகரித்துள்ளது. மண் தட்டுப்பாடு காரணமாக ஒரு ரூபாய்க்கு விற்ற சிறிய அகல் விளக்குகள் ரூ.5-க்கு விற்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனாலும், உள்ளூர் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வெளியூர் வியாபாரிகள் விதவிதமான வண்ண அகல் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT