Published : 15 Oct 2022 12:57 PM
Last Updated : 15 Oct 2022 12:57 PM

‘உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு...’ - அப்துல் கலாமின் கவனத்துக்குரிய 10 மேற்கோள்கள்

அப்துல் கலாம் | கோப்புப் படம்

இந்தியாவின் மறக்க முடியாத குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மாணவர்களின் தலைவராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். வறுமையான சூழலிலும் படிப்பை கைவிடாது பிடித்துக்கொண்ட அப்துல் கலாம் விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் படித்தார்.

1960-ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சியை தொடங்கிய அப்துல் கலாமின் பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான இஸ்ரோ வரை தொடர்ந்தது. ரோகிணி 1 ஏவுகணை, பொக்ரான் சோதனை போன்றவற்றை முன்னின்று நடத்தி நாட்டிற்கு பெருமை சேர்ந்தார். 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட அப்துல் கலாம் மக்களின் கொண்டாட்டத்துக்குரிய குடியரசுத் தலைவராக பணியாற்றினார். அத்தகைய ஆளுமையின் சிறந்த 10 மேற்கோள்கள்...

  • கனவு காணுங்கள்... ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.
  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை.
  • நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
  • உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால், கையே இல்லாதவனுக்குகூட எதிர்காலம் உண்டு.
  • வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம்... நழுவ விடாதீர்கள். ஒரு கடமை... நிறைவேற்றுங்கள். ஒரு லட்சியம்... சாதியுங்கள். ஒரு சோகம்... தாங்கிக் கொள்ளுங்கள். ஒரு போராட்டம்... வென்று காட்டுங்கள். ஒரு பயணம்... நடத்தி முடியுங்கள்.
  • கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்.
  • நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.
  • வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.
  • ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை. பல முறை வந்தால் அது லட்சியம்.

அக்டோபர் 15 - அப்துல் கலாம் பிறந்த தினம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x