Published : 01 Oct 2022 02:01 PM
Last Updated : 01 Oct 2022 02:01 PM

கொல்கத்தாவில் ‘வாடிகன்’ - புனித பீட்டர்ஸ் பேராலய வடிவில் வியத்தகு துர்கா பூஜைப் பந்தல்

கொல்கத்தாவில் வாடிகனின் புனித பீட்டர்ஸ் பசிலிகா போல அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல்

கொல்கத்தா: கொல்கத்தா நகரில் அமைந்துள்ள விளையாட்டு கிளப் ஒன்று வாடிகனின் புனித பீட்டர்ஸ் பேராலாயம் போல அமைத்துள்ள துர்கா பூஜை பந்தல் அனைவரின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜைக்காக பல்வேறு கருப்பொருளில் பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் லேக் டவுண் அருகில் அமைந்துள்ள "ஸ்ரீபுமி ஸ்போர்டிங் கிளப்" இந்தாண்டு அமைத்துள்ள துர்கா பூஜை பந்தல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விழிவிரிய வைக்கிறது.

அப்படி என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? அங்குள்ள "ஸ்ரீபுமி ஸ்போர்டிங் கிளப்" வாடிகான் நகரினை கொல்கத்தா நகருக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்த கிளப் இந்தாண்டு அமைத்துள்ள துர்கா பூஜை பந்தலை வாடிகானில் உள்ள 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித பீட்டர்ஸ் பேராலயம் போல வடிவமைத்துள்ளது. இதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் திட்டமிட்டு உழைத்து, மறுமலர்ச்சி காலத்தின் கட்டிட கலையின் சிலைகள் மற்றும் ஓவியங்களை அப்படியே மறுஉருவாக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மவுலாலி பகுதியில் உள்ள புனித தெரசா ஆலையத்தின் பாதிரியார் நவீன் டோரோ கூறுகையில், "நான் சமீபத்தில் அந்தப் பந்தலுக்குச் சென்றிருந்தேன். பந்தல் அப்படியே வாடிகன் பீட்டர்ஸ் பசிலிக்காவை ஒத்திருந்தது. மிகச் சிறப்பாக வடிவமைத்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது. இதன் மூலம் பூஜை ஏற்பாட்டாளர்கள் பிற மதத்தின் மீதுள்ள அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளனர்" என்றார்.

"மேற்கு வங்கம் கற்பனை வளம், கலைநயம் மிக்க பகுதி. நான் அந்தப் பந்தலின் கலை உருவாக்கம், வேலைப்பாடுகளைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டேன். அது புனித பீட்டர்ஸ் பசிலிக்காவைப் போலவே உள்ளது. இது நிச்சயம் ஒரு கலையம்சம் தான்" என்றார் கொல்கத்தா ப்ராவின்சியின் டான் பாஸ்கோ சபையின் பாதிரியார்

பூஜா பந்தலுக்கு வந்து பார்வையிட்ட ஹூக்லி மாவட்டத்தின் கத்தோலிக்கப் பள்ளியின் ஆசிரியையான பிலோமினா தாமஸ் கூறுகையில், “அனைத்து விதமான நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஒரு சூழ்நிலையில் தான் நான் வளர்ந்தேன். நானும் அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து மதமும் ஒன்றுதான் என்ற செய்தியைதான் இந்த பந்தலை உருவாக்கியவர்களும் தெரிவித்துள்ளனர்" என்றார்.

பீட்டர்ஸ் பசிலிகாவின் பிரதியான இந்த துர்கா பூஜை பந்தல் 70 கலைஞர்களால், 75 நாட்கள் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவின் வடக்குப் பகுதியான பரானாகரில் இருந்து வந்த ஒரு கிறிஸ்தவர் பீட்டர்ஸ் பசிலிகா பந்தலின் உள்ளே துர்கை சிலை இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்" என்றார் விளையாட்டு கிளப்பின் கலைஞரான ரோமியோ ஹசாரா.

இந்த புனித பீட்டர்ஸ் பசிலிகா துர்கா பூஜை பந்தல் கொல்கத்தாவின் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனைப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தினமும் லேக் டவுண் பகுதிக்கு குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த ஸ்ரீபுமி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பூஜை பந்தலுக்கான தலைமை மேற்கு வங்கத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைத் துறை அமைச்சர் சுஜித் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிளப்பின் பூஜை பந்தல் குழு கடந்த 2021ம் ஆண்டு துர்கா பூஜைக்காக துபாயில் உள்ள புர்ஜ் கலிஃப் கட்டிடத்தை போல பந்தலை உருவாக்கி இருந்தது. விஐபி பகுதியில் பந்தலை பார்க்க வந்தவர்களால் உருவான போக்குவரத்து நெரிசலால் அந்தாண்டு அஷ்டமி தினத்திற்கு பின்னர் மூடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x