Last Updated : 14 Nov, 2022 06:21 AM

 

Published : 14 Nov 2022 06:21 AM
Last Updated : 14 Nov 2022 06:21 AM

குழந்தை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோர் | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

சென்னை: பரபரப்பான வாழ்வியல் சூழலுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொண்ட பெற்றோர், பிஞ்சுக் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது வளர்ப்பில் தவறிழைப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சிறுவர் எழுத்தாளர் விழியன் கூறியதாவது: பெற்றோர் தங்களுக்கு கிடைக்காதது எல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கருதி, அவர்களது சுதந்திரத்தை பறிக்கின்றனர். தொடர்ந்து ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபடுத்தி, அவர்களது நேரத்தை திருடுகின்றனர். குழந்தைகள் ‘சும்மா’ இருக்கும்போதுதான், பரந்த சிந்தனையும், அதை செயல்படுத்தும் திறனும் பிறக்கும். இதுதவிர, ஏதேனும் ஒரு கலையை குழந்தைகள் கற்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். மேலும், குழந்தைகளைசாதனையாளராக மாற்ற பல பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்கான அதிக பயிற்சிகளால் குழந்தைகள் அழுத்தத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

மேலும், குழந்தை விரும்பாதஒன்றைத் திணிக்க முயற்சிக்கின்றனர். அதேபோல, குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது, அவர்களுக்குள் தானாக ஓர் உலகம்உருவாவதை தடுக்கும். குழந்தைகளுக்கு கட்டுப்பாடு அவசியம்தான். ஆனால், அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதாக கருதி, வீணாக அழுத்தம் தருகின்றனர். இதுதவிர, குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. உரையாடல்கள் இருந்தாலே, பெரும்பாலான சிக்கல்களைத் தீர்த்துவிடலாம். மேலும், உரையாடலுக்கு பெரிய நோக்கங்களும் அவசியமில்லை. குழந்தைகளின் மனநிலை, அவர்களது சிக்கல்களை அறிந்துகொள்ளவும், பெற்றோரின் கவலைகளை உணர வைக்கவும் உரையாடல்கள் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தை மருத்துவர் பிரியா வெங்கடேஷ் கூறும்போது, ‘‘செல்போன், டிவி, கணினி உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாடு, குழந்தைகளின் இயல்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதிக நேரம் மின் சாதனங்களைப் பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும். நகரங்களில் தனி குடும்பவாழ்வியல் முறை இருப்பதால், போதிய நேரமின்மையை பெற்றோர் காரணமாக முன்வைக்கின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வியல் சூழலை உருவாக்கத் தவறி விடுவதை அவர்கள் உணர்வதில்லை. பெற்றோர் குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது, செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாடின்றி, குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்’’என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x