Published : 10 Oct 2022 04:39 PM
Last Updated : 10 Oct 2022 04:39 PM

திருமணமாகி 5 வருடங்கள் நிறைவு; வணிக நோக்கம் கூடாது... - வாடகைத்தாய் சட்ட விதிகள் சொல்வது என்ன?

தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அந்தப் பதிவில், "நயனும், நானும் அம்மா - அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது பிரார்த்தனைகள், முன்னோரின் ஆசிர்வாதங்கள், நன்மைகள் எல்லாம் சேர்ந்து இரு குழந்தைகள் வடிவில் எங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களுடைய உயிர் மற்றும் உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களும் தேவை" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தைகளின் பாதங்களில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முத்தமிடும் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். இதை விக்னேஷ் சிவன் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்ததுடன், வாழ்த்தும் தெரிவித்து வருந்தனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணித்திடம் கேட்டபோது, “விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும்” தெரிவித்தார்.

இந்தியாவில் ‘வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021’ கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25 முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

  • ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒருமுறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.
  • குழந்தை வேண்டுபவர்களுக்கும், வாடகைத்தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.இந்த சான்றிதழை, மாவட்ட சுகாதார அதிகாரிகள் வழங்க வேண்டும்.
  • வாடகைத்தாய் கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என 16 மாத கால இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
  • வாடகைத்தாயாக உள்ள பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட தம்பதிகளின் நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.
  • வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.
  • தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவரின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • தம்பதி இந்தியராகவும், திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை இருக்கக் கூடாது.
  • தத்துக் குழந்தையோ, வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது.
  • தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • திருமணமாகாமல் சேர்ந்து வசிப்பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், தன்பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கெனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் ஆகியோர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை
  • ஒரு பெண் பணத்துக்காகவே வாடகைத்தாய் ஆக முடியாது; வணிகரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x