Published : 22 Oct 2022 02:36 PM
Last Updated : 22 Oct 2022 02:36 PM
பெங்களூரு: 1949-ம் ஆண்டில் வெளியான 'நல்லதம்பி' படத்தில் 'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' என்ற தொலைநோக்கு சிந்தனை மிகுந்த பாடல் இடம் பெற்றிருக்கும். உடுமலை நாராயணகவி எழுதிய அந்தப் பாடலில், “பட்டனை தட்டிவிட்டா ரெண்டு தட்டிலே..இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்” என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கும். இந்த வரிகள் 70 ஆண்டுகள் கடந்து நிஜமாகி இருக்கிறது!
பெங்களூருவில் 24 மணி நேரமும் சுடச்சுட இட்லி பரிமாறும் வகையில் தானியங்கி இயந்திரம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ரோபோட்டிக் இட்லி இயந்திரம் 10 நிமிடங்களில் வடை மற்றும் இரண்டு வகை சட்னியுடன் இட்லியை பரிமாறுகிறது. இதன் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஃபிரஷ் ஹாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இட்லி தானியங்கி இயந்திரத்தை உருவாக்கி உள்ளது. காபி மெஷினைப் போலவே ஒரு சில நிமிடங்களில் இட்லி, சட்னி, வடை ஆகியவற்றை இந்த இயந்திரம் சுடச்சுட பரிமாறுகிறது.
இதுகுறித்து ஃப்ரெஷ் ஹாட் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஷரன் ஹிரேமத் கூறியதாவது: இந்தியாவில் அனைவரும் விரும்பி சாப்பிடும், 100 சதவீதம் ஆரோக்கியமான உணவு என்றால் அது இட்லி தான். குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இட்லி தேவைப்படுகிறது. எனக்கும் இட்லி மிகவும் விருப்பமான உணவு.
2006-ம் ஆண்டில் ஒருநாள் இரவு எனது மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர் இட்லி சாப்பிடுமாறு அறிவுறுத்தினார். ஆனால் வீட்டில் இட்லி மாவு காலியாகி விட்டதால் இரவு 10 மணிக்கு இட்லி கடையைத் தேடி அலைந்தேன். எங்கும் இட்லி கிடைக்கவில்லை. இதனால் பணத்தை எடுக்க உதவும் ஏடிஎம் இயந்திரத்தைப் போல 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், ஒரு இட்லி ஏடிஎம் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். ஒரு தொழில்முனைவோராக எனது யோசனையை, என் நண்பர் சுரேஷ் சந்திரசேகரனிடம் கூறினேன்.
நாங்கள் இருவரும் பல நாட்கள் பேசி, ஆராய்ந்து உருவாக்கியது தான் ஃபிரஷ் ஹாட் ரோபோட்டிக்ஸ் இட்லி இயந்திரம். இதை உருவாக்கியதில் பெரும் பங்களிப்பு செய்தவர் சுரேஷ் சந்திரசேகரன். மெக்கானிக்கல் பொறியாளரான அவர் இந்த ரோபோட்டிக்ஸ் இட்லி இயந்திரத்தை வடிவமைத்து, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வருகிறார். 2020-ம் ஆண்டே தயாராகிவிட்டாலும் இந்த இயந்திரத்தை அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்றவகையில், சிறு சிறு குறைகளையும் களைந்து நேர்த்தியாக மாற்றி வருகிறார். இவ்வாறு ஷரன் ஹிரேமத் கூறினார்.
இட்லி இயந்திரத்தை வடிவமைத்த சுரேஷ் சந்திரசேகரன் கூறியதாவது: ஷரன் ஹிரேமத்தின் இட்லி ஏடிஎம் யோசனை பிடித்ததால், மும்பையில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு பெங்களூரு வந்தேன். செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோட்டிக்ஸ் இட்லி இயந்திரத்தை வடிவமைக்க இறங்கினேன். அந்த துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் அணியை உருவாக்கி, 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்த ரோபோட்டிக்ஸ் இட்லி இயந்திரத்தை உருவாக்கினோம்.
இதில் அரைத்த இட்லி மாவை ஒரு கண்டெயினரில் ஊற்றி வைத்துவிட்டால் அதுவே 18 தட்டுகளில் 4 இட்லிகள் வீதம் 72 இட்லிகளை தயாரித்துவிடும். இதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். இந்த இட்லிகள் சுத்தமாக பேக் செய்யப்பட்டு, டெலிவரி செய்யப்படும் இடத்தில் சூடாக காத்திருக்கும். கூகுள் பே, ஃபோன் பே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பணம் செலுத்தி, இயந்திரத்தில் கியூஆர் கோடை காட்டினால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வருவதுபோல 2 இட்லி, 2 வகையான சட்னி மற்றும் ஒரு வடை வெளியே வந்துவிடும். வடை, சட்னி ஆகியவை வெளியே தயாரிக்கப்பட்டு உள்ளே வைக்கப்படும். இந்த இயந்திரத்தில் பொடி இட்லி, சாக்லேட் இட்லி, ரவை இட்லி, புதினா இட்லி போன்ற வகைவகையான இட்லிகளையும் தயாரிக்க முடியும். இதன் தயாரிப்பு, சுவை ஆகியவற்றை பரிசோதிப்பதற்காக 4 முறை இட்லி பார்ட்டி நடத்தினோம்.
அதில் பங்கேற்ற நண்பர்கள் இட்லியை சுவைத்துவிட்டு சொன்ன நிறைகுறைகளை கேட்டு, சில மாற்றங்களை செய்துள்ளோம். தற்போதைக்கு பெங்களூருவில் 2 இடங்களில் இட்லி ஏடிஎம் அமைத்து பரிசோதனை ஓட்டத்தை சிறு அளவில் தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு உகாதி தினத்தில் (ஏப்ரல் 2-ம் தேதி) இட்லி இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம். கடந்த ஆண்டு இதுபற்றி நாங்கள் வெளியிட்ட ஒரு டீஸர் இணையத்தில் வைரலாகி, இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர், இந்த இயந்திரம் தங்களுக்கு வேண்டும் என கேட்டுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் பெங்களூரு வந்து எங்களது முயற்சியை விசாரித்துச் சென்றுள்ளனர்.
இந்தியாவில் முதல்முறையாக தானியங்கி முறையில் இட்லி தயாரிக்கும் இந்த இயந்திரம் பற்றி மஹேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா அண்மையில் ட்விட்டர் மூலம் விசாரித்தார். இந்த இட்லியின் சுவை எப்படி இருக்கும் என தான் சுவைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். பெங்களூரு தவிர தென்னிந்தியா முழுவதும் இட்லி ஏடிஎம் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். இட்லியைத் தொடந்து தோசை, கலவை சாதம் போன்றவற்றுக்கும் தானியங்கி இயந்திரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சுரேஷ் சந்திரசேகரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT