Published : 04 Oct 2022 04:45 AM
Last Updated : 04 Oct 2022 04:45 AM
உதகை என்றால் சுற்றுலாவுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு நினைவுக்கு வருவது வர்க்கி. சுற்றுலா முடிந்து வீடு திரும்புவோர், வர்க்கி வாங்கி செல்ல மறப்பதில்லை.
உதகை பூங்காக்களுக்கு மட்டுமின்றி ‘ஊட்டி வர்க்கி’க்கும் பெயர் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாலை நேரத்தில் தேநீருடன் உட்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் வர்க்கி.
மைதா மாவு, டால்டா, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுவது வர்க்கி. இந்த கலவையை சிறு, சிறு துண்டுகளாக வைத்து, அடுமனையில் வேக வைத்து எடுத்தால், சூடான, சுவையான வர்க்கி தயார். சிறிய வடிவம், சதுரம், மசாலா மற்றும் சர்க்கரை சாதா வர்க்கி என பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
இந்த வர்க்கிகள் மற்ற மாவட்டங்களில் தயாரிக்கப்பட்டாலும், நீலகிரி மாவட்டத்துக்கென தனி மணம், சுவை உள்ளதால்தான் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வர்க்கிக்கான அபரிமித வரவேற்பால், நாளொன்றுக்கு சுமார் 10 டன் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள், தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக்க டைகளில் விற்கப்படுகின்றன.
புவிசார் குறியீடு பெற முயற்சி: இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமே வர்க்கி எனவும், இதற்காக புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் உற்பத்தியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
புவிசார் குறியீடு கிடைக்கும்பட்சத்தில், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமே ‘ஊட்டி வர்க்கி’ என அழைக்கப்படும் வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரமும் மேம்படுவதுடன், தொன்மையான இத்தொழிலும் பாதுகாக்கப்படும். இதுதொடர்பாக வர்க்கி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி எம்.முகமது பாரூக் கூறும்போது,
"நீலகிரியில் 100 முதல் 150 வர்க்கி கிடங்குகள் உள்ளன. சுமார் 10 முதல் 15 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஊட்டி வர்க்கி என்ற பெயரில், சமவெளிப் பகுதிகளில் விற்கப்படும் பதார்த்தம் போலியானது. எனவே, புவிசார் குறியீடு பெற முயற்சித்து வருகிறோம்" என்றார்.
குறைந்த முதலீடு, அதிக லாபம்: இந்த தொழிலை நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட சிலரே செய்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
தற்போது ஒரு கிலோ வர்க்கி ரூ.180 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உற்பத்தி செலவு ரூ.80 வரை மட்டுமே ஆகும். இத்தொழிலை தொடங்க சுமார் 10-க்கு 15 சதுர மீட்டர் இடம் இருந்தால் போதும்.
மாவு பிசைவதற்காக ஒரு மேஜையும், வர்க்கியை சரியான பதத்தில் வேக வைத்து எடுக்க அடுப்பும் தேவை. மூலப்பொருட்களாக மைதா மாவு, டால்டா, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை இருந்தால் போதும்.
ஏற்கெனவே வர்க்கி உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை வைத்து, இந்த தொழிலை தொடங்கலாம். இதற்கு மூலதனமாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருந்தால் போதும்.
நாளொன்றுக்கு 150 கிலோ முதல் 300 கிலோ வரை தயாரிக்க முடியும் என இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT