Published : 24 Sep 2022 04:24 AM
Last Updated : 24 Sep 2022 04:24 AM
சென்னை: செம்மொழி அகப்பொருள் ஆராய்ச்சிக் களஞ்சியத்தை உருவாக்கிய, தொடர் தமிழ்ச் சொற்பொழிவாளர் சிலம்பொலி சு.செல்லப்பனின் 94-வது ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் பிறந்த செல்லப்பன், திருச்சி மாவட்டம் சத்திரத்தில் தங்கி, தன் ஊரின் முதல் பட்டதாரி என்ற சாதனையை அடைந்தார். ஆசிரியர், தலைமை ஆசிரியர், சேலம் மாவட்டக் கல்வி அலுவலர், சீரணி இதழாசிரியர் என உயர்ந்த இவர், மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்களை உருவாக்கப் பாடுபட்டார்.
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகி, பதவி உயர்வுபெற்று இயக்குநரானார். அதன் பின்னர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர், உலகத் தமிழாராய்சி நிறுவன இயக்குநர், தமிழ்ப் புலவர் குழுத் தலைவர், தமிழ்ச் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர், செம்மொழி எண் பேராயக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய செல்லப்பன், 20-க்கும் மேற்பட்ட தொடர் தமிழ்ச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். சொற்பொழிவுகளுக்கு இறுதிவரை பணம் ஏதும் வாங்காத பண்பாளர் செல்லப்பன்.
அகப்பொருள் ஆராய்ச்சி களஞ்சியம்
சிலப்பதிகார அறக்கட்டளையைத் தொடங்கி, விருதும், பணப் பரிசும் வழங்கி வந்தார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு ‘இளங்கோ’ விருதும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கியவர். செம்மொழி அகப்பொருள் ஆராய்ச்சிக் களஞ்சியத்தை தனது சொந்த பணம் ரூ.15 லட்சத்தை செலவழித்து, 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் உருவாக்கியவர் சு.செல்லப்பன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT